இலங்கையின் புர்கா தடையும் அதன் பின்னணியில் எழும் குரல்களும் - Sri Lanka Muslim

இலங்கையின் புர்கா தடையும் அதன் பின்னணியில் எழும் குரல்களும்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஷமீலா யூசுப் அலி


புர்காத் தடை- இன்றைய நாளில் இது ஒரு நீண்ட விவாதத்தை வேண்டி நிற்கும் தலைப்பு.

ஆனால் பரந்து பட்ட இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் இந்த விவகாரம் ஆடையொழுங்கு சார்ந்து எழும் மிகச் சிறிய ஒரு பகுதி மாத்திரமே.

இதைப் பற்றி விரிவாகப் பேசுவது அவசியமில்லை என்ற நிலைப்பாடே ஆரம்பத்தில் என்னிடம் இருந்தது.

ஆனால் தற்போது அதைச் சுற்றிச் சார்ந்தும் எதிராகவும் பின்னப்படும் உரையாடல்களை நோக்கும் போது இந்த விவகாரம் சம்பந்தமான கருத்துப் பகிர்வு முக்கியம் பெறுகிறது.

ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையிலும் முஸ்லிம் பெண்கள் சார்ந்த ஆய்வுகளில் தொடர்ச்சியான ஈடுபாடுடையவள் என்ற வகையிலும் எனது பகிர்வை முன்வைக்க முயல்கிறேன்.

முகத்தையும் கைகளையும் தவிர உடலின் மற்றப் பகுதிகளை மறைப்பது பெரும்பான்மை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்ற பெண்களுக்கான ஆடை சம்பந்தமான இஸ்லாத்தின் வழிகாட்டல்.

இதில் பாதங்களைத் திறக்கலாம் என்று உலகின் சில பிரதேசங்களைச் சார்ந்த முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

இன்னும் சிலர் தலையின் அரைப்பகுதியை மறைத்தால் போதும் என்று எண்ணுகிறார்கள்.

அல்லது நோக்கம் தான் முக்கியம், விரும்பியதை அணியலாம் என்று கொஞ்சப் பேர் நினைக்கிறார்கள்.

ஒரு சிறிய பகுதியினர் முகம் மூடுவது கட்டாயம் என்று கருதுகிறார்கள்.

புர்கா அல்லது நிகாப் எனப்படுவது முகத்தை முழுவதுமாக மறைக்கும் அல்லது கண்களை மட்டும் விட்டு விட்டு முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை ஒழுங்கை குறித்து நிற்கிறது.

இஸ்லாத்தின் வாழ்வியல் சம்பந்தமான அனேக வழிகாட்டல்களில் கருப்பு வெள்ளை என்று இரண்டு கருத்துக்களாக முன்வைக்கப்படுவதில்லை.

இரண்டுக்குமிடைப்பட்ட ஒரு சாம்பல் பகுதியும் அங்கு இருக்கிறது. அந்த சாம்பல் பகுதி இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையின் அழகாகும்.

ஒரு முஸ்லிம் தனக்குச் சரியெனப்படுவதைத் தெரிவு செய்யலாம். அந்த தெரிவுச் சுதந்திரத்தின் விளைவுக்கான முழுப்பொறுப்பும் அந்த முஸ்லிமையே சாரும். அது திறப்பதாக இருந்தாலும் சரி, மூடுவதாக இருந்தாலும் சரியே.

இஸ்லாமிய ஆடைகள் நிர்ப்பந்தத்தின் பேரில் அணியப்படுகிறதா அல்லது சுய விருப்பின் பேரில் அணியப்படுகிறதா என்ற கேள்வி பலரிடம் எழலாம்.

அனேக பெண்கள் இதனை விரும்பி அணிந்தாலும் சில பெண்களிடம் இது திணிக்கப்பட்டிருக்கிறது
என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.

திணிப்பு, அடக்கு முறை என்பது எல்லா தந்தை வழி சமூகங்களிலும், அதிலும் குறிப்பாக ஆசிய நாட்டு பாரம்பரிய கட்டமைப்பில் பொதுவாக இருந்து வரும் ஒன்று. அதற்கு முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கல்ல.

