பயங்கரவாதத்துக்கு எதிர்க்குரல் ; தவறுகளுக்கு முன் தலை தாழ்ந்து மன்னிப்பு கோரல் : முஸ்லிம்களின் புதிய ராஜதந்திரம் » Sri Lanka Muslim

பயங்கரவாதத்துக்கு எதிர்க்குரல் ; தவறுகளுக்கு முன் தலை தாழ்ந்து மன்னிப்பு கோரல் : முஸ்லிம்களின் புதிய ராஜதந்திரம்

muslim

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mihad


(மனிதாபிமானத்தின் அக்கறையும் மானுடம் தழுவிய கருணையும் கொண்டு சமகால அரசியலை நோக்கும் தமிழ் தோழர்களை இந்தப் பதிவு சுட்டவில்லை. அவர்கள் அனைவரையும் மரியாதையோடு கடந்து சென்று இதை எழுதுகிறேன்.)

அண்மையில் கவிஞர் ஜெயபாலன் குறித்து நண்பர் றியாஸ் குரானா தெரிவித்திருந்த கருத்துக்கள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை. அது ஜெயபாலனுக்கு மட்டுமே ஆனது என்றும் நான் நினைக்கவுமில்லை. நீண்ட காலமாகவே ஆழ்மனதில் திரண்டிருந்த முஸ்லிம்கள் மீதான அபிப்பிராயத்தின் விளைவு என்று கருதக் கூடியது.

ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பிறகு இலங்கை முஸ்லிம்கள் குறித்து பயங்கரவாதத்திற்கு சாய்வான ஒரு மொத்தத்துவ புரிதலை உருவாக்குவதில் சில தரப்புகள் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது. அந்த ஈடுபாட்டின் ஒரு துளியை ஜெயபாலன் வடிவில் அவதானித்திருக்கிறார்கள். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இது போன்று செயல்படுபவர்கள் உள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு குறித்த மேலைத்தேய ஊடகக் கருத்துக்கள் வழியாக சிந்திப்பவர்களாக உள்ளனர். அத்துடன் இலங்கை முஸ்லிம்களின் பெருவாரியான அரசியல் விழிப்புணர்வு குறித்த தெளிவற்றவர்கள்.

இந்த வகை நபர்களின் வழியாகவே இன்று பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் இலங்கை முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகளை உலகம் முழுவதும் பரப்ப எத்தனிக்கிறது. இந்த முயற்சிக்குள் மறைமுகமான முஸ்லிவெறுப்பு செயல்படுவதையும் மறுக்க முடியாது.

ஏன் இன்று தமிழ் சமூகத்துக்குள்ளிருந்து ஒரு பிரிவு இவ்வாறு செயல்படுகிறது?

ஈஸ்டர் படுகொலையில் பெரும்பாலும் கொல்லப்பட்டவர்கள் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதாகவும் இருப்பதனால் இந்த வெறுப்பு உருவாகியிருக்குமா என்றால் இதுவே ஒரு முக்கிய காரணமாய் இருக்க முடியாது என்பதே எனது கருத்து. அப்படியானால் படுகொலை நடத்திய பயங்கரவாதிகளையும் அவர்கள் சார்ந்த அமைப்பையும் விமர்சிப்பதாக மேற்குறித்தவர்களின் குற்றச்சாட்டுகள் அமைந்திருக்கக் கூடும். ஆனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளியாக்குவதிலும் அவர்களை இனி பயங்கரவாதிகளாகவே கையாள வேண்டும் எனும் பெருவிருப்பத்திலும் பலர் காரியமாற்றுவது சந்தேகத்தை ஏற்படுத்தவல்லது.

இங்கு சில விடயங்கள் கோடிட்டு காட்டப்பட வேண்டியுள்ளது. அதாவது ஈஸ்டர் படுகொலை இடம்பெற்ற சில மணித்துளிகளிலேயே இலங்கை முழுவதிலுமிருக்கும் முஸ்லிம்கள் அச்சம்பவத்தை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பது முக்கியமாகும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் என்று தெரிந்திருந்தும் அதற்கு முஸ்லிம்கள் காட்டிய பதில் நடவடிக்கைகள் சிந்திக்க வேண்டியவை.

பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் காயமடைந்தவர்களுக்காக இரத்த தான பணிகளை முன்வந்து முன்னெடுத்தவர்கள் முஸ்லிம்களே. பயங்கரவாதிகளின் கொடுஞ் செயலை அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பகிரங்கமாக கண்டித்தனர். இஸ்லாமிய மத அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பொது அமைப்புகள், கழகங்கள் என அனைத்து முஸ்லிம் தரப்புகளும் சில மணி நேரத்திற்குள் தமது எதிர்ப்புகளையும் கண்டனத்தையும் பதிவு செய்தன. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான முஸ்லிம்களின் கண்டனங்களும் எதிர் விமர்சனங்களும் எண்ணிலடங்காமல் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள் தாம் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளுக்கு எதிரானவர்கள் என்பதை வலியுறுத்தினர். அது மட்டுமல்லாது சம்பவம் இடம்பெற்ற ஓரிரு நாட்களுக்குள்ளாகவே நாட்டின் பல பகுதிகளிலும் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை முஸ்லிம் மக்களே பாதுகாப்பு தரப்பிடம் தகவல்களை வழங்கியதன் மூலம் கைது செய்யவும், தேடி அழிக்கவும் முடிந்தது. அத்துடன் பயங்கரவாதிகளின் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் முஸ்லிம் மக்களே கண்டுபிடித்து இராணுவத்திடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் முஸ்லிம் மக்கள் தமக்கு பயங்கரவாத செயல்களில் உடன்பாடில்லை என்பதை உலகறியச் செய்தனர்.

ஆனாலும், இந்த விடயங்கள் யாவற்றையும் மறைத்து ஒரு தரப்பு முஸ்லிம்கள் மீது பயங்கரவாத ஒப்பனைகளை அணிவிக்க முயல்கிறது. அதற்கென எழுத்தாளர்கள் முதல் ஊடகவியலாளர்கள் வரை பலர் விறுவிறுப்புடன் செயல்படுகிறார்கள்.

இன்று முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முனையும் அந்தத் தரப்பினருக்கு அதற்கான எந்தவித அருகதையும் கிடையாது. ஏனெனில் அவர்கள் யாவரும் இலங்கையில் ஏற்கனவே தமிழ் ஆயுததாரிகளால் நிகழ்த்தப்பட்ட மனிதகுல அழிவுகளின் போது மௌனம் காத்தவர்கள்தான். இலங்கையில் பல்லாயிரம் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட போது மௌனமாக இருந்து வீரச் சந்தோசம் அடைந்தவர்கள் இன்று முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக காண்பிக்க முண்டியடிப்பது இழிவானது. புலிகளினால் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது தமிழர்களின் பக்கமிருந்து அதனை ஒரு மனிதாபிமானி கூட கண்டித்திருக்கவில்லை. புலிகள் பள்ளிவாசல்களுக்குள் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களை படுகொலை செய்த போது தமிழர் பக்கமிருந்து எந்தவொரு மனிதாபிமான ஊடகவியலாளனோ அல்லது எழுத்தாளனோ அல்லது மனித உரிமையாளனோ பரிதவிக்கவில்லை. ஒப்பற்ற மௌனமே அந்த சமூகத்தின் பக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் புலிகளின் துப்பாக்கிகளுக்கு அஞ்சி மௌனமாய் இருந்திருப்பார்கள் என்றுதான் முஸ்லிம்கள் எண்ணிக் கொண்டனர். அதனால் முஸ்லிம்களின் கண்டனங்கள் யாவும் புலிகளை நோக்கியதாகவே இருந்தது. ஆனால் இன்று நடப்பது அது போல இல்லை.

ஆனால் அன்று முஸ்லிம்கள் சிந்தித்தது போல தமிழர்கள் இன்று சிந்தித்தார்களா எனும் கேள்வி முக்கியமானது. அது போலவே தமிழர்கள் அன்று மௌனமாய் இருந்தது போல இன்று முஸ்லிம்கள் மௌனமாய் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்பதும் முக்கியமானது.

இந்த இரண்டு விதமான நடத்தைகளின் கோலத்தை வரலாற்றின் பின்னோக்கிய பரிசீலனைக்கு உட்படுத்திச் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதாவது அன்று தமிழ் சமூகம் அரசியல் அபிலாஷை என்ற பெயரில் பயங்கரவாதத்தை மௌனமாக ஆதரித்து அழிவுகளை தன்னகத்தே அரவணைத்துக் கொண்டதேயொழிய தீர்வுகளைக் கண்டடையவில்லை. முஸ்லிம்கள் இன்று பயங்கரவாதத்தை வெறுத்து எதிர்க்குரல் எழுப்புவதன் மூலம் தமது எதிர்காலத்துக்கான அமைதியை வேண்டி நிற்கிறார்கள். வீராப்புடன் நின்று அழிவதை விட தலை தாழ்ந்து மன்னிப்பு கேட்பது தவறாகாது என்று கருதுகின்றனர். ஒரு நாட்டில் வெறும் எட்டு வீத சனத்தொகையைக் கொண்டு சிதறி வாழும் வர்த்தக பின்னணி கொண்ட இரண்டாவது சிறுபான்மை இனம் இதை விட வேறு எதனைத்தான் ராஜதந்திரமாகக் கொள்வது?

Web Design by The Design Lanka