பொறுமையாகக் கேளுங்கள் ! அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம்... - Sri Lanka Muslim

பொறுமையாகக் கேளுங்கள் ! அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம்…

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Ajaaz


நம்மைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பது..
நம்மைக் குற்றமனப்பான்மைக்கு உள்ளாக்குவது..
நம்மை வெட்கப்பட வைத்துத் தலைகுனிய வைப்பது..
நம்மைக் கோபமூட்டி வன்முறைகளின்பால் தள்ளிவிடுவது..
நமது மார்க்கத்தைக் காட்டுமிராண்டித் தனமான ஒரு மார்க்கமாகச் சித்தரிப்பது..
இந்தப் பின்னணிகளை முன்வைத்து நமது சமூகத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் களங்கப்படுத்துவது..
நமது பொருளாதாரத்தைச் சூறையாடுவது..
நமது பொருளாதார பலத்தைத் தகர்ப்பது..

நடந்துபோன கொடூரங்களுக்கு இந்த நாட்டின் ஒரேயொரு முஸ்லிம்கூடச் சம்பந்தமில்லை, அனுமதிக்கவில்லை, ஆதரிக்கவில்லை..

மாறாகக் குற்றவாளிகளைப் பல வருடங்களுக்கு முன்னரே பாதுகாப்புப் பிரிவுக்கும் புலனாய்வுத் துறைக்கும் தேவைக்கும் அதிகமாகவே தெரியப்படுத்தி இருக்கிறோம். முறைப்பாடுகள் செய்திருக்கிறோம்..
இப்போது குற்றவாளிகள், சந்தேக நபர்களை நாமே காட்டிக் கொடுத்து வருகிறோம்..

எனவே, நாம் இதில் எந்த வகையிலும் குற்றவாளிகள் அல்லர்.
ஆகவே, உண்மையிலேயே பாதிக்கப்பட்ட கிறித்தவ சமூகத்தாருக்கு முடியுமான எல்லா வழிகளிலும் உதவுவோம், அவர்கள் மீது கருணை காட்டுவோம்.
அவர்களை நேரில் சந்திக்கும்போது ஆறுதல் சொல்வோம், மனவருத்தத்தைத் தெரிவிப்போம்.. அது வேறு விஷயம்.

ஆனால், இனியும் நமக்குள்ளேயே வெட்கப்பட்டு, துயருற்று, துவண்டு, வெளியே முகங்காட்டாமல் இருக்கத் தேவையில்லை.

வழமைபோல நமது வெளிக்களப் பணிகளில், தொழில்களில் ஈடுபடுவோம்.

யாராவது நம்மைப் புறக்கணிப்பதாக, அவமதிப்பதாகத் தெரிந்தாலும், அவர்கள் ஏதாவது நம்மீது குற்றம், குறை சொன்னாலும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, எந்தப் பதிலும் சொல்லாமல் ஒரு புன்னகையோடு நகர்ந்து செல்வோம்..
நாம் இப்போது என்னதான் விளக்கம் சொன்னாலும் அவர்கள் நின்று நிதானமாகச் செவிமடுக்க, புரிந்துகொள்ளப் போவதில்லை !

இனியாவது நாம் செய்ய வேண்டியவை:

1. உலகில் உள்ள பல்வேறு மதங்கள், பிரிவுகள், சிந்தனைகள், குழுக்கள் இருக்கும் – இருக்க வேண்டும் என்பது தான் அல்லாஹ்வின் நாட்டம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இஸ்லாமே சிறந்தது, அது மட்டுமே சரியானது, அது மட்டுமே உலகில் கோலோச்ச வேண்டும் என்ற தவறான சிந்தனையிலிருந்து முழுதுமாக விடுபட வேண்டும்.

2. முஸ்லிம்கள் அல்லாத எவரையும் காபிர் எனும் கண்ணோட்டத்தில் பார்க்காதிருப்போம், அழைக்காதிருப்போம். அவர்கள் சம்பந்தப்பட்ட இறுதி முடிவு இறைவன் தீர்ப்பில் உள்ளது. நாம் எவருக்கும் தீர்ப்புச் சொல்ல வேண்டியதில்லை. இப்படிப் பார்ப்பதால் தான் ஸஹ்ரான் போன்ற மனநோயாளிகள் உருவாகின்றனர். இந்தப் பார்வை மிகவும் ஆபத்தானது.

3. நம்பிக்கைக் கோட்பாடுகள் என்பதும் கலாசாரம் என்பதும் வெவ்வேறான இரண்டு விடயங்கள் என்பதை மனங் கொள்வோம். நமது அடிப்படை நம்பிக்கைகள் சரியாக இருக்கட்டும். ஆனால் கலாசாரம் அரேபிய கலாசாரமாக நிச்சயமாக இருக்க வேண்டியதில்லை. நமது ஆடைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் இலங்கையின் பொதுக் கலாசாரத்துக்கு இயைந்ததாக, அடுத்தவர் கண்களை உறுத்தாத விதத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.

4. சிங்கள, தமிழ் சமூகங்களோடு முடியுமான அளவுக்கு நெருங்கிப் போவோம். அவர்களுடன் சகஜமாகப் பழகுவோம். அவர்களது கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்வோம். அவர்களின் கடைகளில் பொருள்கள் வாங்குவோம். மாமிசம் தவிர்ந்த ஏனைய உணவுகளையாவது அவர்களின் ஹோட்டல்களில் உட்கொள்வோம்.

5. இஸ்லாத்தில் உள்ள பர்ளுகளுக்கு முன்னுரிமை கொடுப்போம். சர்ச்சைக்குரிய சுன்னாக்கள் விஷயங்களில் பிடிவாதமாக இல்லாமல் சகிப்புத் தன்மையோடு நடந்து கொள்வோம்..

எல்லோரும் இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்பதையும் வாழும் உரிமைகள் அவர்களுக்கும் உண்டு என்பதையும் இனியாவது மனங் கொள்வோம்..

Web Design by Srilanka Muslims Web Team