திணிப்பு என்பது அதிகாரத்தின் மையத்திலிருந்து எழுவது. திணிப்பு ஆதிக்கத்தின் இரும்புக் கரம். இது பெண்களின் உடையில் மட்டுமல்ல திருமணம், கல்வி,தொழில், சொத்து ஈட்டுதல் மற்றும் சமூகப் பங்களிப்பு போன்ற எல்லா அம்சங்களோடும் தொடர்பு படுகின்ற விடயமாக ஆகியிருக்கிறது.

மிகக் கசப்பான உண்மை என்னவெனில் இஸ்லாம் பெண்ணுக்கு அளித்த அத்தனை உரிமைகளும் சுதந்திரமும் இன்று அதே இஸ்லாத்தின் பெயரினால் அவளுக்கு மறுக்கப்படுகின்றது.

இந்த அவலம் குறித்து, முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருந்து காத்திரமான உரையாடல்கள் எழ வேண்டும்.

இது சம்பந்தமாக பல வழி முறைகளில் ஆய்வுகள், முன்வைப்புக்கள் ,தெளிவு படுத்தல்கள் ஊடாக தொடர்ச்சியாக நானும் இன்னும் பலரும் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

இயக்கங்களின் அதிகாரமட்டங்களைக் கேள்வி கேட்டிருக்கிறோம். பெண்களின் வலுவாக்கம் சுதந்திரம், முடிவெடுக்கும் அதிகாரம் பற்றிய கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறோம்.

எந்தவொரு சமூகத்தின் அடக்குமுறை ஆதிக்கத்தினையும் ஒரே இரவில் மாற்றி விட முடியாது.
அது ஒரு தொடர்ச்சியான செயற்பாடு.

இந்தச் செயற்பாடு முஸ்லிம் சமூகத்தின் மெளலவிகளால் மட்டும் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு வேலையல்ல. துறைசார் நிபுணர்கள், எழுத்தாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் என ஆண் பெண் இருசாராரும் இணைந்து செய்ய வேண்டிய வேலை.

ஆலிம் என்ற அரபுச் சொல்லின் தமிழ் வடிவம் அறிவைப் பெற்றுக் கொண்டவர் என்பது.

இலங்கையில் வஹ்ஹாபிசத்தின் வருகையும் அதன் பின்னரான முஸ்லிம்களின் வாழ்வியல் மாற்றங்களும் – இந்த விடயம் சம்பந்தமாகத் தனியாக விரிவாக எழுத வேண்டும்.

இங்கு இந்த நிகாப் அல்லது ஹிஜாபுக்கு தொடர்புபடுகின்ற விடயத்தை மட்டும் உரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறேன்.

இலங்கை, திறந்த பொருளாதாரத்திற்கும் பூகோளமயமாக்கலுக்கும் தன்னுடைய வாயில்களை அகலத்திறந்த பின்னர், மத்திய கிழக்கு கலாச்சாரமும் மேற்கத்தியக் கலாச்சாரமும் மெல்ல காலடி வைக்கின்றன.

இதன் பின்னணியில் அபாயா என்கிற கருப்பு அங்கி இலங்கைக்குள் நுழைகிறது.

முஸ்லிம்கள் மட்டுமல்ல இலங்கையர்கள் எல்லோரினதும் வாழ்க்கை முறைகள் கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. உணவுப் பழக்கங்கள், உடைகள், மோஸ்தர்கள் எல்லாமே இதில் அடங்கும்.

இதற்கு முன்னர் இலங்கையில் பெண்கள் என்ன அணிந்தார்கள்?

சீத்தை கவுன், சாரி, சீத்தைப் பாவாடை சட்டை போன்ற சுதேச கலாச்சாரம் சார்ந்த உடைகள். முஸ்லிம் பெண்கள் சாரி அணிந்து அதன் தலைப்பால் தலையை மறைத்துக் கொண்டார்கள். மறைக்காத பெண்களும் இருந்தார்கள்.

