ஜனாதிபதி பாராளுமன்றில் ஆற்றிய முக்கிய உரை - Sri Lanka Muslim

ஜனாதிபதி பாராளுமன்றில் ஆற்றிய முக்கிய உரை

Contributors
author image

Presidential Media Division

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் 07.05.2019 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய விசேட உரை…..

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் என் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஏப்ரல் 21ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்தபோதே காலை 10 மணியளவில் இந்த சம்பவத்தைப் பற்றி நான் அறிந்து கொண்டதோடு, இவ்வாறானதொரு சர்வதேச பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட தாக்குதல் ஒன்று எவ்வாறு இலங்கையில் திடீரென இடம்பெற்றது என்பது பற்றி நான் சிந்தித்தேன். அதன்பின் அன்றைய தினம் பகல் 12 மணியளவில் எனது இலங்கை நண்பரொருவர் சமூக ஊடகங்களில் பிரசுரமாகியிருந்த அச்சம்பவம் தொடர்பான ஒரு கடிதத்தை அவரது கையடக்கத் தொலைபேசியில் என்னிடம் காட்டினார். அந்த கடிதத்தை பார்த்ததும் எனக்கு மிகுந்த குழப்பமாக இருந்தது. ஏனெனில் இந்த சம்பவம் பற்றி ஏற்கனவே பாதுகாப்பு தரப்பிற்கு தகவல் கிடைத்திருந்தது என்பதை அக்கடிதத்தின் மூலம் எனக்கு அறியக் கிடைத்தது. உடனடியாகவே இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதைப் பற்றி கண்டறிவதற்கு ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை அமைக்க வேண்டும் என நான் தீர்மானித்தேன்.

நான் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்தவாறே ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்னவை தொடர்புகொண்டு அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு இந்த விசாரணைக் குழுவை உடனடியாக அமைக்குமாறு கூறினேன். அடுத்த நாள் காலையில் அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்க வேண்டும் எனவும் கூறினேன். சில மணித்தியாலங்களின் பின்னர் நான் நாடு திரும்பியதும் 22ஆம் திகதி காலை 09 மணிக்கு தேசிய பாதுகாப்பு சபை கூட்டப்பட்டது. தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னர் உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான இந்த விசேட விசாரணைக் குழுவினருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஜயமான்ன ஆகியோர் இதன் ஏனைய அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டனர். அதன் பின்னரே அன்று பாதுகாப்பு சபை கூட்டம் இடம்பெற்றது. பாதுகாப்பு சபையில் நாம் இந்த விடயங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடினோம்.

அதேபோன்று நான் சிங்கப்பூரிலிருந்த போதும் அச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் பற்றியும் பாதுகாப்பு பிரதானிகளுடனும் பிரதமருடனும் கலந்துரையாடி சகல பணிப்புரைகளையும் வழங்கினேன். கடந்த 10 நாட்களாக இந்த சம்பவம் தொடர்பிலும் மீண்டும் இத்தகையதொரு சம்பவம் இடம்பெறாத வகையிலும் இதற்கு பொறுப்பானவர்களை கண்டறிவதற்குமான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டுள்ளேன்.

ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அனைத்து வெளிநாட்டு தூதுவர்களையும் அழைத்து இந்த சம்பவம் பற்றியும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைககள் பற்றியும் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அதேபோன்று அன்றைய தினமே இரவு 9 மணிக்கு கொழும்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் அழைத்து 2 மணிநேர கலந்துரையாடலொன்றை நடாத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் தேவையான பணிப்புரைகளை வழங்கினேன். ஏப்ரல் 25ஆம் திகதி இந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகளைக்கொண்ட சர்வகட்சி மாநாட்டை கூட்டினேன். அதில் அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு எனது நன்றிகள். இதன்போது பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அந்த மாநாட்டை முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். அத்தோடு அன்றைய தினம் மாலையில் சர்வ சமய தலைவர்கள் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமய தலைவர்களை அழைத்து நாட்டின் நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், அவர்களது ஆலோசனைகளையும் பெற்று குறிப்பாக பாதுகாப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அவற்றையும் நாம் சேர்த்துக்கொண்டோம். சர்வகட்சி மாநாட்டின்போது அரசியல் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் எமது பாதுகாப்பு சபை கலந்துரையாடலிலும் கலந்துரையாடப்பட்டன.

