இப்படியும் ஒரு காலம் நிலவியது ; எல்லா இனத்துப் பேரப் பிள்ளைகளுக்கும் ஒரு பாட்டன் சொல்லும் பழம் கதைகள் » Sri Lanka Muslim

இப்படியும் ஒரு காலம் நிலவியது ; எல்லா இனத்துப் பேரப் பிள்ளைகளுக்கும் ஒரு பாட்டன் சொல்லும் பழம் கதைகள்

MAUBAGURU

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பேராசிரியர் மெளனகுரு


எழுதியுள்ள இந்த பதிவினை தமிழ் முஸ்லிம் நண்பர்கள் வாசிக்கவும் ;

இப்படியும் ஒரு காலம் நிலவியது –
மம்மது கடையும், கச்சிக்காக்காவும்…

எல்லா இனத்துப் பேரப் பிள்ளைகளுக்கும் ஒரு பாட்டன் சொல்லும் பழம் கதைகள்

இப்போது எனக்கு 76 வயது
1949 ஆம் ஆண்டு அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும்’

இது ஏறத்தாள 70 வருடங்களுக்கு முந்திய கதை
இன்றைய தலைமுறை கருவில் இருக்காத காலம்
அமிர்தகளி கிராமத்தில் காத்தான்குடி முகம்மது ஓர் பெரிய சில்லறைக் கடை வைத்திருந்தார்,

அங்கு இருந்த ஒரே ஒரு சில்லறைக்கடை அது

மம்மது கடை என்றே அது அழைக்கப்பட்டது

முகம்மது மம்தானார்

மட்டக்களப்பு நகரிலும் கிராமப் புறங்களிலும் அக்காலத்தில் முஸ்ஸிம்கள் பல கடைகள் வைத்திருந்தனர்

பெரும்பாலோர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள்

சாவலுடைய தேநீர்க் கடை மட்டக்களப்பில் பிரசித்தம்
மட்டக்களப்பு தமிழ் மக்கள் நாவில் சாஹுல் சாவலானார்

ஈசிப் பாசியாருடைய பலசரக்குக் கடை
இன்னும் பிரசித்தம்
மட்டக்கள்ப்பு தமிழ் மக்கள் நாவில் யூசுப் ஹாஜியார் ஈசிப்பாசியாரானார்.

தமிழர்கள் இஸ்லாமியப் பெயர்களைத் தமதாக்கிகொண்ட முறைமை அது

சாஹுலும் யூசுப் ஹாஜியாரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை

இவ்வண்ணமே காத்தான்குடியிலும் பல தமிழ்ப் பெயர்கள் சிற்சில வேறு பாடுகளுடன் இஸ்லாமியரால் உச்சரிக்கப்பட் டது

தமிழர்களும் அதனைப் பொருட் படுத்தவில்லை

பெயர்கள் அங்கு முக்கியமல்ல

மனித உறவே அங்கு நிலவியது

நான் கூற வருவது எனது சிறு வயதில் எனக்கு அறிமுகமான

எங்களூர் மம்மதுக் காக்கா கடை பற்றி

சகல சாமான்களும் அங்கிருந்தன,

அத்தியாசிய சாமான்களான அரிசி பருப்பு மாசி வெண்காயம் என்பவற்றுடன் எமக்குப் பிடித்தமான பலவகை மிட்டாய்கள் வர்ண வர்ண நிறங்களில் அங்கு இருந்தன மிட்டாயை நாங்கள்

முட்டாசி

என்று அன்று கூறினோம்

அம்மா என்னைச் சாமான் வாங்க என் மாமாவுடன் அக்கடைக்கு அனுப்புவாள் .எனக்கோ அந்த வர்ண வர்ணமுட்டாசிகளில்தான் கண்

மிக நீளமான சாடிகளில் நிரப்ப்பட்டு வரிசையாக அவை வைக்கப்பட்டு இருக்கும்

அதிலும் எனக்குப் பிடித்த பல்லி மிட்டாய் ஒரு சாடியில் அங்கு இருந்தது

மாமாவுடன் போகும் எனக்கு மிட்டாயும் கிடைக்கும்
சில வேளைகளில் தந்தையுடனும் அக்கடைக்குச் செல்வேன் அக்கடை எங்கள் வீட்டிலிருந்து ஒரு மையிலுக்கு அப்பால் இருந்தது

சைக்கிள் வசதிகள் கூட இல்லாத காலம் அது
,எல்லாம் நடைப் பயணம்தான்

முகம்மதுவுக்கும் என் தந்தையாருக்கும் மதிப்பார்ந்த ஓர் உறவு இருந்தது

கடை உரிமையாளர் முகம்மது சாரன் அணிந்து மேலே ஒரு முழுக்கை பெனியன் போட்டிருப்பார்

இடுப்பில் ஒரு அகலமான பெல்ட் அணிந்திருந்ததாக. ஞாபகம்
ஆஜானுபாகுவான தோற்றம்
சற்று வயதுபோன தோற்றம்.

