நோக்கமே புரியாது மதத்தின் பேரால் மடியும் மனிதர்கள் » Sri Lanka Muslim

நோக்கமே புரியாது மதத்தின் பேரால் மடியும் மனிதர்கள்

2336

Contributors
author image

நஜீப் பின் கபூர்

ஐஎஸ்.பற்றிய தகவல்களும் அதன் இன்றைய நிலையும்
அறிவூட்டப்பட வேண்டிய நமது புலனாய்வுத் துறையினர்
நோக்கமே புரியாது மதத்தின் பேரால் மடியும் மனிதர்கள்


மதத்தின் பேரால் மனிதர்களைக் கொல்லும் இப்படிப்பட்ட சிந்தனையுள்ளவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து பிறக்கின்றார்கள்? வளர்க்கப்படுகின்றார்கள்.? அவர்கள் ஏன் இத்தகைய கொடூரங்களைச் செய்கின்றார்கள்? இவர்களை இயக்குவது யார்? அவர்களின் பலம் பலயீனங்கள் என்ன என்பதை இந்தவாரம் பார்ப்போம்.

இவர்களை ஒழித்துக்கட்ட களத்தில் இறங்கி இருக்கின்ற நமது படைத்தரப்பினருக்கு – உளவுத்துறையினருக்கு இந்த நாட்டில் வாழ்கின்ற சாதாரண முஸ்லிம்களில் இருந்து இவர்களை வேறுபடுத்தி இனம் காண்பதிலுள்ள நெருக்கடிகள் எவை? முஸ்லிம்களின் சமூக செல்பாடுகளில் இவர்கள் எந்தளவுக்கு அறிவூட்டப்பட்டிருக்கின்றார்கள்.?

இப்போது இந்த ஐஎஸ்ஐஎஸ் என்றால் என்ன என்பதனை பார்ப்போம். அவர்களின் வார்த்தையில் இதனை சொல்வதாக இருந்தால் இவர்கள் முழு உலகையும் தமது இஸ்லாமிய அரசு என்ற கொடியின் கீழ் கொண்டு வரப் போராடுகின்றவர்கள்.

இவர்கள் யார்

தாக்குதலில் பின்னர் கைது செய்யப்பட்ட சஹ்ரனின் முக்கிய சகாக்கள் தற்போது கொடுத்துள்ள வாக்குமூலப்படி இவர்களை ஏற்றுக் கொள்ளாத எவரும் இந்த உலகில் வாழத்தகுதி இல்லாதவர்கள்.! எனவேதான் முஸ்லிம் அல்லாத எல்லேரையும் கொல்வது புனிதமான செயல் என்று சஹ்ரான் எங்களுக்குப் போதித்ததார் என்று மாவனெல்ல சிலை உடைப்பு முக்கிய சந்தேக நபர் வாக்கு மூலம் கொடுத்திருக்கின்றார்.

இந்தக் கொலைகாரர்களிடம் நாம் கேட்பது இதே போன்று கிருஷ்த்தவ, இந்து அல்லது பௌத்த மக்களும் சிந்தித்து உலகில் உள்ள முஸ்லிம்களை வேட்டையாடத் துவங்கினால் நிலமை என்னவாக இருக்கும்.

அப்படியானால் இஸ்லாமிய நாடுகளில் இவர்கள் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொண்டு குவித்தது-குவிப்பது என்ன நியதிப்படி? இவர்களின் கொள்கைப்படி இவர்கள் மட்டும்தான் இந்த உலகில் வாழமுடியும்! அவர்களின் அரசு மட்டுமே இந்த உலகை ஆட்சி செய்ய முடியும்!

சஹ்ரானை நாம் தேசிய தவ்ஹீத் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்றி இருந்தோம். அவர் பலத்காரமாக மீண்டும் அந்தப் பதவியில் வந்து அமர்ந்து கொண்டார்.