ஏப்ரல் 26ஆம் திகதி அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றது. அவர்களுக்கு நாட்டின் நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதோடு, இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பாக அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு நிலைமைகளுடன் ஊடகங்களின் பொறுப்பு மற்றும் ஊடக தர்மங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. ஏப்ரல் 29ஆம் திகதி இந்த சம்பவத்தின் காரணமாக பாரிய பொருளாதார நஷ்டத்திற்கும் அனர்த்தத்திற்கும் உள்ளான சுற்றுலாத்துறை, ஹோட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா சபை மற்றும் நிதியமைச்சு போன்றவற்றின் பிரதிநிதிகளை அழைத்துக் கலந்துரையாடினோம். சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புதல், சுற்றுலா துறையிலுள்ள வர்த்தகர்களின் மனக்குறைகள் குறித்து நாம் கலந்துரையாடினோம். சுற்றுலாத் துறையினருக்கு வழங்கக்கூடிய உதவிகள், அவர்களது வங்கிக் கடனை செலுத்துவதை பிற்போடுதல், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருக்குமானால் அதற்கு அரச அனுசரணைகளை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடி ஒரு உடன்பாட்டுக்கு வந்தோம்.
அதேபோன்று மே 02 ஆம் திகதி 09 மாகாணங்களையும் சேர்ந்த ஆளுநர்களை அழைத்து இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டிய விதம் குறித்து அவர்களுக்கு நான் தெளிவுபடுத்தினேன்.

குறிப்பாக பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளின் பாதுகாப்பு, தத்தமது மாகாணங்களில் பொது இடங்கள், வைத்தியசாலைகள், பஸ் தரிப்பிடங்கள், புகையிரத நிலையங்கள் போன்றவற்றின் பாதுகாப்பு குறித்தும் பிரதேசத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான பணிப்புரைகளும் வழங்கப்பட்டன. மே மாதம் 02ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளுடன் என்னை சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கவனத்திற்கொள்ள வேண்டிய முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் தயாரித்த அறிக்கையொன்றை என்னிடம் கையளித்தார். அந்த அறிக்கையை அதன் பின்னர் இடம்பெற்ற பாதுகாப்பு சபைக்கூட்டத்தின்போது நான் தற்போதைய பாதுகாப்பு செயலாளரிடம் கையளித்து அதிலுள்ள விடயங்களை கருத்திற்கொண்டு பாதுகாப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பாதுகாப்பு துறை பணிகளை முறைப்படுத்துவது தொடர்பிலும் பணிப்புரைகளை வழங்கினேன். அதனைத் தொடர்ந்து மே மாதம் 06ஆம் திகதி வர்த்தகத்துறை முக்கியஸ்தர்களையும் வர்த்தக சபை பிரதிநிதிகளையும் அழைத்து அரசாங்கத்தினால் அவர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்து கலந்துரையாடினேன்.

மேலும் தேசிய பாதுகாப்பு சபைக்கூட்டம் நான் தனியாக நடாத்திய ஒன்றல்ல. அதற்கு பிரதமர், அமைச்சரவை மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் நான் அழைப்பு விடுத்திருந்தேன். அதேபோன்று குறிப்பாக பாதுகாப்பு சபைக்கூட்டத்திற்கு அழைக்கப்பட வேண்டும் என்று கருதிய முக்கியஸ்தர்களையும் அழைத்திருந்தேன். அந்த வகையில் அண்மையில் கார்டினெல் மெல்கம் ரஞ்ஜித் அவர்களும் பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரும் அங்கு வருகை தந்து தனது கருத்துக்களை முன்வைத்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான நிபுணர்களை அவ்வப்போது அழைத்து அவர்களது கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளித்துள்ளேன். இதன் மூலம் பாதுகாப்பு சபையின் வியூகத்தை நாம் மாற்றியமைத்துள்ளோம். எனவே பாதுகாப்பு சபை விரிவான, பலமானதொரு கட்டமைப்பாக செயற்படுகின்றது என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அதேபோன்று பாதுகாப்பு அமைச்சின் சில முக்கிய பதவிகளில் மாற்றங்களைச் செய்திருக்கின்றேன். அதேபோன்று பாதுகாப்பு படைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புக்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சோதனை நடவடிக்கைகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைகளுக்கு மேலதிகமாக பிரதான நடவடிக்கை மத்திய நிலையமொன்றினை ஏற்படுத்தி மேஜர் ஜெனரல் சத்திய லியனகேயை அதற்கு பொறுப்பாக நியமித்துள்ளேன். இந்த துன்பியல் சம்பவத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம், சந்தேகம், நம்பிக்கையீனம் ஆகியவற்றைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இந்த பயங்கரவாதிகளை கைதுசெய்வதற்காக எமது பாதுகாப்பு படையினர் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதையும் தெரிவிக்கின்றேன். அந்த வகையில் பெருமளவான பயங்கரவாதிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள், அவர்கள் தமது பயங்கர செயல்களுக்காக பயன்படுத்த தயாரிக்கப்பட்டிருந்த பெருமளவான ஆடைகள் ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து திருப்தியடையக்கூடிய நிலையிலேயே நாடு உள்ளது எனக் குறிப்பிட முடியும்.

