மீள்குடியேற்ற செயலணியில் த.தே.கூ பிரதிநிதிகள், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவேண்டும் - அஸ்மின் விஷேட பிரேரணை. » Sri Lanka Muslim

மீள்குடியேற்ற செயலணியில் த.தே.கூ பிரதிநிதிகள், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவேண்டும் – அஸ்மின் விஷேட பிரேரணை.

asmin

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.எல்.லாபிர்


2016ம் ஆண்டு நீண்டகாலமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் சிங்கள மக்களை மீள்குடியேற்றுவதற்கான விஷேட அமைச்சரவை செயலணியின் கடந்த கால செயற்பாடுகளை அவதானித்ததன் அடிப்படையில் மேற்படி கோரிக்கையை உடனடியாக அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரும்வகையில் வடக்கு மாகாணசபையின் 12-06-2018 அன்றைய அமர்வின்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் முன்வைத்தார்கள். அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்

நீண்டகால அகதிகளுக்கான செயலணி 2016 ஸ்தாபிக்கப்பட்டபோது மேற்படி செயலணியின் முஸ்லிம் சிங்களம் என்ற இனத்துவ அடையாளங்கள் உடனடியாக நீக்கப்படவேண்டும் என நான் ஒரு முன்மொழிவை இந்த அவையிலே முன்வைத்திருந்தேன்; கௌரவ அமைச்சர்களான றிசாத் பதியுத்தீன், பைஸர் முஸ்தபா, சுவாமிநாதன் அவர்களோடு துமிந்த திசாநாயக்கா அவர்களும் இந்த செயலணியிலே உள்ளடக்கப்பட்டிருந்தார்கள்; நாம் குரல் எழுப்பியதன் விளைவாக வடக்கு மாகாணசபையின் ஆளுனர் அவர்களும், முதலமச்சர் அவர்களும் இந்த செயலணியில் உள்ளடக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அது நடைமுறையில் அமுல்படுத்தப்பட்டதா என நாம் அறியவில்லை,

அதேபோன்று நீண்டகால இடப்பெயர்வை எதிர்நோக்கியவர்கள் முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் மாத்திரமல்ல; தமிழ் மக்களும் 1980களிலிருந்தே இடப்பெயர்வுகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள், எனவே அவ்வாறு நீண்டகால இடப்பெயர்வை எதிர்நோக்கிய 31-12-1990களுக்கு முன்னர் இடப்பெயர்வை எதிர்நோக்கிய அனைத்து மக்களும் என இந்த செயலணியின் பெயர் மாற்றியமைக்கப்படல் வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்தோம், அதுவே வடக்கு முஸ்லிம் மக்களினதும் கொள்கை சார்ந்த நிலைப்பாடாக இருக்கின்றது. ஆனால் இந்த மாற்றமும் இடம்பெற்றதா என நாம் அறியவில்லை.

பல மில்லியன் ரூபாய்களில் இந்த செயலணி அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்கின்றது; ஆனால் பெரும்பால அபிவிருத்திப்பணிகள் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்களால் நேரடியாக முன்மொழியப்படுகின்றன; எமது அபிவிருத்திக்கட்டமைப்பானது மக்களின் தேவைகளை பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகங்களுக்கு முன்வைக்கும், மாவட்ட செயலகங்கள் தொடர்புபட்ட அமைச்சுக்களுக்கூடாக அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும். ஆனால் இங்கு அமைச்சர் முன்மொழியும் ஒரு திட்டமே மாவட்ட செயலகங்கள் பிரதேச செயலகங்களினூடாக அமுலாக்கத்திற்கு வருகின்றன, அதுவும் வருட இறுதியிலேயே அவை அமுலாக்கத்திற்கு வருகின்றன இதனால் குறித்த அபிவிருத்திகளினூடாக எதிர்பார்க்கப்படுகின்ற பயன்கள் எமது மக்களுக்கும் எமது பிரதேசங்களுக்கும் கிடைக்காமல் போகின்றன.

இதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது; “கட்சி அரசியலை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி” என்ற விடயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்கின்றோம். மீள்குடியேற்ற செயலணி என்பது கட்சி வளர்ப்பதற்கான செயலணியேயன்றி வேறில்லை; அதுமாத்திரமன்றி தமிழ் முஸ்லிம் உறவிலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும், வடக்கிலே சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுவதற்கு இந்த செயலணியின் நிதி பயன்படுத்தப்படுமாக இருந்தால் அது வடக்கு முஸ்லிம் மக்கள் தமக்குத் தாமே செய்யும் பாரிய அநியாயமாகவே இருக்கும்.

எனவே இவ்வாறான சூழ்நிலைகளைத் தடுப்பதற்கு மேற்படி செயலணி ஒரு பக்கச்சார்புடைய செயலணியாக இருக்க முடியாது; அது பொதுவானதாக அமையவேண்டும். எனவே வடக்கின் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளையும் இந்த செயலணியில் இணைப்பது தற்போதைய முறைகேடுகளை சீராக்க துணைசெய்யும் என்ற அடிப்படையில் இப்பிரேரணையினை முன்வைக்கின்றேன். என பிரேரணையினை முன்வைத்தார்.

அவையில் இப்பிரேரணை வழிமொழியப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது; அதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் என்பதற்கு மேலதிகமாக வடக்கு மாகாணசபையின் பிரதிநிதிகள் ஒரு சிலரும் உள்வாங்கப்படவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. அத்தோடு மேற்படி செயலணியானது வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்களின் கவனக்குறைவாலேயே உருவானது என்ற கருத்தையும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கல் தெளிவுபடுத்தினார்கள்.

Web Design by The Design Lanka