இந்த படுகொலைகளை எம்மால் செய்ய முடியாது என்றும் வாதாடினோம் அதனைக் கேட்காமல் அவசர அவசரமாக சிலரை அவர் தற்கொலைத் தாக்குதலுக்கு தயார் செய்துவிட்டார் என்றும் கம்பலையில் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்கள்.

மாவனெல்லையில் சரணடைந்த இவரது மனைவி எனது கணவனிடத்தில் அண்மைக்காலமாக அதிக பணம் புலக்கத்தில் இருந்தது அவர் எங்களுக்குத் தராளமாகச் செலவு செய்தார் என்று வாக்குமூலம்; கொடுத்திருக்கின்றார்.

தலைவர்

இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தற்போதய தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி புனைப் பெயர்கள் டாக்டர் இப்ராஹீம் மற்றும் டாக்டர் துவா. 1971 ஜூலை 28 பிறந்தவர். ஈராக் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர் தற்போதய வயது 48. சுன்னி முஸ்லிம். ஒரு ஈராக்கியன்.

1999ல் இவர்கள் ஜமாஅத்துல் அல் தவ்ஹீத் வல் ஜிஹாத் என்ற அமைப்பை நிறுவினார்கள். 2004ல் அல்ஹைடாவின் ஒரு பிரிவு இவர்களுடன் இணைந்து கொண்டது.

இஸ்லாமிய அரசு

2006 அக்தோபர் 13ல் அவர்கள் ஈராக்கில் சில பிரதேசங்களைக் கைப்பற்றி தமது அரசை நிறுவினார்கள். பின்னர் அமெரிக்க, இஸ்ரேல் ஆயுதங்களின் உதவியுடன் சீரியாவின் சில நிலப்பிரதேசங்களையும் தனது இஸ்லாமிய அரசுடன் இணைத்துக் கொண்டார்கள்.

சீரியாவில் ஈரான் நட்பு ஆசாத் அரசை விரட்டும் நோக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இவர்களுக்குப் பகிரங்கமாக ஆயுதங்களை வழங்கியது. இவர்களுக்கு சவூதி பெரும் தொகையான பணத்தை கொடுத்துதவியது. இது பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிரான முக்கூட்டு நடவடிக்கை.

தனது சகபடியான சிரியா அதிபருக்கு எதிரான இந்த கூட்டணிக்கு எதிராக ஈரானும் பதிலடி கொடுத்தது. ஈரான் நேரடியாகவே சிரியாவில் போய் இறங்கியது. ரஷ்யாவும் பக்கதுனைக்கு வந்தது. ரஷ்யா, ஈரான், சீரியா படைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் சிதறி ஓடியது ஐஎஸ் படைகள்.

சிரியாவில் தனது கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பிரதேசங்களில் இருந்தும் பக்தாதியின் இஸ்லாமிய அரசுப்படைகள் 2019 மார்ச் 23ல் விரட்டியடிக்கப்பட்டது. இதனால் இன்று அவர்கள் பின்வாங்கி தமது போராட்டத்தை வேறு வழிகளில் துவங்கி இருக்கின்றார்கள். அங்கிருந்து விரட்டப்பட்டவர்களில் பலர் தற்போது தமது சொந்த நாடுகளில் வந்து இறங்கி இருக்கின்றார்கள்.

இராணுவ பலம்

எமக்குத் தெரிந்த தகவல்படி அவர்கள் தமது இஸ்லாமிய அரசை சீரியா-ஈராக் பிராந்தியங்களில் நிறுவி பலமாக இருந்த நாட்களில் அங்கு அவர்களின் இராணுவ ரீதியிலான படைப் பலம் 40000 க்கும் 45000ம் இடைப்பட்டது.