திறந்த பொருளாதாரத்தின் பின்னர் சிங்களப் பெண்கள் எவ்வாறு டெனிம்,டீசேர்ட்,ப்ளவுஸ்க்கு மாறினார்கள், அதே போல முஸ்லிம் பெண்கள் சல்வார் கமீஸ், அபாயா என்ற உடைகளுக்கு மாறினார்கள். காலத்துக்காலம் அவை வெவ்வேறு பெஷன்களுக்கும் ஸ்டைல்களுக்கும் வடிவங்களும் எடுக்கத் தொடங்கின.

கருப்பு நிறத்தில் மட்டுமிருந்த அபாயாக்கள் வேறு வர்ணங்களுக்கு அண்மைக்காலமாக மாறி வருகின்றன.

திணிக்கப்பட்டு அணிவதை விடுங்கள். முஸ்லிம் பெண்கள், கால மாற்றத்திற்கு ஏற்ப தங்களுக்குப் பிடித்தமான உடைக்கான மாதிரியை எங்கிருந்து பெற முடியும்?

அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து தான். எங்களோடு அதிகம் தொடர்பு படுவது மத்திய கிழக்கு நாடுகள். எனவே அதிலிருந்து தங்களுக்கான உடையைத் தழுவிக் கொள்வது இயல்பாக நிகழ்ந்தது.

அதே போல முகம் மூடுவது கட்டாயம் என்று கருதியவர்கள் அதற்குச் சார்பான உடையைத் தழுவிக் கொள்கிறார்கள்.

இங்கு நீங்கள் பார்க்கலாம். ஆப்கானிஸ்தானில் முழு உடம்பையுமே மறைக்கின்ற ஒருவகையான நீல நிற புர்கா இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது. அது இலங்கையில் இல்லை. காரணம் இங்கிருக்கின்ற நிகாபிகள் தமக்கு அதிகம் தொடர்பில் இருக்கின்ற நாட்டு ஆடையைத் தான் தழுவிக் கொள்கிறார்கள்.

அந்தக் காலத்தில் சாரி உடுத்த மாதிரி ஏன் உங்களால் உடுக்க முடியாது என்ற கேள்வியை எங்கள் சமூகத்திலிருந்தே சிலர் கேட்கிறார்கள்.
இதே கேள்வியை சிங்களப் பெண்களிடம் ஏன் நீங்கள் சீத்தைச் சட்டை உடுக்கக் கூடாது என்று யாரும் கேட்பதில்லை.

காலம் மாறி விட்டது. அபாயா அல்லது சல்வார் கமீஸ் என்பது சாரி அணிவதை விட ஒரு இலகுவான உடையாக இருக்கிறது. இதை ஒட்டிப் பேசப்படும் வஹ்ஹாபிஸம் அதற்குப் பின்னாலுள்ள அரசியல் பற்றிய பிறிதொரு சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்.

சரி. இப்போது நிகாப் தடை பற்றி பேசலாம்.

நிகாப் என்ற முகத்தை முழுவதும் மறைக்கின்ற உடை – இது பற்றி எழுந்துள்ள கருத்துக்கள்.

1. இந்த உடை அணியுமாறு இஸ்லாம் சொல்லவில்லை.

2. இந்த உடை பெண்கள் பின்னடைவதற்குக் காரணமாக அமைகிறது.

3. இலங்கைக் கலாச்சாரத்துக்கு இந்த உடை பொருத்தமில்லை.

4. நிகாப் முஸ்லிம் பெண்கள் மீது ஆண்களால் திணிக்கப்பட்டுள்ளது.

5. நிகாப் உடை ஒரு பெண்ணின் தனித்துவத்தை மறுதலிக்கிறது. அவளது அடையாளத்தை இல்லாதொழிக்கிறது.

6. நிகாப் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

7. அரசாங்கத்தின் நிகாப் தடை நியாயமானது. முஸ்லிம் சமூகம் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த வாதங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

1. இந்த உடை அணியுமாறு இஸ்லாம் சொல்லவில்லை.