இப்போது நினைத்துப் பார்க்கையில் அவர் தோற்றத்திற்கும் அந்த ஊரின் சாதாரண மனிதர்களின் தோற்றத்திற்கும் வித்தியாசங்கள் எதுவும் தெரியவில்லை

அவ்வூர் மக்களைப் போலவே அவரும் உடை தோற்றத்தில் இருந்தார்

மக்களோடு ஒருவராக அவர் வாழ்ந்தார்
அப்பாவோடு நான் கடை சென்று திரும்புகையில்

தேவதாஸ்
( அப்போது எனக்கு அதுதான் பெயர் இடைநிலைக் கல்வி பயில ஆரம்பித்தபோதுதான் எனது பிறப்பு அத்தாட்சிப் பெயரான மௌனகுரு வழ்க்கிற்கு வந்தது)

எனக் கூப்பிட்டு

பல்லிமுட்டாசிச் சாடிக்குள் கைவீட்டு தனது வலது கை நிறைய பல்லி முட்டாசு அள்ளித் த்ருவார்
அவர் சிரிப்பு அழகாக இருக்கும்

அப்போது அவர் முகம் எனக்கு மிக பிரகாசமாகத் தெரியும்

அவருக்கு உதவியாளர்களாக இருவர் இருந்தனர்
இருவரும் அவருடன் காத்தான்குடியிலிருந்து வந்தவர்கள்

உள்ளூரவர்களுக்கு கடலில் ஆற்றில் வருமானம் தரும் நல்ல தொழில் இருந்து

அதனால் அவர்கள் அங்கு வேலையாட்களாகச் செல்லவில்லை

ஊரிலே முகம்மதுவுக்கும் நல்ல மரியாதை இருந்தது, அக்கடைக்கும் நல்ல பேர் இருந்தது
காக்காட கடை என்றே அது அன்று அறியப்பட்டிருந்தது

காக்கா என்ற சொல் அண்ணன் என்ற பொருளிலேயே அன்று அர்த்தப்படுத்தப்பட்டது

அவ்வூரில் ஒரு மாதாகோவிலும்
ஒரு பிள்ளையார் கோவிலும்
ஒரு மாரி அம்மன் கோவிலும் இருந்தன

அக்கோவில் உற்சவங்களுக்கும் அவ்வூரில் நடைபெறும் விழாக்களுக்கும் அவரும் பண உதவி புரிவார்

ஊரொடு ஒட்ட வாழ்ந்தார்.

அப்போது இஸ்லாம் பற்றியோ இஸ்லாமியர் பற்றியோ எதுவுமே எனக்குத் தெரியாது
ஆனால் என் தந்தையாருக்குச் சில இஸ்லாமிய நண்பர்கள் இருந்தனர்

இஸ்லாம் பற்றியும் முகம்மது நபி பற்றியும் அல்லாஹ் பற்றியும் நான் அறிந்தது. என் தந்தைமூலம்தான்

இஸ்லாத்திலும் முகம்மது நபியிலும் எனது தந்தை மதிப்பு வைத்திருந்தார்.

அவருக்கு புத்தர் மீதும் சித்தர்கள் மீதும் மிகுந்த ,மதிப்பு இருந்தது

என் தந்தையார் ஓர் இந்துவாயினும் அவர் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்

ஓன்றே குலம் ஒருவனே தேவன்

என் அம்மா கோட்டைமுனையச் சேர்ந்தவர்.

கோட்டைமுனை மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள ஓர் இடம்

கோட்டைமுனையில் தமிழர்கள் ,இஸ்லாமியர்கள் சிங்களவர்கள் என மூவினத்தவரும் வாழ்ந்தனர்,இவர்களை விட பறங்கி இனத்தவரும் வாழ்ந்தனர்

கோட்டைமுனையின் ஒரு பகுதி மோர்சாப்பிட்டி என்றும் அழைக்கப்பட்டது

மங்களராமயா எனும் புத்த விகாரை அங்கிருந்தது

அது .சிங்கள மக்களூக்குரியது என அடையாளப்படுத்தப்பட்டாலும் தமிழ் மக்களும் அங்கு சென்று வணங்கினர்

.ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும்

விசாக் பௌர்ணமிக் கொண்டாட்டங்களை அருகிலிருந்த இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் அனுபவித்தனர் பற்ங்கி இன மக்களும் குடும்பம் குடும்பமாகச் சென்று இவ் விழாவினை அனுபவித்தனர்