பிராந்திய ரீதியில் இந்த எண்ணிக்கை, மத்திய கிழக்கு நாடுகள் -20000, வட ஆபிரிக்கா நாடுகள் -7500, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் -6000, மத்திய ஆசிய நாடுகள் -6000, மேற்கு ஐரோப்பிய நாடுகள் -1000, கிழக்காசிய நாடுகள் -1000, தென்கிழக்காசிய நாடுகள் -750, அமெரிக்கா -300, அவுஸ்ரோலிய -80, நியுசிலாந்து -20. இந்தியா -220, இலங்கை -30, மலைதீவு -05.

இந்தப் போராட்டக்காரர்களில் 5000பெண்களும் 5000சிறுவர்களும் அடங்குகின்றார்கள். அத்துடன் உலகில் 112 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கத்தவர்கள்

உலகம் பூராவிலும் இந்த அமைப்புக்கு 2 முதல் 4 இலட்சம் வரை அங்கத்தவர்கள் இருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. இவர்கள் அனைவரும் ஆயுததாரிகள் அல்ல.

நமது நாட்டில் இவர்கள் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கியது போல்; உலகில் நாடுகளில் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்களின் செயல்பாடுகளுக்காக பெருந்தொகையான பணம் வழங்கப்படுவதை இங்கு பெறப்பட்டவர்கள் கொடுக்கின்ற வாக்கு மூலங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.

உள்நாட்டில் இவர்களின் கடும் போக்காளர்கள் 200 பேர் வரை என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். அவர்களில் பெரும்பாலானவர்கள் கைதாகி இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இலங்கையில் இந்த அமைப்பு அரசியல் பிரிவு, சமயப் பிரிவு, இராணுவப் பிரிவு என்று வைத்து இயங்கியது என்று விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது. முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர் சுதந்திரக் கட்சி கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை இழந்ததற்குக் காரணம் இந்த சஹ்ரான் மேற்கொண்;ட பிரச்சாரம் என்று கூறி இருந்தார். இதிலிருந்து சஹ்ரான் பிரதேசத்தில் செல்வாக்குள்ள ஒரு மனிதனாக இயங்கி இருப்பபது புரிகின்றது.

வருமான வழிகள்

இந்த அமைப்புக்கு நாம் முன்பு சொன்ன வழிகளில் நேரடியாக இராணுவ மற்றும் பணரீதியான உதவிகள் கிடைத்தாலும், இந்த அமைப்புக்கு பணம் கிடைக்கின்ற பிரதான வழி உலகிலுள்ள யூத அமைப்புக்களிடமிருந்தும், தனவந்தர்களிடத்திலிருந்தும் வந்து சேருகின்றதது. மேலும் போதைக் கடத்தல்களின் இவர்களுக்குப் பணம் கிடக்கின்றது.

என்னதான் மூளைச்சலவை செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் இதனை இஸ்லாத்துக்கான போராட்டம் என்று சொன்னாலும் பெரும்பாலானோர் இதற்காக அமெரிக்காவைக் குற்றம்சாட்டினாலும் இது சியோனிசிட்டுக்களால் முன்னெடுக்கப்படுகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு மாபெரும் திட்டம்.

இதனை அவர்கள கச்சிதமாக – வெற்றிகரமாக நெறிப்படுத்தி வருகின்றார்கள். திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் உலகலவிய அமெரிக்கா நலன்களை பாதுகாத்தே இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அமைப்பில் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் என்ற பெயரில் 2000 க்கும் 3000 க்கும் இடைப்பட்டவர்கள் இயங்குகின்றார்கள். இவர்கள் அனைவரும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக இந்த அமைப்பை இயக்குகின்றவர்கள் இவர்களே என்பது கட்டுரையாளன் கணிப்பு.

விளம்பரத்துக்கான தாக்குதல்

இலங்கையில் அப்பாவி கிருஷ்தவர்கள் மீது ஏன் இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டது என்றால். இதற்கு முக்கிய காரணம் தற்போது அவர்களது இஸ்லாமிய அரசு முற்றாக செயலிழந்த விட்டதால் இந்த இயக்கத்தின் அங்கத்தவர்கள் அபிமானிகளிடையே ஒரு பின்னடைவு ஏற்படும் என்பது இயல்பானதே.