மிகச் சரி, இஸ்லாம் ஆடைகள் சம்பந்தமாக சில அடிப்படைகளைச் சொல்லி தெரிவை முஸ்லிம் பெண்களின் தெரிவுக்கும் விருப்புக்கும் விட்டிருக்கிறது. எனவே, முகம் மூடுவது என்பது வெறுமனே தனிப்பட்ட விருப்பம். மிகச் சிலர் இதனைக் கட்டாய சட்டமாகக் கொள்கின்றனர்.

2. இந்த உடை பெண்கள் பின்னடைவதற்குக் காரணமாக அமைகிறது.

உடை பின்னடைவிற்குக் காரணமாக அமைவதில்லை. ஆனால் அந்த உடை எந்த தேசம் அல்லது சந்தர்ப்பத்தில் அணியப்படுகிறது, அது சுயவிருப்பத்தில் அணிவதா இல்லையா என்பதைப் பொறுத்து பெண் முன்னேற்றத்துக்கு இயல்பான வாழ்க்கைக்கு இது தடையாக அமையலாம். இலங்கையைப் பொறுத்தவரை நிகாப் அணிபவர்கள் மிக மிகக் குறைவானவர்களே.

3. இலங்கைக் கலாச்சாரத்துக்கு இந்த உடை பொருத்தமில்லை.

இலங்கைக்கலாச்சாரம் என்பது என்ன? அது தனிச் சிங்களக் கலாச்சாரமா அல்லது பல்லினக் கலாச்சாரங்களில் சேர்க்கையா. கலாச்சாரம் என்பது காலத்துக்குக் காலம் மாறும் பல கலாச்சாரங்களின் சேர்க்கை தான். அதனை ஒரு இனம் தீர்மானிக்க முடியாது. சில ஆதிவாசிக் குழுக்களைத் தவிர அதி தூய்மையான கலப்பற்ற கலாச்சாரமொன்று உலகில் எங்கேயும் கிடையாது. பெளத்தம் இலங்கைக்கு வரும் முன் இலங்கையிலிருந்த கலாச்சாரம் வேறு. ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னர் இருக்கின்ற கலாச்சாரம் வேறு. உலகமயமாக்கலின் பின்னர் இருக்கின்ற கலாச்சாரம் இன்னொன்று. இலங்கைக் கலாச்சாரம் என்று நாங்கள் ஒரே ஒரு கலாச்சாரத்தை முதன்மைப்படுத்தும் போது தான் ஆதிக்கப் பெருங்கதையாடலை நாங்கள் நியாயப்படுத்துகின்ற தவறு நேர்கிறது. பல்கலாச்சார சமூகம்(Multi cultural society) என்பது கலாச்சாரப் பன்மைத் தன்மை(Cultural pluralism) கொண்ட சமூகம். இங்கு பல மொழிகள், நுண்தன்மைகள்,தனித்துவங்கள் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக் கொள்ளாமல் வளர முடிகின்றது.

4. நிகாப் முஸ்லிம் பெண்கள் மீது ஆண்களால் திணிக்கப்பட்டுள்ளது.

சிலர் மீது இது திணிக்கப்படுகிறது. அது ஆண்களாகவே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் அது துணைவர்களாக அல்லது சகோதரர்களாக அல்லது பெற்றோர்களாக இருக்கிறார்கள். ஆனால் தன் சுய விருப்பத்தின் பேரில் நிகாப் அணியும் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவரவர் விளங்கிய இஸ்லாம், சில தனிப்பட்ட விருப்பங்கள், இவற்றுக்குக் காரணமாக இருக்கலாம். திணிக்கப்படுவதாக இருந்தால், அது எதுவாக இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப் பட முடியாததே.

5. நிகாப் உடை ஒரு பெண்ணின் தனித்துவத்தை மறுதலிக்கிறது. அவளது அடையாளத்தை இல்லாதொழிக்கிறது.