நாட்டில் இடம்பெற்ற இந்த தாக்குதல் குறித்து எத்தனை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றில் உண்மைகள் கிடையாது. இத்தகைய பிரச்சினை ஏற்படுகின்றபோது அது பற்றிய விமர்சனங்களை உரிய தெளிவுடன் முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த பிரித்தானியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான அமைச்சர் என்னை சந்தித்து, “ஜனாதிபதி அவர்களே! இது இலங்கையின் பிரச்சினை மட்டுமல்ல. இது உலகளாவிய பிரச்சினையாகும் என்பதை நீங்கள் நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.” எனக் கூறினார். இந்த பிரச்சினை தொடர்பில் நியாயமற்ற விமர்சனங்களை முன்வைப்பவர்கள் இந்த பிரச்சினையின் பின்புலம் பற்றியும் சர்வதேச பயங்கரவாதத்தின் நடவடிக்கைகள் குறித்தும் சரியாக தெரிந்துகொள்ளாமல் பேசுகின்றனர் என்றே நான் கருதுகிறேன். பௌத்த தத்துவத்தில் விளக்கப்பட்டுள்ள காரணக் காரியங்கள் அடிப்படையில் சிந்திக்கும் போது ஒரு பிரச்சினை ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதன் பெறுபேறுகள் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தற்போது நமது பாதுகாப்பு படையினர் மிக வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய திருப்திகரமான நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை மனச்சாட்சிக்கு ஏற்ற வகையில் அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதே எனது நம்பிக்கையாகும். சந்தேக நபர்கள் பலரும் பெருமளவு பொருட்களும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. 12 முக்கிய பயங்கரவாதிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பெருமளவான பொருட்களும் பாதுகாப்புத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் 13 முகநூல் கணக்குகள் தற்போது பாதுகாப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ளது. பயங்கரவாதிகளின் 41 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் வங்கி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட அனைவரினதும் வங்கிக் கணக்குகள், வீடுகள், சொத்துக்கள் போன்ற அனைத்தும் அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும். அதேபோன்று இந்த பயங்கரவாத அமைப்பிற்கு சிறிதளவிலேனும் உதவிபுரிந்தவர்களுக்கும் ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கும் இந்த பயங்கரவாத இயக்கத்தினால் ஒருவருக்கு தலா 20 இலட்ச ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதி விபரங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு 18 மில்லியன் ரூபா தொடர்பாக கண்டறியப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 15 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 04 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கைது நடவடிக்கைகள், சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்படும் பயங்கரவாதிகளின் சொத்துக்கள் ஆகியன பற்றிய விசாரணைகளும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு விடயங்களில் இந்த சர்வதேச பயங்கரவாத அமைப்பின் பின்புலம் பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகும். செப்டெம்பர் 11ஆம் திகதி பின்லேடனின் அல்கைதா அமைப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் மீது தாக்குதல் நடத்தியதில் சுமார் 2700 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அமெரிக்காவினால் இன்னும் உறுதியாக கூற முடியாதுள்ளது. அத்தோடு அமெரிக்காவின் பாதுகாப்பு மையமான பென்டகன் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. உலகின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் நவீன தொழிநுட்பத்துடன் பலம் வாய்ந்த நிலையிலுள்ள அமெரிக்காவினால் அத்தாக்குதலை தடுக்க முடியவில்லை.

