அன்றே தீவிரவாதிகளை காட்டிக் கொடுத்தனர் இஸ்லாமிய மக்கள் - Sri Lanka Muslim

அன்றே தீவிரவாதிகளை காட்டிக் கொடுத்தனர் இஸ்லாமிய மக்கள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பிரகாஸ்


ஒரு நாட்டின் அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத்துறை என்பது தனது நாட்டிற்குள், நாட்டு மக்களினால் ஏற்படக் கூடிய பாதுகாப்பற்ற நிலைமையை கண்காணிப்பதை காட்டிலும் தீயசக்திகள் நாட்டுக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதிலும் மிகத் தீவிரமாக இருக்க வேண்டும். ஆனால், எமது நாட்டில் அது முழுமையாக தோற்றுப் போயிருக்கின்றது. அந்தத், தோல்வி இன்று எமது நாட்டு மக்களின் உயிரை மட்டுமல்ல சர்வதேச மக்களின் உயிரையும் பறித்து இரத்தத்தின் சுவையை பார்க்கக் காத்திருந்த தீவிரவாதத்தின் இரத்த வெறியாட்டத்திற்கு துணை போயிருக்கின்றது.

தமிழ் மக்களாகிய நாங்கள் கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் அரச பயங்கரவாதத்தினை அனுபவித்தவர்கள். அதன்காரணமாக, பாதுகாப்பு படைகளின் மீது வெறுப்புணர்வை கொண்டிருந்தோம்(க்கிறோம்). ஆனால், இஸ்லாமிய அரசு என்று தம்மைத்தாமே பெருமை பீத்திக்கொண்டு உலக மக்களின் இரத்தம் குடிக்கும் சர்வதேச தீவிரவாதிகள், எமது நாட்டிற்குள் ஊடுருவும் அளவிற்கு நாட்டின் பாதுகாப்புத்துறை, உளவுத்துறை தோற்றுப் போயிருப்பது எனது பார்வையில் வருத்தப்படக்கூடிய விடயமாகும்.

இலங்கை இஸ்லாமியர்கள் சிலரை மூலைச்சலவை செய்து சொந்த நாட்டு மக்களின் இரத்தம் குடிக்கும் வகையிலான இக்கொடிய தீவிரவாதத்தின் நுழைவு இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம், இனங்களுக்கிடையில் இதுவரை இருந்த ஒற்றுமை, மக்களிடையில் இருந்த அச்சமற்றநிலை, மகிழ்ச்சி இவை அனைத்தையும் உடைத்தெறிந்திருக்கிறது.

அண்மையில், புத்தளம் குப்பைமேடு தொடர்பில் ஊடகப்பணியின் நிமித்தம் இஸ்லாமிய நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, குப்பை மேட்டிற்கு ஆதரவான போராட்டத்தில் மூவின மக்களின் ஒற்றுமைப் பலம் குறித்து மகிழ்சிபடத் தெரிவித்தார். அந்த ஒற்றுமை மென்மேலும் வளர வேண்டும் என்று இருவரும் பேசிக்கொண்டோம். ஆனால், மதத்தினால் இரத்த வெறி கொண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் அந்த ஒற்றுமையை சிறிதளவேனும் சிதைத்துவிட்டிருக்கும் என்று தான் நினைக்கிறேன். இந்நிலைக்கு, தீவிரவாதிகளாக மாறிய இலங்கை முஸ்லிம்கள் சிலர் மட்டுமல்ல அரசும், பாதுகாப்புத்துறையும் பெரும் காரணமாகும்.

ஏனெனில், தேசிய தௌஹீத் ஜமாஅத் என்பது தீவிரவாத அமைப்பு, அதன் தலைவராக இருந்த ஷஹ்ரான் ஹஷிம் (மஷ்ஊதி) தீவிரவாதி என்பதை காத்தான்குடியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் (13.03.2017) மிகத் தெளிவாக அரசாங்கத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். ஆம், அன்றைய தினம் “சஹ்ரான் சாத்தானை கைது செய், நல்லாட்சியில் ஆயுதக் கலாசாரத்தை உட்புகுத்தாதே, தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய், தே.தெ.ஜ தீவிரவாதியை கைது செய்” என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். அதனை, இந்த அரசாங்கம், உளவுத்துறை கண்டும், காணாததும் போல் அதனை மத முரண்பாடு என்ற கோணத்தில் உதறித்தள்ளிவிட்டிருக்கின்றனர். (ஆதாரம் கமெண்டில்).

