இலங்கையில் தீவிரவாத வெறியாட்டம் மீண்டும் தலை தூக்கியிருப்பது வேதனை அளிக்கிறது - Sri Lanka Muslim

இலங்கையில் தீவிரவாத வெறியாட்டம் மீண்டும் தலை தூக்கியிருப்பது வேதனை அளிக்கிறது

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

இலங்கைச் சீமையில் தீவிரவாத வெறியாட்டம் மீண்டும் தலை தூக்கியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் புனித தினம் அனுசரிக்கும் நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய கோரக் கொடுமை நிகழ்த்திருக்கிறது.இதோடு உணவு விடுதிளிலும் இந்த கோரத் தாண்டவம் நடத்தப்பட்டு முன்னூறுக்கும் மேலான அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகியுள்ளது. பன்னூற்றுக் கணக்கில் காயமடைந்து கவலைக்கிடமாக இருக்கிறார்கள் என்னும் அதிர்ச்சித் தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இலங்கையில் நடத்தப்பட்டுள்ள இந்தக் கோரா தாக்குதல் மனித இனத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள யுத்தமே ஆகும். இந்த பயங்கரவாதத்தை விளைவித்த கொடியவர்கள் யாராக இருப்பினும் மானிட சமுதாயத்தின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகியுள்ளனர் என்பதோடு தர்மத்தின் முன்னும் சட்டத்தின் முன்பும் நிறுத்தப்பட்டு அதிபட்ச தண்டனையைப் பெற வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

இந்த அநியாய அட்டூழியத்தை அரங்கேற்றியவர்கள் அரக்கர்களா? வெறியர்களா? சமூகத்தின் விரோதிகளா? தேசத்தின் துரோகிகளா? என்று ஆய்வு நடத்துவதைக் கைவிட்டு மானிட இனத்தின் வைரிகள் என்னும் முத்திரை குத்தப்பட வேண்டியவர்கள்ஆவர், தயை தாட்சண்யம், ஈவு, இரக்கம் எல்லாவற்றையும் ஓரங்கட்டி ஒதுக்கி விட்டு, இந்தச் கொடுமைக்காரர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கும் சாதனையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த அநியாய பயங்கரவாதத்தின் அடி முடி அனைத்தையும் கிள்ளி ஏறியும் முயற்சியில் உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்பதையும் இங்கே நினைவுறுத்துவது பொருத்தமானதே.

கோரா தாண்டவத்தில் கொலையுண்டோரின் குடும்பங்களுக்கு இறைவன் தாங்கும் சக்தியை தரவேண்டும் என பிரார்த்திக்கிறோம் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team