ஏப்ரல் 21ஆம் திகதி நமது நாட்டில் இடம்பெற்ற தாக்குதலை நடத்திய பயங்கரவாத இயக்கத்தினர் உலகின் பலமான நாடுகள் அனைத்திலும் தாக்குதல் தொடுத்திருப்பதைப் பற்றி இந்த சபையிலுள்ள அனைவரும் அறிவீர்கள். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா, கனடா, மலேசியா, இந்தோனேஷியா மற்றும் இந்தியாவின் மீதும் பல தடவைகள் அவர்கள் தாக்குதல் தொடுத்துள்ளனர். இந்த நாடுகளினாலும் இவர்களது தாக்குதலை தடுக்க முடியவில்லை. பல ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர் இந்த பயங்கரவாத இயக்கத்தின் தலைமையகத்தை தேடி தாக்குதல்களை நடத்தின. சிரியா அவற்றுள் ஒன்றாகும். அவர்களது முக்கிய பயிற்சி முகாம் சிரியா என்பதை அறிந்து கொண்ட காரணத்தினாலேயே அங்கு பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பயங்கரவாத அமைப்பை ஒழிப்பதற்கு அதிக தாக்குதல்களை மேற்கொண்டு முக்கிய பணியை நிறைவேற்றிய நாடு ரஷ்யாவாகும். ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முக்கிய பணியை நிறைவேற்றியுள்ளார். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெருமளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதேபோன்று இங்கு நான் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் கடந்த காலத்தில் 30 வருடங்கள் நாமும் குண்டுச் சத்தங்களோடே வாழ்ந்தோம் என்பதை எம்மில் சிலர் மறந்து விட்டனர். சிலர் இத்தகைய குண்டு வெடிப்புகள் இலங்கையில் முதன்முறையாக இடம்பெற்றிருப்பதைப் போன்று பேசுகின்றனர். எனவே தனது அறிவு மற்றும் தெளிவுடன் நாட்டின் இறந்த காலம், சர்வதேச அரசியல் மற்றும் சர்வதேச பயங்கரவாதம் ஆகியவற்றோடு இந்த விடயங்களையும் கருத்திற்கொள்வது முக்கியமானதாகும். நான் இந்த நாட்டின் ஆறாவது ஜனாதிபதியாவேன். எனக்கு முன்பிருந்த ஐந்து ஜனாதிபதிகளின் காலப்பகுதியிலும் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிட்டு சிலர் பேசுகின்றனர். எனவே அரசியல் யதார்த்தம், கடந்தகால யுத்தத்திற்கு பின்புலமாக அமைந்த விடயங்கள் தொடர்பில் சரியான புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

நாம் பூகோள பயங்கரவாதம் பற்றி பேசுகின்றபோது அடிப்படையாக விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் இது இலங்கையின் பிரச்சினை மாத்திரமல்ல. இது உலகின் பிரச்சினையாகும். இது ஒரு சர்வதேச பிரச்சினையாகும். இதன் தலைமையகம் இலங்கையில் இல்லை. ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின்னர் ஏப்ரல் 23ஆம் திகதி இந்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் உலகின் எங்கேயோ ஒரு இடத்திலிருந்து கொண்டு இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலுக்கு தமது இயக்கம் பொறுப்பேற்பதாக குறிப்பிட்டிருந்தமை உங்களுக்கு நினைவிருக்கும். அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் சாய்ந்தமருதில் ஏற்பட்ட மோதல் மற்றும் வெடிப்புச் சம்பவங்களின் பின்னர் 04 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டதாக சர்வதேசத்தினால் கூறப்பட்ட உலகின் அனைத்து பலமிக்க நாடுகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் வெளியில் தலைகாட்டியுள்ளார். இலங்கை மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக கூறியிருந்தார். எனவே இந்த நிலைமை எவ்வளவு பாரதூரமானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் புட்டின், பிரித்தானியாவின் தெரேஷா மே ஆகிய அனைவரும் இந்த பயங்கரவாத தலைவர் இறந்து விட்டார் என்றே எண்ணியிருந்தனர்.

அவர்களது புலனாய்வுத் துறை, பாதுகாப்புத் துறை எவ்வளவு தூரம் முன்னேற்றமானது என்பதை நாம் அறிவோம். ஆயினும் இவர் 04 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்திருப்பதையிட்டு அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். தற்போது எமது நாட்டுக்கு வருகை தந்துள்ள எமது 08 நட்பு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்கும் நிபுணர்களும் என்னை சந்தித்தனர். இத்தாக்குதலினால் எம்மை விட அவர்களே விழிப்படைந்துள்ளனர். இது அவர்களுக்கு பாரியதொரு பிரச்சினையாகும். அந்த பயங்கரவாத தலைவர் எவ்வாறு உயிர்வாழ்கின்றார் என்பதே அவர்களது பிரச்சினையாகும்.

