தீவிரவாத குழுவை முற்றாக ஒழிப்பதற்கு 20 இலட்சம் முஸ்லிம்களும் விருப்பத்துடன் இருக்கிறார்கள் - Sri Lanka Muslim

தீவிரவாத குழுவை முற்றாக ஒழிப்பதற்கு 20 இலட்சம் முஸ்லிம்களும் விருப்பத்துடன் இருக்கிறார்கள்

Contributors
author image

S.Ashraff Khan

இலங்கையின் புலனாய்வுத் துறையினரால் கண்டுபிடிக்க முடியாத இலங்கையின் தீவிரவாத கும்பலை முஸ்லிம்கள் இரண்டு வார காலத்திற்குள் கண்டுபிடித்து கொடுத்திருக்கின்றார்கள். இதனால் இந்த தீவிரவாத குழுவை முற்றாக ஒழிப்பதற்கு 20 இலட்சம் முஸ்லிம்களும் விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது என இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது சம்பவம் தொடர்பாக இன்று (28) கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மேலும் குறிப்பிடும்போது,

இலங்கையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த தீவிரவாத தாக்குதலை அடியொற்றியதாக அரசியல் வாதிகள் கிழக்கு மாகாணம் இந்த தீவிரவாதிகளின் தொட்டிலாக உள்ளது என குறிப்பிடுகின்றார்கள் இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜனாதிபதியே குறிப்பிட்டிருக்கின்றார் இந்த நாட்டிலே ஒரு 150 க்கு உட்பட்ட ஒரு குழுவினரே இந்த தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஆனால் இந்த நாட்டிலே 20 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் அவர்கள் அனைவர்களும் இந்த தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கமாட்டார்கள். முழுமையாக எதிர்க்கின்றார்கள். இந்த சிறிய குழுவினர் எடுக்கின்ற இந்த தீவிரவாத நடவடிக்கைகளை வைத்து முழு கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான தீவிரவாத நடவடிக்கைகள் இருப்பதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது அவர்களின் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு பேசுகின்றார்கள். வடக்கு கிழக்கு தமிழ் தலைமைகளும் இதனை சுட்டி முஸ்லிம் தலைமைகளை பல மிழக்கச் செய்ய முனைகின்றார்கள். இது கண்டிக்கப்பட வேண்டியது.

சாய்ந்தமருதில் ஏற்பட்ட அந்த சம்பவம் மிகவும் பாரதூரமான ஒரு சம்பவம். இந்த சம்பவத்தை பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து முறியடிக்க உதவியது அந்தப் பிரதேசத்து மக்கள். இதனை கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அவர்களே உறுதிபட தெரிவித்திருந்தார். சாய்ந்தமருது சம்பவத்தில் வந்தவர்கள் யாரும் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல. வெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களை நூற்றுக்கு நூறுவீதம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் முற்றாக எதிர்க்கின்றது வன்மையாக கண்டிக்கின்றது என்பதே உண்மை. அதேபோன்று எமது கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மற்றும் இதர முஸ்லீம் கட்சிகள் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனை முழுமையாக எதிர்க்கின்றோம் வன்மையாக கண்டித்திருக்கின்றோம்.

கடந்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட இந்த தீவிரவாத நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை இந்த முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக தெரிவித்து கொள்கின்றார்கள் அது போன்று எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த கொடூரத்தை செய்த சிறு குழுவை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு ஒட்டுமொத்தமாக செயற்பட்டு வருகின்றார்கள்.

ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அவர்கள் சகல அரபு மத்ரஸாக்கள், முஸ்லிம் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து இருக்கின்றார். அரபுக் கல்லூரிகள் என்பது இந்த நாட்டில் உள்ள சமூகவியலுக்கும், ஒழுக்க விழுமியங்களுக்கும், கலாச்சாரத்துக்கும் இந்த நாட்டிலுள்ள 20 இலட்சம் முஸ்லிம்களையும் ஒழுக்கமாக வழி நடத்துகின்றது. எனவே இந்த மத்ரஸாக்களை இழுத்து மூடுகின்ற பொழுது நாட்டிற்கு வருகின்ற கலாச்சார சீர்கேடுகள், முரண்பாடுகள் இதை விடப் பாரதூரமாக இருக்கும். இதனை முன்னாள் ஜனாதிபதி உணரவில்லை. என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டிலே முஸ்லிம்களுடைய விடயங்களில் அரசியல்வாதிகள் முதற்கொண்டு, சமூகம் சார் சகல தரப்பினரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதுதான் எமது வேண்டுகோளாகும்.

Web Design by Srilanka Muslims Web Team