இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு உலக முஸ்லிம் லீக் கண்டனம்!!! - Sri Lanka Muslim

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு உலக முஸ்லிம் லீக் கண்டனம்!!!

Contributors
author image

M.Y.அமீர்

இலங்கை ஜனநாயக குடியரசின் சில தேவாலயங்கள் மற்றும் உல்லாச ஹோட்டேல்களில் கடந்த “உயிர்த்த ஞாயிறு” (ஏப்ரல் 20, 2019) அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களால் 350க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு 500க்கும் அதிகமானோர் காயமடைந்துமுள்ளனர். இக்கொடிய பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக உலக முஸ்லிம் லீக் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

உலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளரும் முஸ்லிம் அறிஞர்களின் சர்வதேச அமைப்பின் தலைவருமான கலாநிதி ஷெய்க் முகம்மது பின் அப்துல்கரீம் அலிஸா, “ஒருவர் தவிர்த்து அனைவருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடிய பயங்கரவாத சிந்தனையால் பாதிப்பிற்றுள்ள இவர்களது மனோநிலையை இது பிரதிபலிப்பதாக உள்ளது” என்று மக்கா நகரில் இருந்து வெளியிட்டுள்ள தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொடூரமான செயல்களுக்கு இஸ்லாத்தில் எவ்வித இடமும் கிடையாது. இந்த பயங்கரவாதம் நியூஸ்லாந்தில் பள்ளிவாசல்களைத் தாக்கி அவலத்தை ஏற்படுத்தி நீண்டகாலம் செல்லவில்லை, அதற்குள் இன்று இலங்கையில் சில தேவாலயங்களில் தாக்குதல் நடத்தி அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்செயலின் கொடூரம் மனிதாபிமான உணர்வை ஆட்டம் காணச் செய்துள்ளதோடு, ஆபத்துக்களின் அளவை எச்சரிக்கும் சமிக்கைகளை எமக்குத் தருவதாக அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறைக் குரல்களால் தூண்டப்படுகின்ற, இதுபோன்ற பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் உறுதியான, தீர்க்கமான மற்றும் ஒன்றுபட்ட செயற்பாட்டுக்கான அழைப்பாக இது உள்ளது.

பல்வேறு கோட்பாடுகளுடன் பயங்கரவாத பிரச்சாரங்களை மேற்கொள்வது அவர்களது முக்கிய நோக்கம் என்பதோடு நாகரிக கோட்ப்பாடுகளின் மோதல்களின் தொடர்ச்சியான பதற்றத்தை வைத்து தமது வெளிப்படையான இலக்கை அடைவதற்கு நியாயம் கற்பிக்கின்றனர். தீய நோக்கத்துடன் தேசத்துரோகத்தை அடிப்படையாகக்கொண்டே இந்தத் தீவிரவாதமும் பயங்கரவாதமும் செயற்படுகிறது. இதில் ஈடுபடுவோர் நன்மை,கருணை,சுதந்திரம், அமைதி மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் எதிரிகளாவர். மனிதகுலத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட செய்திக்கு இவர்கள் முரணானவர்கள்.

இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் அரசாங்கத்துக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் முஸ்லிம் மக்களின் சார்பில் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவில்குணமடைய பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team