எனவே இவ்வாறான நிலைமைகள் பற்றி நாம் கவனத்திற்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். கௌரவ தலைவர் அவர்களே! கடந்த 10 நாட்களாக இந்த சர்வதேச பயங்கரவாதம் பற்றி அறிந்துகொண்ட விடயங்களுடனும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச பயங்கரவாத தாக்குதலினால் அறிந்துகொண்ட சிறு அறிவினாலும் இந்த பயங்கரவாதத்தின் பெயரை பயன்படுத்தப்போவதில்லை. ஏனெனில் உலகின் எந்தவொரு அரச தலைவரும் இந்த இயக்கத்தின் பெயரை உச்சரிப்பதில்லை. இந்த இரண்டு அல்லது நான்கு எழுத்துக்களை பயன்படுத்துவதனால் அவர்களது பயங்கரவாத இயக்கமே தேவையற்ற வகையில் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கின்றது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கூற்றொன்றை வாசித்தேன். “ஒருபோதும் இந்த இரண்டு அல்லது நான்கு எழுத்துக்களை கொண்ட இவ்வியக்கத்தின் பெயரை உலகின் எந்தவொரு தலைவரும் உச்சரிக்கக்கூடாது. அவ்வாறு பயன்படுத்துவதால் அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் அவர்களது நாட்டுக்குமே அங்கீகாரம் கிடைக்கின்றது” என்று கூறியுள்ளார். எனவே நானும் எனது உரையில் எந்தவொரு இடத்திலும் அந்த இரண்டு அல்லது நான்கு எழுத்து பெயரை உச்சரிக்கப் போவதில்லை. இந்த இயக்கம் பற்றி அறிய முயன்றபோது எனக்கு கிடைத்த தகவல்களுடன் வெளிநாட்டு புலனாய்வுத்துறையுடன் கலந்துரையாடுகின்றபோது அவர்கள் என்னிடம் கூறிய விடயம் இந்த இயக்கம் யாரை இலக்காகக் கொண்டுள்ளது என்பதாகும்.

இந்த பயங்கரவாத இயக்கம் மேலைத்தேய சிந்தனைக்கு எதிரான இயக்கமாகும். மேலைத்தேய சிந்தனைக்கு எதிராக உருவான இந்த இயக்கம், ஆரம்பத்தில் கிறிஸ்தவ சமயத்திற்கு எதிராகவும் சிலுவைக்கு எதிராகவும் போராடியது. ஒரு புறத்தில் அமெரிக்க பிரஜைகளும் அதற்கடுத்ததாக வெள்ளையர்களுமே அவர்களது முக்கிய இலக்குகளாகும். அதற்கடுத்தது கிறிஸ்தவர்கள் அவர்களது இலக்காகும். குறிப்பாக மேலைத்தேய சிந்தனைக்கும் சிலுவைக்கும் எதிரான அவர்களது போராட்டத்தில் வத்திக்கானில் தமது கொடி ஏற்றப்படும் தினமே தாம் வெற்றி பெற்றதாக அமையும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாம் இந்த நிலைமையை விளங்கிக்கொள்ள வேண்டும்.

கடந்த மாதம் பிரான்சின் மிகப் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீப்பற்றியது. அந்த சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும். இந்த நிலைமைகள் பற்றி நாம் பேசுகின்றபோது நாம் பல்வேறு துறைகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். புலனாய்வுத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த பயங்கரவாத அமைப்பையும் இதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் எமது நாட்டிலிருந்து முற்றாக அழிக்க வேண்டுமென நான் பாதுகாப்புத் துறைக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன். நான் குறிப்பிட்ட விடயங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள போதிலும் எனது கருத்தின் சாரம் அதுவே.

இந்த பிரச்சினை தொடர்பில் புலனாய்வு பிரிவு, பாதுகாப்புத் துறையினர் ஆகியோர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அத்தோடு இந்த மான்புமிகு சபையிலுள்ள பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் அரசியல் பிரதிநிதிகள், பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களை சேர்ந்த சமயத் தலைவர்கள் ஆகிய அனைவரும் ஒன்றினைந்து இந்த பிரச்சினையினால் முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்துள்ள விடயங்களையும் சிங்கள மக்களின் மனநிலையையும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

இன்றைய நிலையில் சிங்கள மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்வதோடு, முஸ்லிம் மக்களை சந்தேகிக்கின்றனர். முஸ்லிம் இனத்தவரை கண்டாலே குண்டு வெடித்துவிடுமோ அல்லது ஏதாவது அழிவு நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுகின்றார்கள். பாடசாலை மாணவர்கள் அச்சத்துடன் உள்ளனர். முஸ்லிம் குடும்பங்களின் நிலையும் அதுவே. அவர்களும் சிங்கள மக்கள் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்துடன் தான் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழ் மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்றைய தினம் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பித்தபோது வட மாகாணத்தின் நிலைமை மகிழ்ச்சிகரமாக இருந்தபோதிலும் அங்கும் அதிகளவிலான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

