இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு - Sri Lanka Muslim

இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு

Contributors
author image

Editorial Team

bbc


இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை போலீஸார் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டனர்.

இதன்படி, தாக்குதலை நடத்திய குழுவிற்கு சொந்தமானது என கருதப்படும் 140 மில்லியன் ரூபாய் (இலங்கை பெறுமதி) பணம் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

இவ்வாறு கண்டறியப்பட்டுள்ள பணத்தில் ஒரு தொகை பணம், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஏனைய பணம் வங்கி கணக்குகளில் காணப்படுவதாகவும், அந்த வங்கி கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த பயங்கரவாத குழுவிற்கு சொந்தமானது என கருதப்படும் 7 பில்லியன் ரூபா (இலங்கை பெறுமதி) பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இந்த குழுவின் சொத்துக்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டு, அவை அரசுடமையாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 73 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 54 பேரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருவதுடன், அவர்களில் 7 பெண்களும் அடங்குவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அத்துடன், 19 சந்தேக நபர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடாத்தி வரும் அதேவேளை, அவர்களில் இருவர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் பொலிஸ் மற்றும் முப்படையினர் தொடர்ச்சியாக சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team