இந்த பின்னடைவிலிருந்து தமது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த்தி தொடர்ந்தும் தம்முடன் வைத்துக் கொள்கின்ற நோக்கத்திலே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது எமது கருத்து. இதனை நாம் துவக்கக் கட்டுரையிலே சொல்லி இருந்தோம். இப்போது ஜனாதிபதியும் சில தினங்களுக்கு முன்னர் நமது கருத்தை உறுதிப்படுத்தி பேசி வருகின்றார்.

இத்தாக்குதலுடன் ஐந்து வருடங்கள் தலைமறைவாக இருந்த பக்தாதி நேரடியாகத் தோன்றியதும் தான் இன்னும் நலமாக இருக்கின்றேன் என்பதனை காட்சிப்படுத்தியதும் எமது வாதத்தை மேலும் உறுதி செய்கின்றது.

அமைதி நிலவுகின்ற இப்படிப்பட்ட ஒரு நாட்டில் சக்கிவாய்ந்த குண்டுகளைப் பாவித்து மனிதர்களைக் கொண்டொழிப்பது என்பது ஒரு பெரிய காரியமோ வீரச் செயலோ அல்ல. இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள்தான் இதனை முன்னெடுக்கின்றார்கள் என்ற கருத்தை எம்மைப் போன்றவர்கள் முன்வைக்கின்ற போது அப்படியானால் இதில் ஏன் முஸ்லிம்கள் பங்கு கொள்கின்றார்கள் என்ற ஒரு வலுவான கேள்வி எழுப்பப்படுவது நியாயமானது.!

உள்நாட்டில் இந்தத் தாக்குதலை நடாத்தியவர்கள் மதபோதகர்கள் பேச்சில் கவரப்பட்டு அவர்கள் சொல்வதுதான் மாதம் என்று நம்பியவர்கள். இவர்களை தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுவதற்கான மனவலிமையை கொடுப்பதற்கு பேதனைகள் நடாத்தப்படுகின்றன.

மூளைச்சலவை செய்வதற்கு தற்காலத்தில் நவீன மருத்துவ வசதிகள் இருக்கின்றன. கருத்தியல் ரீதியிலான சிந்தனைகளுடன் இவர்களுக்கு மருந்து வகைகளும் பாவனைக்கு வழங்கப்பட்டிருக்கலாம். எனவேதான் தாக்குதல்தாரிகள் பாவிப்புக்கு என இருந்த இலட்சக் கணக்கான ரூபாய் பெருமதியான மருந்து வகைகள் கைப்பற்றபட்டிருந்ததை பொலிசார் சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

அத்துடன் குண்டுதாரிகள் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதும் குறிபிடத்தக்கது. அவர்களின் மூலம் உள்நாட்டிலும் இந்த வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க முடியும்.

எமது அவதானப்படி இப்படி ஒரு தாக்குதலை ஆள் ஆடையாளம் தெரியாமல் மேற்கொள்வதற்கு நிறையவே வழிமுறைகளை இவர்கள் தேர்ந்;தெடுத்திருக்கலாம். ஆனால் அவ்வகையான எந்த முறைகளையும் இவர்கள் பின்பற்றவில்லை.

இதனை நாங்கள்தான் செய்தோம் என்றவகையில் இந்த செயல் அவர்களால் புரியப்பட்டிருக்கின்றது. தாக்குதலுக்குத் தேவையான வெடிபொருட்கள் உள்நாட்டில்லேயே தயாராகி இருக்கின்றது. இதானல் அந்த தொழிநுட்பத்தைத் தெரிந்தவர் ஒருவர் அல்லது சிலர் உயிருடன் இருந்தாலும் அவர்களினால் ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடுவது என்பது ஒரு பெரிய காரியமாக இருக்க மாட்டாது.