தனிப்பட்ட முறையில் இந்தக் கருத்துக்கு நான் உடன்படுவேன். ஒருவருடைய முகம் என்பது அவரது அடையாளம். கண்களைப் பார்த்து நேர்படப் பேசுவதும் ஒரு கூட்டத்தில் தனித்து விளங்காததும் எதிராளிக்கு நிச்சயமாக அசெளரியத்தையும் ஒருவகையான நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தலாம். இது என்னுடைய தனிப்பட்ட பார்வை. அதே நேரம் இதே நிகாப் உடையோடு பல சாதனைகளைச் செய்யும் பல முஸ்லிம் பெண் ஆளுமைகள் உலகெங்கிலும் உள்ளனர். அதனையும் நான் மறுக்க முடியாது.

6. நிகாப் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

ஆமாம், இன்று நாட்டு மக்கள் ஒரு விதமான பேரச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். நிகாப் மட்டுமல்ல, ஹிஜாப், மற்றும் தாடி கூட அந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் தற்கொலைக் குண்டு தாரிகள் யாரும் நிகாப் உடையோடு வரவில்லை. இலங்கையில் நிகழ்ந்த தற்கொலைத்தாக்குதல்கள் ஒன்றிலாவது இதுவரை நிகாப் சம்பந்தப்படவில்லை. பண்டாரநாயக்கவை சுட்டது பெளத்த பிக்குகளின் ஆடையில் வந்தவர் என்பது ஞாபகமிருக்கலாம். விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்கள் அவர்கள் சாதாரணமாக அணியும் ஆடைகளோடு நிகழ்ந்தியவை தான். தற்போது நிகாப் மீதான கவனக் குவிப்பு நாட்டின் பாதுகாப்பு என்பதற்கு அப்பால் வேறு ஒரு நிகழ்ச்சி நிரல் என்பதை கொஞ்சம் கூர்ந்து சிந்திப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

நிகாபை தற்காலிமாக அல்லது முழுவதுமாக நீக்குவது என்பதைப் பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் அதை அணியும் பெண்கள். இதை ஆண்களோ அல்லது நிகாப் அணியாத பெண்களோ தீர்மானிக்க முடியாது. பாதுகாப்புத் தேவை கருதி அல்லது அடையாளத் தேவைகளுக்காக முகம் காட்ட வேண்டிய இடங்களில் திறந்து காட்டச் சொன்னால் அனேகமான நிகாபிகள் அதனை மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்

7. அரசாங்கம் நிகாப் தடை நியாயமானது. முஸ்லிம் சமூகம் ஒத்துழைக்க வேண்டும்.

முதலில் தடை என்பது ஒரு அபாயகரமான குறிச் சொல் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஈரானில் ரெஸா ஷா பஹ்லவி ஆட்சியின் போது ‘காஷிப் ஏ ஹிஜாப்’ – மூடியதைத் திறத்தல் என்ற சட்டத்தின் கீழ், நிகாப், ஹிஜாப் உட்பட அனைத்து தலைக்கவசங்களையும் தடை செய்தார். பொது இடங்களில் இவற்றை அணிந்திருந்த பெண்களின் உடைகளை பொலிஸ் பலவந்தமாக இழுத்துக் கழட்டினார்கள். இதன் விளைவாக பாரிய எதிர் இயக்கம் தோன்றியது. அப்போது ஹிஜாபும் நிகாபும் எதிர்ப்பின் சின்னமாக பெண்கள் அணிய ஆரம்பித்தார்கள்.

1979 இல் இதனை வைத்து தான் கொமைனி, ஆட்சிக்கு வருகிறார். அன்றிலிருந்து ஹிஜாப் அணிவது சட்டத்தின் படி கட்டாயமாக்கப்படுகிறது. இதுவும் அதிகாரத்தின் இன்னொரு வடிவம் .இந்தக் கட்டாய ஹிஜாப் சட்டத்துக்கு எதிராகப் பல பெண்கள் பொது இடங்களில் அதனை அகற்றி தங்கள் எதிர்ப்பைக் காட்டுகின்றனர். சட்டங்கள் மூலம், பெண்களின் ஆடைகளைத் தடை செய்வதோ அல்லது குறித்த ஆடைகளை அணியுமாறு கட்டாயப்படுத்துவதோ, இரண்டுமே ஒரே வகையான வன்முறை தான்.