அத்தோடு ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதமும் வியப்பையே அளிக்கின்றது. சமூக ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் அனைத்திற்கும் இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நாட்டில் சமாதானம், அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படவும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் மக்களை அமைதிபடுத்துவதற்கும் ஏற்றவாறு செய்திகளை வெளியிடுவதில் பாரிய பொறுப்பு உள்ளது. சில சந்தர்ப்பங்களில் ஊடகங்களால் வெளியிடப்படும் செய்திகள் எமக்கு வியப்பை அளிக்கின்றன. வெடிபொருட்களுடன் 20 லொறிகள் வடக்கை நோக்கி சென்றுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி பிரசுரித்திருப்பதை நான் கண்டேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கிற்கு இராணுவ முகாம்கள் தேவையில்லை என்று தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வந்தார்கள். ஆனால் அண்மையில் அவர்களே வடக்கிற்கு இராணுவத்தினரை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள். அது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில் அவர்கள் இராணுவத்தினரின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுள்ளார்கள். அதேபோன்று இத்தகைய செய்திகளினால் அனைவரும் அச்சத்தில் ஆழ்த்தப்படுகின்றார்கள். சமூக வலைத்தளங்கள் செயற்படும் முறையும் வியப்பையளிக்கிறது. இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது ஊடக சுதந்திரம் என விடயங்களை முன்வைக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஊடகத்தின் பொறுப்பு என்னவென்பதை தெளிவாக புரிந்துகொள்வது மிக அவசியமாகும்.

தற்போது கிடைக்கப் பெற்றுள்ள புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் இயங்கிவரும் இந்த பயங்கரவாத அமைப்பில் 150க்கும் குறைவானவர்களே செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படியென்றால், நாம் மற்ற முஸ்லிம் மக்களையும் இந்த பயங்கரவாதிகளின் பக்கமாக தள்ளப் போகின்றோமா இல்லையா என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். கடந்த 30 ஆண்டுகால யுத்த அனுபவங்களை நோக்குவோமானால் 80களின் ஆரம்ப காலகட்டத்தில் எல்ரீரீஈ அமைப்பினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோது எமது சிங்கள மக்கள் தமிழ் மக்களை பாரிய சந்தேக கண்ணோட்டத்துடன் அவதானித்தனர். அனைத்து தமிழர்களும் எல்ரீரீஈ பயங்கரவாத உறுப்பினர்கள் என்றே சந்தேகித்தனர். அதனால் தேசிய ஒற்றுமை இல்லாமற் போனது. நல்லிணக்கம் இல்லாது போனது. சிங்கள, தமிழ் மக்களுக்கிடையே நம்பிக்கையின்மை, சந்தேகம், அச்சம் ஆகிய அனைத்தும் தோற்றுவிக்கப்பட்டன. அதன் காரணமாகவே நாம் பிரிந்தோம். 83 கறுப்பு ஜூலை கலவரங்களினால் தமிழ் மக்களின் சொத்துக்களும் உயிர்களும் பாரியளவில் அழிக்கப்பட்டதனால் அதிகளவிலான தமிழ் இளைஞர்கள் எல்ரீரீஈ அமைப்பில் தஞ்சமடைந்தனர். எல்ரீரீஈ இயக்கம் வலுவடைவதற்கு 83 ஜூலை கலவரமே பிரதான காரணியாக அமைந்தது.

எல்ரீரீஈ அமைப்பு வலுவடைந்தமைக்கும் அந்த யுத்தம் 30 வருட காலம் நீடிப்பதற்கும் அடிப்படை காரணிகளாக அமைந்த விடயங்கள் தொடர்பிலும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரையும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்த்ததே அதற்கு அடிப்படையாக அமைந்தது. இதனால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் சந்தேகத்தை இல்லாதொழிப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் இன்று உங்கள் முன்வைக்கின்றேன்.

