இரத்தினபுரியில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமியக் கலாச்சார சீருடையில் பாடசாலைகளுக்கு வரத் தடை - Sri Lanka Muslim

இரத்தினபுரியில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமியக் கலாச்சார சீருடையில் பாடசாலைகளுக்கு வரத் தடை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.எல்.எஸ்.முஹம்மத்
இரத்தினபுரி


கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சில அரச பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமியக் கலாச்சார சீருடையில் பாடசாலைகளுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் பெற்றோர்கள் முறையிட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்ட முஸ்லீம்கள் எதிர்நோக்கி வரும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக சபரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்கவை அவரது ஆளுநர் அலுவலகத்தில் மாவட்ட முஸ்லிம் தூதுக்குழு நேற்று (10) சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்படி பிரச்சினை பற்றியும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் அல்ஹாஜ்.இப்லார் எம்.யஹ்யா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்

“இரத்தினபுரி நகரிலுள்ள ஒரு சிங்களப் பாடசாலை உட்பட மற்றொரு பாடசாலையில் இஸ்லாமியக் கலாச்சார சீருடையில் வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு தமது முந்தானை உட்பட காற்சட்டைகளை கழற்றி விட்டு பாடசாலைக்குள் வருமாறு பாடசாலை நிர்வாகத்தினரால் முஸ்லீம் மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது”,என அவர் தெரிவித்தார்.

சபரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க இதற்கு பதிலளித்து உரையாற்றுகையில்

“முஸ்லிம் மாணவிகள் தமது கலாச்சார சீருடையில் பாடசாலைக்கு வருவதை கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் அனுமதிக்கின்ற நிலையில் சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகளுக்கு இடம்பெற்று வரும் இந்த அநியாயங்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மிக விரைவில் இந்த விடயம் தொடர்பாக அனைத்து வலயங்களினதும் கல்விப் பணிப்பாளர்களை அழைத்து பாடசாலை அதிபர்களை தெளிவுபடுத்துமாறு கோரவுள்ளேன்”,எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இதன்போது புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடைப் பிரச்சினை பற்றி கேட்டறிந்து கொண்ட ஆளுநர்

“பயங்கரவாதத் தாக்கதல்களை இலக்காகக் கொண்டு ஒரு இனத்தின் உரிமைகளை அழிக்க முயற்சிக்கும் அராஜக நடவடிக்கைகளை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது”,எனவும் அவர் தெரிவித்தார்.

சபரகமுவ மாகாண ஆளுநருடனான இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா இரத்தினபுரி மாவட்டக் கிளையின் செயலாளர் அஷ்ஷேய்ஹ் றிபா ஹஸன் மற்றும் இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹான் உட்பட மாவட்ட மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

IMG_20190510_092428

Web Design by Srilanka Muslims Web Team