நாரத்தங்காய் ,கரும்பு வியாபாரங்களில் இஸ்லாமியரே அதிகம் ஈடுபட்டனர்

வைகாசி வெசாக் நாள் அன்று மட்டக்கள்ப்பில் அனைத்து இன பங்குகொள்ளும் களிக்கும் நாள்
தமிழ் மக்களின் வீட்டுக்கு முன்னால் கூட வெசாக் கூடுகள் தொங்கும்

மலர்களைத் தட்டுகளில் எடுத்துச் சென்று அமைதியாக வீற்றிருக்கும் புத்தரின் பாதங்களில் வைத்து அனைவரும் பேதமின்றி வணங்கினர்

சைவ மக்களின் அரடிப் பிள்ளையார் கோவில் ஒன்று அங்கிருந்தது

. மோர்சாப்பிட்டியில் இஸ்லாமியச் சூழலில் அவுலியப்பா சமாதியும் மட்டக்களப்பு வாவிக் கரையில் இருந்தது

ஒலியுல்லாஹ் என்ற பதமே அவுலியா என அழைக்கப்பட்டது

அவுலியா அப்பா சமாதி இஸ்லாமியரின் வணக்கத் தலமாகக் கருதப்பட் டது

இஸ்லாமியருக்கான பெரிய மசூதி மட்டக்கள்ப்பின் முற்றவெளிக்கு அருகில் இருந்தது அவுலியாப்பா சமாதி கோட்டைமுனையில் இருந்த்து

ஆனால் இரண்டும் ஒரு நிர்வாகத்தின் கீழ் இருக்கவில்லை

இந்துக்களும் அவுலியாப்பா சமாதி சென்று வணங்கினர்

அங்கு வழங்கப்படும் நெய்ச்சோறு வெகு பிரசித்த்மானது நாதிர்சா என அது அழைகப்படும்

கமகமக்கும் நெய் அதன் விசேடதன்மை

ஒவ்வொரு வருடமும் முஹர்ராம் மாதம் பிறை 1 இல் இருந்து 10 வரை இங்கு கொடியேற்றம். திக்ர் ,கந்தூரி என்பன இடம் பெறுகின்றன.அதனைத் தமிழ்-முஸ்லீம் மக்கள் இணைந்தே மேற்கொண்டனர் கொள்கின்றனர்

இப்பகுதியில் நிறைய முஸ்லிம்கள் வாழ்ந்தனர்

அவர்களும் அங்கிருந்த தமிழர்களும் மிக அந்நியோன்னியமாகப் பழகினர்

திருமண உறவு ஓன்றுதான் அவர்களிடம் இல்லை

மற்றப்படி இரத்த உறவினர்கள் போலவே வாழ்ந்தனர்

நல்ல கறிகள் சமைத்தால் ஒருவருக்கொருவர் பரிமாறியும் கொண்டனர்

தமிழ் சிறுவர்களும் இஸ்லாமியச் சிறுவர்களும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடினர்.
இரு இனத்தவரும் அப்பிள்ளைகளைத் தமது பிள்ளைகள் போல கவனித்தனர் உணவளித்த்னர்
ஒருவர் கொண்டாட்டங்களில் மற்றவர் கலந்து கொண்டனர்

எனது அம்மாவுக்கு அங்கு சில முஸ்லீம் விளையாட்டுத் தோழிகளும் இருந்தனர்
திருமணமாகி சீலாமுனைக்கு வந்தபின் அந்த உறவுகள் மெல்ல மெல்ல விட்டுப்போயின என்பார் அம்மா

அவுலியப்பா மீது அம்மாவுக்கு அளவு கடந்த பக்தி
அவரிடம் சொன்னால் எல்லாம் நடக்கும் என்பார் அம்மா

.எங்களுக்கு ஏதும் வருத்தம் வந்தால் அம்மா மூன்று இடங்களில் நேர்த்தி வைப்பார்

ஒன்று மாரிஅம்மன் ,
மற்றது அந்தோனியார்
அடுத்தவர் அவுலியாப்பா

அம்மாவுக்கு அனைவரும் ஒன்றே

பாடசாலை சென்று கல்வி கற்காத படித்திராத என் அம்மா என் அப்பா சொன்ன ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வார்த்தைக்கு நடைமுறை உதாரணமாக வாழ்ந்தார்

மோர்சாப்பிட்டியில்தான்
ஓவியர் அஸீஸ் மாஸ்டர் இருந்தார்
.எழுத்தாளர் சா பித்தன் இருந்தார்
கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உருப்பினரான தங்கப்பல் ஆதம் பாவா இருந்தார்.