இந்த மான்புமிகு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். எல்ரீரீஈ. யுத்தம் ஆரம்பமானபோது தமிழ் மக்களை சந்தேகத்துடன் பார்த்ததைப் போன்று இந்தப் பிரச்சினை காரணமாக முஸ்லிம் மக்கள் அனைவரையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டாம். விசேடமாக சிங்கள பௌத்த மக்களிடம் நான் ஒரு முக்கிய வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன்.
வெகுவிரைவில் இந்த நிலைமையை மாற்றி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும். ஆனாலும் சில பிரிவினைவாத அமைப்புகள் சமூக ஊடகங்களின் ஊடாக வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் தவறான செய்திகளினால் மக்களை திசை திருப்பும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றன. சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையே பிளவு ஏற்பட்டால், முஸ்லிம் மக்கள் பாரிய அச்சத்திற்கு ஆளாக்கப்பட்டால், அவர்கள் வேகமாக இந்த பயங்ரவாத அமைப்பை தஞ்சமடைய நேரிடலாம். சாதாரணமாக முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற கிராமங்களுக்கு செல்லும் நான் ஒரு விடயத்தை அவதானித்துள்ளேன். சிங்கள கிராமங்களுடன் ஒப்பிடுகையில் அங்கு அதிகமான இளைஞர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அந்த இளைஞர்களை நாம் பாதுகாக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் பயங்கரவாதிகளுடன் இணைந்துவிடக் கூடாது. அதனால் எமது பாதுகாப்பு செயற்பாடுகளில் பொலிசாரும் புலனாய்வு பிரிவினரும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். முஸ்லிம் மக்கள் மனவேதனை அடையாதவாறு தமக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகின்றது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஏற்பட வேண்டும். அதன் மூலமாகவே முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்துடன் இணைவதை தடுக்க முடியும். அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி இராணுவத்தினர் மீதும் புலனாய்வு பிரிவினர் மீதும் நம்பிக்கை வைப்பது அவசியமாகும்.

பாதுகாப்பு துறையினருக்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. தேவைப்படும் சந்தர்ப்பங்களில் படைத் தளபதிகளுடன் கலந்துரையாடி தேவையான முடிவுகளை மேற்கொள்ளுமாறு புதிய பாதுகாப்பு செயலாளருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன். அவர்களது நடவடிக்கைகளுக்கு நான் எந்த தடையையும் ஏற்படுத்த மாட்டேன். சில ஊடகங்களில் இராணுவத்தினருக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடுவதை நான் அவதானித்தேன். தமக்கு மேலும் சில அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர்கள் கோரினார்கள். இதற்கு மேலும் இராணுவத்தினருக்கு வழங்குவதற்கு எந்த அதிகாரமும் என்னிடம் இல்லாத வகையில் தேவையான அனைத்து அதிகாரங்களையும் அவசரகால சட்ட அமுலாக்கத்துடன் நான் அவர்களுக்கு வழங்கியுள்ளேன். அவசரகால கட்டளையை வர்த்தமானியில் பிரசுரித்து இராணுவத்தினருக்கு அதிகாரத்தை வழங்கியதன் பின்னர் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க ஆற்றிய உரை உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நான் நினைக்கின்றேன்.
அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் துவிச்சக்கர வண்டியை கேட்டதாகவும் ஆனால் தமக்கு மோட்டார் சைக்கிளே கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பயங்கரவாதத்தை அழிப்பதற்காக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியினால் அவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட வாய்ப்பு கிடைத்துள்ளமையினாலேயே அவர் அவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

தற்போது நாம் எமது புலனாய்வு பிரிவுகளை மறுசீரமைத்து வருகிறோம். பாதுகாப்புத் துறையையும் பொலிஸ் திணைக்களத்தையும் மறுசீரமைப்புக்குள்ளாக்கி உள்ளோம். பொலிஸ் துறையில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. பொலிஸ் திணைக்களத்தை எனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து நான்கு மாதங்களே ஆகின்றது. ஏப்ரல் 21ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பு பொலிஸ் திணைக்களத்தை எனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு கருத்து நிலவி வந்தது. போதைப்பொருள் ஒழிப்பிற்காக பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்ட சித்திரை மாத உறுதிமொழி, திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வுகள், அதனை உலக மரபுரிமையாக அறிவிக்குமாறு பரிந்துரை முன்வைக்கப்பட்டமை, போதைப்பொருள் ஒழிப்புக்காக பொலிஸ் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். கடந்த மூன்றாண்டு காலமாக பொலிசாருக்கு கள்ள சாராயத்தை கைபற்றுவதற்கான அதிகாரம் கூட வழங்கப்பட்டிருக்கவில்லை. பொலிஸ் திணைக்களத்தை எனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும்போது 30 பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு வாகனம் கூட இருக்கவில்லை. இந்நிலைமைகளை மாற்றி பொலிஸ் திணைக்களத்திற்கு புதிய தோற்றத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டேன்.