நிகாப் சம்பந்தமாக முஸ்லிம் சமூகம் தனக்குள் கலந்துரையாடி ஒரு தற்காலிக அகற்றலுக்கு வந்திருந்தால் அது வேறாக இருந்திருக்கும். முஸ்லிம் சமூகம் எனும் போது அதில் முக்கியமாக பெண்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் நிகாப் என்பது ஆண்கள் உடை சம்பந்தப்பட்ட விடயம் அல்ல.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்வது போல அரசு தடை செய்வதை, கண்மூடித்தனமாக ஆதரித்து கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் அன்பான கவனத்துக்கு. தடை என்பது நம் சுதந்திரம் மீதான அதிகாரம்.

நம் பிரச்சினைகள் பற்றி நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே அல்லாமல் அதிகாரச் சட்டங்கள் அல்ல. இதில் முஸ்லிம் சமூகம் குழம்பிப் போய் இருக்கிறது.

பேரினவாதிகள் முழுப்பிரச்சினையும் நிகாப் இல் தான் இருக்கிறது போல ஒரு பிரமையை எழுப்பி முஸ்லிம் சமூகத்தையும் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வைத்திருக்கிறது. இன்று ஒன்று பேசி விட்டு நாளை இன்னொன்று பேசுகின்ற சங்கடம் இதனால் தான் வந்திருக்கிறது.

உபரிக் குறிப்புக்கள்.
……………………………..
.
<3 மேலே உள்ள 7 குறிப்புக்களுக்கும் நிகாபை எடுத்து விட்டு ஹிஜாபைப் பொறுத்திப் பாருங்கள். என்ன நினைக்கிறீர்கள்?

<3 தடை(BAN) என்பது அபாயகரமான ஒரு சொல். ஒரு சமூகத்தின் கூட்டு பிரக்ஞை Collective consciousness இனால் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயங்களை அதிகாரத்துக்கு சட்டமாகக் கொண்டு வந்து ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தை இந்த தடை கொடுத்து விடுகிறது. கூட்டு பிரக்ஞை என்பது ஒரு சமூகத்தை ஒன்று படுத்தும் விசையாகச் செயற்படும், அந்த சமூகம் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கைகள், எண்ணங்கள், தார்மீக மனோபாவம் இவற்றின் கூட்டு என்று சமூகவியல் கூறுகிறது.

<3 புர்கா அணிகிறவர்கள் ஒழுக்கமானவர்கள், ஹிஜாப் அணிகிறவர்கள் அதை விட அடுத்த படியில் இருப்பவர்கள், இவை ஒன்றுமே அணியாதவர்கள் ஒழுங்கான முஸ்லிம்கள் அல்ல- இப்படியான சிந்தனைகள் அழுகலானவை. ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கான தொடர்பில் நாங்கள் நீதிபதிகளாக மாற வேண்டிய அவசியம் கிடையாது. அவரவர் நம்பிக்கையும் உரிமையும் அவரவருக்கு- தாள் சுற்றிய டொபியை எறும்பு மொய்க்காமல் இருப்பதும் சுற்றாத டொபியை எறும்பு மொய்ப்பதும் போன்ற சில்லறைத்தனமான சிந்தனைகள் ஆரோக்கியமானவை அல்ல. தனிப்பட்ட ஒழுக்க வாதங்களை வைத்து பெண்களை மட்டிடும் இழிவான தன்மையை முஸ்லிம்களாகிய நாங்கள் கொண்டிருக்கக் கூடாது.