இவர்கள் பின்னால் எனக்கு அறிமுகமானவர்கள்

அம்மாவுக்கு மிகபிரியமான கச்சிக் காக்காவும் அங்கு இருந்தார்

அம்மா கோட்டைமுனை விட்டு சீலாமுனை வந்தபின்னும் எமது குடும்பத்தோடு உறவு வைத்திருந்தவர் இக்
கச்சிக்காக்காதான்

வீட்டில் அவரைக் கச்சி என்றுதான் அழைப்பார்கள்
காக்காவை விட்டு விடுவார்கள்

அவர் சகலகலா வல்லவர்

ஆடுவார் பாடுவார்
அன்று சொக்கலால் பீடிக்கொம்பனி பீடி விளம்பரங்களில் பெண் வேடமிட்டு ஆடிப்பாடிவிட்டு வந்து, அவ்வனுபவங்களைக் கதை கதையாக விபரிப்பார்

நாங்கள் வாய் பிழந்து கேட்டு நிற்போம்

வீட்டில் கச்சிக் காக்கா எல்லாருக்கும் கச்சிக் காக்காதான்

வீட்டில் சின்னச்சின்ன வேலைகள் செய்து கொடுப்பார்

அடுப்படிக்குள் அம்மாவுடன் அமர்ந்து வெண்காயம் உரித்துக் கொடுப்பார்

விறகு ஒடித்துக் கொடுப்பார் கடைக்குப் போய்ச் சாமான் வாங்கி வருவார்

மத்தியானம் எங்களுடன் அமர்ந்து கதைத்துக் கொண்டே சாப்பிடுவார்

மர நிழலில் பாயை விரித்து நித்திரைகொள்வார்
அவர் தொப்பி அணிந்து கொண்டு வந்ததை நான் கண்டதாக ஞாபகம் இல்லை

என்கள் வீட்டு முற்றத்தில் நின்று வணங்கியதைப் பார்த்துள்ளேன்

அந்த வண்க்கம் நாம் கும்பிடுவதை விட வித்தியாசமாக இருந்தது

கச்சிக் தொழுகிறான்

என்று அம்மா கூறுவா

தொழுகை என்ற வார்த்தை இவ்வாறுதான் எனக்கு அறிமுகமானது

அவரின் பெண்கள் போன்ற அங்க அசைவுகளினாலும் பேச்சினாலும் நடையினாலும் பாவனைகளினாலும் அவருக்கு
பொண்டுகள் கச்சி
என ஊரவர் பெயர் சூட்டியிருந்தனர்

கச்சி என்பதன் அர்த்தம் எனக்குத் தெரியாத வயது

ஹஜ் தான் கச்சி ஆயிற்று என்பதை அறியும் வயதல்ல அது

எங்களூர்த் த்மிழ் மக்களோடு தமிழராகவே அவர் வாழ்ந்தார்

அவரை யாரும் முஸ்லீம் என அழைத்த தாக எனக்கு ஞாபகமில்லை

அம்மாவுடன் அவுலியாப்பா சமாதிக்குச் செல்லுகையிலும் கோட்டைமுனை செல்லுகையிலும் தனது பழைய தோழியரை அம்மா சென்று சந்திப்பார்

அவர்கள் சேலை எடுத்து முக்காடு போட்டுக் கொண்டிருப்பார்கள் சில வேலைகளில் ஏனையோர் இயல்பாகவே இருப்பர்

வித்தியாசங்கள் அதிகம் தெரிவதில்லை

அப்பா மூலம் அவர் பாணியில் அல்லாஹ்வையும்
முகம்மது நபியையும் அறிந்தேன் என்றால்
அம்மா மூலம் அவர் பாணியில்
இஸ்லாத்தின் ஒருகிளைப் பிரிவான சூபிஸ மார்க்கஞானி அவுலியப்பாவையும் அறிந்தேன்

இப்படி எங்கள் குடும்பத்திற்கும் எம்மூரவருக்கும் நெருக்கான இன்னொரு காக்கா இருந்தார்

எமது குடும்பத்தோடு ஒட்டி உறவாடியவர் அவர்
அவர்தான்

கிறீன் காக்கா

கிறீன் காக்கா என்றால் பச்சைக் காக்கா என அர்த்தமல்ல

கரீம் கிறீன் ஆனார் அவ்வளவுதான்

அவரது கதை வெகு சுவராஸ்யமானது

(தொடரும்)

மட்டக்கள்ப்பிலிருந்து வெளிவரும் அரங்கம் ப்த்திரிகை ஆசிரியர் எமது பழைய அனுபவங்களை எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.இந்த அனுபவம் எனக்கு மாத்திரமல்ல வயது போன அனைவருக்கும் இருக்கும்,அவறைப் பரிமாறுவது இன்றைய தேவை

இக்கட்டுரை 9.5.2019 அரங்கத்தில் வெளிவந்த கட்டுரை

Web Design by The Design Lanka