உலகில் எங்கேயோ காணப்பட்ட பிரச்சினை இங்கே வந்து வீழ்ந்ததால் மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் மறைந்து போனதோடு புதிய பிரச்சினை தலைதூக்கியுள்ளது. நாட்டு மக்கள் இது தொடர்பில் அச்சமடைய தேவையில்லை. பாதுகாப்புத் துறையினர் வெற்றிகரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளோம். பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய 99 சதவீதமானோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 3 நாட்களுக்குள் இத்தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கு எமது புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இன்று காலையிலும் புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடினேன். தேசிய பாதுகாப்பு சபை இரண்டு அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறைதான் கூட்டப்படும். ஆகையினால் நான் காலையிலும் மாலையிலும் படையினருடன் கலந்துரையாடி இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றேன். இதனுடன் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் குறைபாடுகளை தோற்றுவிக்க நான் இடமளிக்க மாட்டேன்.

பயங்கரவாதம் என்பது உலகில் எப்போது எந்த இடத்தில் தோற்றும் என்பதை யாராலும் ஆருடம் கூற முடியாது. டொனால்ட் ட்ரம்புக்கும் புட்டினுக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் கூட பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பில் முன்கூட்டியே கூறமுடியாது. பயங்கரவாதத்தின் இயல்பு அதுதான். பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியுமாக இருந்தால் உலகின் செல்வந்த நாடுகள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது. அதனால் எம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்வோம். மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் எமது நாட்டு மக்களின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. அனைத்து இனங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நாம் வலுவடைய செய்ய வேண்டும்.

நான் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒற்றுமையுடன் செயற்படுவோம் என்ற கருத்தையே முன்வைத்து வருகின்றேன். இந்த மான்புமிகு சபையிலும் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன். இத்தகைய பிரச்சினைகளின்போது ஒருவருக்கொருவர் குற்றஞ்சுமத்தி விமர்சனங்களை முன்வைக்காது பிரச்சினையின் தீவிரத்தன்மையை புரிந்துகொண்டு இணைந்து செயற்பட வேண்டும். விமர்சனங்கள் அவசியமானவையே. ஆனால் அவை நியாயமானதாக இருக்க வேண்டும். குரோதத்தினால் மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள், சரியான தகவல்கள் தெரியாமல் மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள், தவறான புரிந்துணர்வுடன் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பலனற்றவை. உலகின் எந்த நாட்டில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்தே செயற்படுவார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் நான் எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். அண்மையில் முன்னாள் இராணுவ தளபதிகளுடன் வருகை தந்து நாட்டில் முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான பரிந்துரைகளை அவர் சமர்ப்பித்திருந்தார். சிலர் நானே இந்த அமைப்பின் தலைவர் என நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் போல. ஏனெனில் அவ்வளவு தூரத்திற்கு அவர்கள் என் மீதான போலியான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் சேர்ந்த அனைவருக்கும் மனவருத்தத்துடனாவது இந்த விடயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். உரிய புரிந்துணர்வு இல்லாத காரணத்தினாலேயே அவர்கள் அவ்வாறான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது நம் அனைவரதும் பாரிய பொறுப்பாகும். உங்களுக்கும் எனக்கும் அரசியல் செய்வதற்கும் ஆட்சி புரிவதற்கும் ஒரு நாடு இருக்க வேண்டும். பாரிய சர்வதேச பயங்கரவாத அமைப்பொன்று எமது நாட்டை அழிக்க முயலும்போது அந்த அமைப்பை நாட்டிலிருந்து வெளியேற்றுவது எவ்வாறு என்பது தொடர்பில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கைகோர்த்து கடமையாற்ற முன்வரவேண்டும்.

அனைத்து கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வ மதத் தலைவர்கள் ஆகிய அனைவரிடமும் நான் மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்ளும் விடயம் ஒன்றே. நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயலாற்ற வேண்டும். அதனையே நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். ஒருவரையொருவர் குற்றஞ்சுமத்துவதை விடுத்து நாட்டின் தற்போதைய சூழ்நிலையை சரிவர புரிந்துகொண்டு இந்த பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டு மக்களுக்கு அமைதியான சுதந்திரமான நாட்டைக் கட்டியெழுப்பவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
நன்றி
வணக்கம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.05.07

Web Design by Srilanka Muslims Web Team