<3 ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண் செயற்பாட்டாளர்களின் அன்பான கவனத்திற்கு, நான் உங்களையும் உங்களது சிந்தனைகளையும் மதிக்கிறேன்.நீங்கள் ஹிஜாப் அணியாமல் இருக்கின்ற சுதந்திரத்தையும் மதிக்கிறேன். நீங்களும் ஹிஜாபை விரும்பி அணிகின்ற பெண்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களை ஒரே தூரிகையால் வர்ணம் தீட்டாதீர்கள். ஹிஜாபின் நுண் உணர்வுகளை அதிகம் புரிந்து பேசக் கூடியவள் அதை விரும்பி அணிந்து நடைமுறையில் அது சார்ந்த பிரச்சினைகளை அன்றாடம் எதிர்கொள்ளும் பெண்களே அல்லாமல் நீங்கள் அல்ல. எல்லாக் குரல்களுக்கும் காது கொடுக்கக் கற்றுக் கொள்வோம்.

<3 முஸ்லிம் பெண்கள் விவகாரங்களில் முடிவெடுக்கும் முதன்மையான அதிகாரம் அவர்களுக்கே உரியது. காலங்காலமாய் இந்த உரிமைகள் மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இனியாவது இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கின்ற உரிமைகளில் கைவைப்பதை விட்டு விடுங்கள். இது வீட்டிலிருந்து சமூகத் தலைமைத்துவ நிறுவனங்கள் வரை பொருந்தும். இயக்கங்களில் மேல் மட்டங்கள், சூறாக்கள், காழி நீதிமன்றுகள், ஜம்மியதுல் உலமா போன்ற சமூகத் தலைமை அமைப்புக்கள். இவை அனைத்திலும் பெண்கள் பிரதிநிதித்துவம் வராமல் ஆரோக்கியமான சமூகமொன்று இலங்கையில் உருவாக முடியாது. வெறும் பெயருக்கு பெண் பிரதிநிதித்துவம் என்ற பெயரில் செய்யப்படும் கண்துடைப்பல்ல, நிஜமான பெண் பங்களிப்பு காலத்தின் தேவை.

<3 இலங்கையின் நிகாப் தடையை அடுத்து, ஹிஜாபையும் அபாயாவையும் முந்தானைகளையும் கழற்றச் சொல்லி பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், பல்லங்காடிகள் என்று கெடுபிடிகள் தொடர்கின்றன. ஒட்டு மொத்தமாக –நிகாப் தடைச் சட்டம்- என்பது மட்டும் இதற்கான காரணம் அல்ல என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது. இந்தச் சட்டம் அமுலுக்கு வர முன்னரே நாட்டின் பல பகுதிகளும் ஆங்காங்கே இந்தக் கெடுபிடிகள் நடந்து கொண்டு தான் இருந்தன. ஆனாலும், இவை அனைத்தும் இப்போதிருக்கின்ற சூழலில் அதிகாரமயமாக்கப்பட்டிருக்கின்றன. வீதியில் செல்லுகின்ற ஒரு சாதாரண சிங்களப் பொதுமகன் கூட ஜிஹாபைக் களையும் படி கேட்கின்ற அதிகாரம் வந்திருக்கின்றது.

<3 கோழைத்தனத்துக்கு இஸ்லாத்தில் இடமில்லை. இப்படியான நிகழ்வுகளை எதிர் கொள்ளும் சகோதரிகள் அவற்றை தைரியமாகவும் கூர்ந்த ஞானத்தோடும் எதிர்கொள்ள வேண்டும். முறையான இடங்களில் இவற்றை முறையீடு செய்வதும் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பதும் முக்கியமானவை. உங்களுடைய ஜிஹாபைக் களைந்து பார்ப்பதற்கான அதிகாரம் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே இருக்கிறது. அதுவும் பெண் உத்தியோகத்தர்கள் உங்களைத் தனியான இடத்துக்கு அழைத்துச் சென்று மட்டுமே இதனை செய்ய முடியும். களைந்து பார்த்த பின்னர் அவர்கள் ஹிஜாபுடன் உங்களை அனுமதிக்க வேண்டும். உங்கள் உரிமைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Web Design by Srilanka Muslims Web Team