தவ்ஹீத் பிரச்சார தன்னிலை விளக்கம் தலைவர்களிடம் கையளிப்பு » Sri Lanka Muslim

தவ்ஹீத் பிரச்சார தன்னிலை விளக்கம் தலைவர்களிடம் கையளிப்பு

Contributors
author image

இக்பால் அலி

இந்த நாட்டின் இறையாண்மையை மதித்து இலங்கை அரசியல் சாசனம், இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளுக்குட்பட்டு அன்பையும், அமைதியையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் அங்கீகரத்துடன் இலங்கையில் அமைதியாகச் செயற்படும் நான்கு தவ்ஹீத் பிரச்சாரக் கொள்கையுடைய அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதி, பிரதமர் , மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்டவர்களிடம் தன்னிலை விளக்க மகஜர் ஒன்றைக் கையளித்து வருவதாக இவ்வமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த அமைப்பில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா, ராபிததுல் அஹ்லுஸ் சுன்னா, அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய நான்கு அமைப்பினர் இணைந்து கைச்சாத்திட்ட தமது தவ்ஹீத் பிரச்சார தன்னிலை விளக்கம் தொடர்பான மகஜரை கையளித்து வருகின்றனர். பிரதமருக்கான மகஜரை சிவில் அமைப்பின் மூலமாக கையளித்துள்ளதுடன் இந்த அமைப்பிலுள்ள குழுவினர் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி அவர்களை நேரில் சந்தித்து கையளித்த போது அந்த அறிக்கையில் பின்வருமாறு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 இல் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பொதுவாக முஸ்லிம்கள் மீதும் குறிப்பாக தவ்ஹீத் அமைப்புக்கள் மீதும் தப்பெண்ணம் உருவாகி வருகின்றது. இதனால் தவ்ஹீத் அமைப்புக்கள் தன்னிலை விளக்கம் ஒன்றினை வழங்கும் காலத்தின் கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.

‘தவ்ஹீத்’ என்றால் ‘ஓரிறைக் கொள்கை’ என்பது அர்த்தமாகும். ஜமாஅத் என்றால் அமைப்பு, கூட்டம் என்பது பொருளாகும். அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்| அவனுக்கு இணை, துணை இல்லை என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடே ‘தவ்ஹீத்’ என்று கூறப்படும். அனைத்து முஸ்லிம்களும் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களே! இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்கள் தாம் முதன்மைப்படுத்தும், முன்னுரிமை கொடுக்கும் அம்சங்களுக்கு ஏற்ப தம்மை அடையாளப் படுத்திக் கொள்வதற்கு அமைய இந்த சித்தாந்தத்திற்கு முன்னுரிமை கொடுத்து பிரச்சாரம் செய்யும் அமைப்புக்கள் தம்மை தவ்ஹீத் ஜமாஅத்துக்கள் என அடையாளப்படுத்தி வருகின்றன.

நிறுவன ரீதியில் 1940 களில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்புக்கள் பல பெயர்களில் இயங்கி வருகின்றன. சில இடங்களில் தமது ஊருடன் இணைத்தும் மற்றும் சில அமைப்புக்கள் நாட்டுடன் இணைத்தும் (உ-ம்: ஓல் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்) இன்னும் சில அமைப்புக்கள் வேறு பெயர்களிலும் (உ-ம்: ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா) தம்மை அடையாளப்படுத்தியுள்ளன.

இந்த அமைப்புக்கள் நாட்டின் இறையாண்மையை மதித்து இலங்கை அரசியல் சாசனம், இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளுக்குட்பட்டே இந்நாட்டில் செயற்பட்டு வருகின்றன. அன்பையும், அமைதியையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகளை, புனித அல்குர்ஆனையும் முஹம்மத் நபிஸல்அவர்களின் வழிகாட்டல்களையும் மையமாகக் கொண்டு இயங்கும் இவ்வமைப்புக்கள் நாட்டின் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சியில் பாரிய பங்காற்றி வருகின்றன.

இந்நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தம் மற்றும் வெள்ளம், வரட்சி, அசாதாரண சூழ்நிலைகளின் போது இன, மத பேதமின்றி சமூக சேவைகளை வழங்கி வந்துள்ளன. மற்றும் மருத்துவ, கல்வி உதவிகளையும், செயற்றிட்டங்களையும் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தி வந்துள்ளன.

இன நல்லுறவைப் பேணுவதை வழியுறுத்தி வரும் இவ்வமைப்புக்கள் நாட்டில் ஏற்பட்ட இன முறுகல் சந்தர்ப்பங்களில் முஸ்லிம் மக்களைப் பொறுமைகாக்கப் போதித்து வந்துள்ளதுடன் ஏனைய சமய, சமூக மக்களுடன் சுமூக உறவைப் பேணி வந்துள்ளன.