ஆக, முஸ்லிம் மக்களினால் இரத்த வெறி கொண்ட இந்தத் தீவிரவாதிகள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறை அதனையும் கண்டுகொள்ளவில்லை. அண்மைய இந்திய புலனாய்வு பிரிவின் எச்சரிக்கையையும் கவனத்தில் எடுக்கவில்லை. பெரும் குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆர்ப்பாட்டம், அனைத்து இஸ்லாமியர்களையும் சந்தேகக் கண்கொண்டு விமர்சிக்க முனைவது தகாது என்பதையும் தாங்கி நிற்கின்றது.

அதேபோல், கடந்த (07.03.2018) அன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இருக்கக்கூடிய ஆரயம்பதி பகுதியில் ஐஎஸ் தீவிவாதிகளின் பெயரை தாங்கிய சுலோக அட்டையுடன் சில வெடி பொருட்கள் மீட்கப்பட்டது. அச்சம்பவத்தினை கூட இந்த நாட்டின் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. அந்தச் செய்தியை அன்று நான் வெளியிட்டபோது, இஸ்லாமிய நண்பர்கள் சிலர் என்னை இனவாதியாக்கி எனக்கு எதிராக இஸ்லாமிய எதிர்ப்பை தூண்டி விட்டனர். அது, கண்டிக் கலவரம் நடந்து கொண்டிருந்த காலம் என்பதால் அச்சம்பவம் இனவாதத்தின் பெயரினால் மறைந்து போனது.

ஆனால், இன்று இவற்றையெல்லாம் நான் மீளாய்விற்கு உட்படுத்திய போது அவற்றுக்குள் மறைந்திருந்த பாரிய உண்மைகள் கண்டு கையாலாக அரசினை நினைத்தும் கவலைகொள்கிறேன். தீவிரவாதிகளை காட்டிக் கொடுக்கும் உண்மைகள் வெளிப்பட்டபோதும், அவை அனைத்தும் இந்த நாட்டில் காணப்படும் இன, மத, முரண்பாடுகளிற்குள்ளும், அந்த உண்மைகளை பேசுவது இனவெறி என்றும், அதற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் துரோகிகள் (காபிர்கள்) என்றும் புறம்பேசுதல். இவற்றின் மூலம், புதைந்துபோய்விட்டது. அரசுடன், பாதுகாப்புத்துறையுடன், சேர்த்து அவர்களும் இவற்றுக்கு துணைபோனவர்கள் என்று நான் எடைபோட்டுக் கொள்கிறேன்.

“மழை வருது, மழை வருது, குடை கொண்டுவா” என்பதுபோல், புலி வருது, புலி வருது, அவர்களை மட்டுமே கண்காணிப்போம் என்று கவனயீனத்துடன் இருந்துள்ளனர் இந்நாட்டின் உளவுத்துறையினர். எனக்கு நேர்ந்ததை இவ்விடத்தில் கூறினால் மிகப் பொருத்தமாக இருக்கும். அண்மையில், காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராட்டத்தை மேற்கொண்ட போது, தேசிய புலனாய்வுப் பிரிவினர் என்னைப் பற்றிய தகவல்களை சேகரித்து அச்சமூட்டினர். அவ்வச்சம், அவ்வாறு போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரும் அனுபவிக்கக்கூடிய ஒன்றே. இதுதான், இந்த நாட்டின் உளவுத்துறை கற்றுக்கொண்ட நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு உக்தியா? தெரியவில்லை.

இந்நிலை மாறவேண்டும் – மாற்றப்பட வேண்டும். எனவே, இனியேனும், அப்பாவி மக்களுக்கு எதிராக உளவுபார்ப்பதை கைவிட்டு நாட்டுக்கு வெளியில் இருந்து வந்துள்ள, வரப்போகும் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற இந்த நாட்டின் உளவுத்துறையை, பாதுகாப்புத்துறைய அரசாங்கம் சிறப்பாக வழிநடத்த வேண்டும். அப்போதுதான், இந்த நாட்டிற்கு இன்று ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலில் இருத்தே இச்சிறிய நாட்டை காப்பாற்ற முடியும். அதுபோல், சகல இனங்களுக்கிடையிலும் ஒற்றுமை மலரும், அச்சமற்ற சூழ்நிலை நீங்கும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிபெறும்.

Web Design by Srilanka Muslims Web Team