தொழிநுட்பத்தைத் அறிந்தவர்களை ஒருபோதும் இந்த அமைப்பு இழந்திருக்க மாட்டார்கள். அவர்கள் வெளியில் இருப்பார்களேயானால் அது மிகவும் ஆபத்தானது என்பதனை பாதுகாப்புத்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் படிதத்வர்களாக இருந்தாலும் அவர்களது புரிகின்ற செயல்பாடுகள் முட்டால் தனமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதுகூட நெறிப்படுத்துகிறவர்களின் திட்டமிட்ட ஏற்பாடு என்பது எமது கருத்து.

எந்தப் பிரிவு முஸ்லிம்

கட்டுரையாளன் சொந்த அனுபவமொன்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புக்கின்றேன். பாதுகாப்புத் தரப்பு அல்லது புலனாய்வுத்துறை முஸ்லிம்களின் சமூக, சமய விடயத்தில் சில பிழையான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் நான் ஒரு புதிய இடத்தில் குடியேறி இருந்தேன். பிரதேசத்தில் புதிதாக வந்து குடியேறியவர்களை உளவுத்துறையினர் பொதுவாக தேடிவந்து விசாரித்தனர். கடந்த திங்கற் கிழமை (06.05.2019) அதற்கு நானும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது.

நான் யார் என்பதை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், தற்போது முழுநேரமும் ஊடகத்துறையில் செயலாற்றி வருவதும் அதற்காக ஆதாரங்களை காட்டியபோது அதனை அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றோன்.

அவர்கள் என்னிடத்தில் இப்படி சில கேள்வியை எழுப்பினார்கள். பள்ளிக்கு ஐவேளையும் போவீர்களா? அதற்கு எனது நிலைப்பாட்டைக் கூறினேன்.

நீங்கள் முஸ்லிம்களில் எந்த பிரிவைச் சேர்ந்தவன் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அப்படி என்று எதனைக் கேட்கின்றீர்கள் என்று நான் திருப்பி அவர்களிடம் கேட்டபோது, தப்லீக், தவ்ஹீத் என்று இன்னும் பல நிகாயாக்கள் உங்களில் இருக்கின்றதுதானே அதில் எந்தப் பிரிவு என்பது அவர்களது கேள்வியாக இருந்தது.

நான் இதில் எந்தப் பிரிவையும் சேர்ந்தவன் அல்ல என்று அவர்களிடம் கூறியதுடன் அப்படி ஏதாவது ஒரு குழுவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் ஒரு முஸ்லிம்முக்குக் கிடையாது என்று அவர்களுக்கு விளக்கம் கொடுத்த போது, எந்தப் பிரிவையும் சேராது நீங்கள் எப்படி ஒரு முஸ்லிமாக இருக்க முடியும் என்று அவர்கள் என்னைத் திருப்தி திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இது விடயத்தில் எனது கருத்தில் அவர்கள் திருப்தி கொள்ளவில்லை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. அவர்கள் தெரிந்து வைத்திருப்பது முஸ்லிம்கள் இந்த ஏதாவது ஒரு பிரிவில்-அமைப்பில் அங்கத்தவராக இருந்தால் மட்டுமே ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியும் என்பது அவர்கள் வாதமாக இருந்தது.

இது போன்ற ஒரு பாரதூரமான தேடுதல் நடவடிகைகளை மேற்கொள்கின்ற நேரத்தில் நமது உளவுத்துறையினர் அறிவூட்டப்பட வேண்டும். அத்துடன் இந்த ஐஎஸ்காரர்களின் பின்னணி பற்றிய தெளிவுகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான குற்றவாளிகளை இனம் காண்பது அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

அவர்கள் 45 நிமிடங்கள் வரை மிகவும் நட்பு ரீதியாக என்னை விசாரித்ததுடன் நான் எழுதுகின்ற ஊடகங்கள் பற்றியும் குறித்துக் கொண்டு போனார்கள்.

Web Design by The Design Lanka