மௌல‌விமார் ம‌ட்டும‌ல்ல‌ யாரும் ஜுப்பா அணிவ‌து க‌ட்டாய‌ம‌ல்ல‌. - Sri Lanka Muslim

மௌல‌விமார் ம‌ட்டும‌ல்ல‌ யாரும் ஜுப்பா அணிவ‌து க‌ட்டாய‌ம‌ல்ல‌.

Contributors
author image

S.Ashraff Khan

மௌல‌விமார் ம‌ட்டும‌ல்ல‌ யாரும் ஜுப்பா அணிவ‌து க‌ட்டாய‌ம‌ல்ல‌. ஆனால் ப‌ல் இன‌ நாட்டில் அந்த‌ந்த‌ இன‌ங்க‌ளின் ச‌மய‌த்த‌லைவ‌ர்க‌ளுக்கென‌ ஆடைக்க‌லாசார‌ம் இருப்ப‌தால் இது பின்பற்றப்படுகிறது என்று உலமாக்கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் மெளலவி இன்று (28) தெரிவித்துள்ளார்.

இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முஸ்லிம் ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ளுக்கும் குறிப்பிட்ட‌ ஆடை இருக்க‌ வேண்டும் என்ப‌தை நீண்ட‌ கால‌மாக‌ நாம் சொல்லிவ‌ருகிறோம். அந்த‌ ஆடையை அணிவ‌து உல‌மாக்க‌ளுக்கு க‌ட்டாய‌மில்லை. ஆனால் அந்த‌ ஆடையை பொது ம‌க்க‌ள் அணிவ‌து கூடாது என்ப‌துதான் இங்கு முக்கிய‌ம்.

பௌத்த‌ ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ளின் ஆடையை இன்னொரு பௌத்த‌ பொது ம‌க‌ன் அணிவ‌தில்லை. அணிந்தால் அது குற்ற‌மாகும். அது போல் நீள‌மான‌ ஜுப்பாவை பொது ம‌க்க‌ள் அணிவ‌து கூடாது.

அர‌ச‌ ம‌ற்றும் நிறுவ‌ன‌ நிக‌ழ்வுக‌ளின் போது க‌ல‌ந்து கொள்ளும் மௌல‌விக‌ள் சாதார‌ண‌ சேட் லோங்க்சுட‌ன் க‌ல‌ந்து கொள்ளாம‌ல் ஜுப்பா அல்ல‌து சேட்டுட‌ன் சிவ‌ப்பு தொப்பி அணிந்து செல்வ‌து ந‌ல்ல‌து.

இந்த‌க்கலாசார‌த்தை நாம் அறிமுக‌ப்ப‌டுத்துவ‌து ந‌ம‌து நாட்டுக்கு ஏற்ற‌தாகும். சிவ‌ப்பு தொப்பியை க‌ட்டாய‌ம் அணிய‌ வேண்டும் என‌ நாம் சொல்ல‌வில்லை. அணிவ‌து ந‌ல்ல‌து. அப்போதுதான் யார் மௌல‌வி யார் பொதும‌க‌ன் என்ப‌தை ஏனைய‌ ம‌க்க‌ளால் புரிந்து கொள்ள‌ முடியும். நாளை சில‌ வேளை யாராவ‌து சைத்தான் ஜுப்பா அணிந்து ப‌ய‌ங்க‌ர‌வாத‌ செய‌லில் ஈடுபட்டால் அவ‌னை மௌல‌வியாக‌ இருக்கும் என‌ ஊட‌க‌ங்க‌ள் செய்தி வெளியிட‌லாம்.

சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் சிவ‌ப்பு தொப்பி போடுவ‌து மௌல‌விமார் என்ப‌தை நான் எடுத்துக்காட்டியுள்ளேன். அந்த‌ தொப்பி ம‌ற்றும் ஜுப்பாவை மௌல‌வி அல்லாதார் அணிவ‌தை த‌விர்க்க‌ வேண்டும் என முஸ்லிம்க‌ளுக்கு ஜ‌ம்மிய‌த்துல் உல‌மா அறிவிப்ப‌து கால‌த்தின் கட்டாயக் கடமையாகும்.

Web Design by Srilanka Muslims Web Team