AC களை பரிசோதிக்கும் கருவி குண்டு வெடிக்க வைக்கும் ரிமோர்ட் கொன்ரோல் ஆக மாறியதன் மர்மம் என்ன? » Sri Lanka Muslim

AC களை பரிசோதிக்கும் கருவி குண்டு வெடிக்க வைக்கும் ரிமோர்ட் கொன்ரோல் ஆக மாறியதன் மர்மம் என்ன?

59735211_1995725323870855_6699757409591623680_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

“தற்கொலை சூத்திரதாரியும் ISIS அமைப்பின் இலங்கை பிரதிநிதியுமாகிய சஹ்ரான் ஹாசிமின் தேசிய தவ்ஹீத் ஜமாஆத்தின் (National Tawheed Jamath)தின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பவாஸ் என்பவர் வாழைத்தோட்ட பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.”

“அவரிடமிருந்து குண்டுவெடிக்க வைக்கும் ரிமோர்ட் கொன்ட்ரோல் ஒன்றும் ,தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சுவரொட்டிகள் (sticker) 67ம் ,போதனைகள் அடங்கிய பென்ட்ரைவ் ஒன்றும் கையடக்கத் தொலைபேசி மற்றும் laptop ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

“மேலும் குண்டு வெடிப்பு நடந்தவுடன் சங்கரில்லா மட்டும் கின்ஸ்பரி கோட்டல்களை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவும் அவரது போனிலிருக்கிறது.”

மேற்கூறப்பட்ட தகவல்கள் தான் எமக்கு இதுவரை எமது ஊடகங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் வெளியிடப்பட்டவைகள்.

கொழும்பு மாவட்ட NTJ யின் பொருப்பாளரயே எமது பாதுகாப்பு படையினர் கைது செய்தமையையிட்டு நாம் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

சட்டமொரு இருட்டறை அல்ல (like page) எனும் எமது ஊடகத்தில் இவ்வழக்கு சம்பந்தமான உண்மையான தகவல்கள இதோ !

===============================

மேற்கூறப்பட்ட வழக்கு நேற்று (07/05/2019) கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் லங்கா ஜெயரட்ன முன்னிலையில் விளக்கத்திற்கு எடுக்கப்பட்டது. அங்கு நடந்தவைகளை உரையாடல் வடிவில் தருகிறோம்.

எமது சட்டத்தரணி:- இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து விசாரணைகள் முடிவடைந்திருக்கும் என நினைக்கிறேன், எனவே சந்தேக நபரை பிணையில் விடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

பொலிசார்:- இந்த வழக்கு தொடர்பிலான விசாரணையின் மேலதிமான அறிக்கையை இன்று மன்றில் சமர்ப்பிக்கிறேன் .சந்தேக நபரைப்பற்றி விசாரிக்க எதிர்வரும் 21ந்திகதிவரை காலம் தேவைப்படுகிறது. அதுவரை விளக்க மறியலில் வைக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்.

எமது சட்டத்தரணி:-

இவ்வழக்கின் உண்மையான சில தகவல்களை தெரிவிப்பதற்கு மன்றின் அனுமதியை கோருகின்றேன். (அனுமதி வழங்கப்பட்டவுடன்)

சந்தேக நபரும் அவரின் சகோதரனும்
எயார்கண்டிசன் செய்யும் டெக்னீசியன்களாக மிக நீண்டகாலமாக தொழில் புரிகிறார்கள்.அதற்கான ஆதாரம் அவர்களது தேசிய அடையாள அட்டைகளில் அவர்களின் தொழில் “ஏசி தொழிலாளர்” என குறிப்பிடப்பட்டுள்ளது .

அத்துடன் பிடிபட்ட உபகரணம் ஏசி கூட இருக்கா? குறைய இருக்கா எனப்பார்க்கும் உபகரணம்.பொலிசார் சொல்வது போல இது குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தும் உபகரணமல்ல.(உபகரணம் தொடர்பான விளக்க ஆவணமும் அடையாள அட்டையும் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன)இவற்றை அவதானித்த நீதவான்.

நீதவான்:- இது ஏசிஐ பரீட்சிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணமா ?

போலிசார்:- (ஆழ்ந்த சிந்தனையின் பின்).ஆம்.

நமது சட்டத்தரணி:-

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட sticker கள் ஜனாதிபதியினால் தடைசெய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஆத் (NTJ) ன் பெயரில் கைப்பற்றப்பட்ட சுவரொட்டிகள் அல்ல. மாறாக கைப்பற்றப்பட்ட சுவரொட்டிகள் 67ம் ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஆத்திற்காக (SLTJ)ன் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் சமூக சேவைகளில் ஒன்றாகிய “போதை ஒழிப்பு” பிரச்சாரத்திற்காக சந்தேக நபரினால் அவரின் சொந்த செலவில் பிரிண்ட் செய்யப்பட்ட பல சுவரொட்டிகளில் ஒரு சில இவைகள்.

SLTJ அமைப்பினருக்காகத்தான் செய்யப்பட்ட சுவரொட்டிகள் என உறுதிப்படுத்தும் அவர்களால் வழங்கப்பட்ட கடிதம் நீதவானின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

நீதவான் :- சுவரொட்டிகள்(stickers)களில்
குறிப்பிடப்பட்ட அமைப்பு SLTJ யா? NTJ யா?

போலிசார்:- (முக்கி விழுங்கி) SLTJ யுடையது தான்.

நீதவான்: இந்த அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பா?

எமது சட்டத்தரணி :- தேசிய தவ்ஹீத் ஜமாஆத்(NTJ) தான் தடை செய்யப்பட்டது.
SLTJ அமைப்பானது கலாச்சார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு சட்டரீதியாக இயங்கும் ஒரு சமூக சேவை அமைப்பாகும்.

மீண்டும் நீதவான்: SLTJ அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பா ?

போலிசார் : நீண்ட அமைதியின் பின் இல்லை தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல.

போலிசார்:- கம்பளை நிகழ்வு ஒன்றுடன் இந்த சந்தேக நபர் தொடர்பு பட்டுள்ளார்.

நீதவான் : அவ்வாறாயின் அந்த வழக்கிற்கு அவர் அழைத்து செல்லப்படுகிறாறா?

போலிசார் : இல்லை.

எமது சட்டத்தரணி : சந்தேக நபருக்கு எதிராக போதிய சான்றுகள் இல்லையென்பதால் அவரை பிணையில் விடும் படி வேண்டிக்கொள்கிறேன்.

நீதவான்: இவ்வழக்கானது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டிருப்பதால் பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை தேவைப்படுகிறது, எதிர்வரும் 21 ம் திகதிக்கு முன் விசாரணைகளை துரிதப்படுத்தி அறிக்கையை சமர்ப்பிக்கவும்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் தான் நீதிமன்றத்தில் நடந்தது.

எல்லா ஊடகங்களினாலும் மண்டைக்கு வேலை கொடுக்காமல் ஆர்வக்கோளாரினால் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்திகளை திறந்த நீதிமன்றத்தில் தகர்த்தெரிந்த சிறு மகிழ்ச்சியில் எமது சட்டத்தரணிகள் வெளியேறினர்.

எது எப்படி இருந்தாலும் AC களை பரிசோதிக்கும் கருவி குண்டை வெடிக்க வைக்கும் கருவியாக மாறியமை வியப்பானதே.
சட்டத்தரணி சரூக்

Web Design by The Design Lanka