இந்த அமைப்புக்கள் இஸ்லாம் போதிக்கும் சாந்தி, சமாதானத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் பிரசாரம் செய்து வந்துள்ளதுடன் இஸ்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரானது என்பதைப் போதித்தும் வந்திருக்கும் அதேவேளை, ஐளுஐளு போன்ற இஸ்லாமிய விரோத பயங்கரவாத அமைப்புக்கள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வுகள், உரைகள், மாநாடுகள், வெள்ளி தொழுகை நிகழ்ச்சிகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் நிகழ்த்தி வந்துள்ளன.

இஸ்லாம் பிற மத தெய்வங்களை திட்டுவதைத் தடுத்துள்ளது, (அல்குர்ஆன் 6:108). பிற சமூக மக்களுடன் பண்பாடாக நடந்து கொள்ளுமாறு போதிக்கின்றது (அல்குர்ஆன் 60:8) என்பன போன்ற அடிப்படை அம்சங்களையும் போதித்து வந்துள்ளன். அத்துடன் பிற சமய ஆலயங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவது தடைசெய்யப்பட்டது போன்ற நபிகளாரின் தூய போதனைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளன.

மேலும், போதையொழிப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகள், சீதன ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர்.

இந்த அமைப்புக்கள் மூட நம்பிக்கை ஒழிப்பு, தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்தல் போன்ற பிரச்சாரங்களில் சகோதர முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இருப்பினும் இவை எமது சகோதரத்துவ வட்டத்திற்கு உட்பட்டவையே.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாட்டை இந்த அமைப்புக்கள் அனைத்துமே வன்மையாகக் கண்டிப்பதுடன் குற்றவாளிகள், அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று முழு மனதுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

அனைத்து தவ்ஹீத் அமைப்புக்களுடனும் பல விடயங்களில் முரண்பட்டு வந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கும் ஒரு அமைப்பில் இருந்து 2017 இல் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் இந்த பயங்கரவாதச் செயற்பாட்டில் சம்பந்தப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படுவதால் தவ்ஹீத் என்ற பெயரில் இயங்கிவரும் அனைத்து அமைப்புக்களும் இக்குற்றத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்ற தோரணையில் நோக்க முடியாது. மாறாக, தவ்ஹீத் அமைப்புக்கள் ஐளுஐளு என்ற அமைப்பு முஸ்லிம் சமூகத்திலிருந்து வெளியேறிய (கவாரிஜ்) அமைப்பு என்றும் இஸ்லாத்தின் எதிரிகள் தமது அரசியல் நலன்களை அடைந்து கொள்ள பயன்படுத்துவதற்காக உருவாக்கியுள்ள இஸ்லாமிய எதிர்ப்பு சக்தி என்றும் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். (இதற்கான எழுத்துமூல மற்றும் வீடியோ பதிவுகள் உள்ளன.) தவ்ஹீத் உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் அங்கம் வகிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சம்பந்தப்பட்ட அரச தரப்புகளுக்கு இவர்கள் குறித்து ஏற்கனவே தரவுகளை வழங்கியுள்ளமை தற்கால செய்தி ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளமை யாவரும் அறிந்ததே. மேலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையில் தவ்ஹீத் இயக்கங்கள் உட்பட இலங்கையின் அனைத்து இஸ்லாமி அமைப்புகளும் ஒன்றிணைந்து 2015 ஜூலை மாதம் ஐளுஐளு தீவிரவாத இயக்கம் சம்பந்தமாக வெளியிட்ட கூட்டுப் பிரகடனமும் யாவரும் அறிந்ததே. எனவே, தவ்ஹீத் என்ற பெயரே தீவிரவாதமானது என்ற தவறான கண்ணோட்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று சகல தரப்பினர்களையும் வினமாயகக் கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கை முஸ்லிம்களும் தவ்ஹீத் அமைப்புக்களும் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதையும், தவ்ஹீத் அமைப்புக்கள் நாட்டின் சட்ட ஒழுங்கையும் ஜனநாயக மரபையும் பேணியே இந்த நாட்டில் செயற்படும் என்றும், தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஒரு போதும் நாம் துணை போகமாட்டோம் என்றும் இலங்கை அரசின் தீவிரவாத ஒழிப்பு மற்றும் தடுப்புச் செயற்பாடுகளுக்கு என்றும் முழு மனதுடன் பூரணமாக ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உறுதியளிக்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்ட இந்த அசாதாரண சூழலில் இருந்து எமது தாய்நாட்டை மீட்க அனைத்து விதமான பேதங்களையும் மறந்து இலங்கையர் என்ற ஐக்கிய மனப்பான்மையுடன் செயற்பட ஒன்றுபடுவோம் என்று மேலும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

PHOTO-2019-05-02-09-10-54 PHOTO-2019-05-02-09-10-58

Web Design by The Design Lanka