இலங்கை பயங்கரவாதிகள் இந்தியா வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை » Sri Lanka Muslim

இலங்கை பயங்கரவாதிகள் இந்தியா வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

புதுடெல்லி

இலங்கை பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெறவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது 3 தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது.
9 பயங்கரவாதிகள் நடத்திய இந்த தற்கொலை படை தாக்குதலில் 253 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மூலம் ஐ.எஸ். இயக்கம் இந்த நாசகரமான செயலில் ஈடுபட்டது.
இதை தொடர்ந்து இலங்கை அரசு அந்த அமைப்புக்கு தடை செய்து 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது. இந்த நிலையில் இலங்கையில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்று இருக்கலாம் என்று இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா தெரிவித்து இருந்தார்.

பி.பி.சி. தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறி இருப்பதாவது: இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக பயங்கரவாதிகள் சிலர் இந்தியாவில் உள்ள காஷ்மீர், கேரளா, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர். இது குறித்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளன.

அவர்கள் எதற்காக அங்கு சென்றார்கள் என்பது குறித்து தற்போது தெளிவாக கூற இயலாது.

நிச்சயமாக பயங்கரவாதிகள் ஏதேனும் பயிற்சி பெறுவதற்காக சென்று இருக்கலாம் அல்லது சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொள்வதற்காக அவர்கள் இந்தியாவுக்கு சென்று இருக்கலாம்.

இவ்வாறு இலங்கை ராணுவ தளபதி கூறி இருந்தார்.

இதற்கு இந்தியா மறுத்துள்ளது. இலங்கை பயங்கரவாதிகள் இந்தியா வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெறவில்லை என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இலங்கையில் தற்கொலை படை தாக்குதலை தொடர்ந்து காஷ்மீருக்கு இந்த ஆண்டில் வருகை தந்த இலங்கையை சேர்ந்த 12 பேர்களின் ஆவணங்கள் மறுபடியும் சரிபார்க்கப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் யாரும் இங்கு வரவில்லை என்று இந்திய பாதுகாப்பு முகமைகள் தெரிவித்துள்ளன.

வேறு பெயர்களில் பயங்கரவாதிகள் இந்தியா வந்து இருக்க வாய்ப்பு உள்ளதால் இலங்கை அரசு ஆதாரங்களை வழங்கினால் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka