இன வன்முறைகளை ஏற்படுத்துவதை பாடசாலைச் சமுகங்கள் தவிர்ப்பதே காலத்தின் தேவை - Sri Lanka Muslim

இன வன்முறைகளை ஏற்படுத்துவதை பாடசாலைச் சமுகங்கள் தவிர்ப்பதே காலத்தின் தேவை

Contributors
author image

A.S.M. Javid

இந்த நாட்டு முஸ்லிம்கள் ஏனைய சமுகங்களுடன் தொப்புள் கொடி உறவுகளாகவே வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாகுபாடுமின்றி ஒருவருக்கொருவர் சகோதரர்கள் போலவே வாழ்ந்து வருகின்றனர். குற்ற உணர்வுகளுடனோ அல்லது ஒரு சமுகத்தினை சந்தேகக்கண் கொண்டு பார்க்குமளவிற்கு முஸ்லிம்கள் நாகரீகமற்று வாழவில்லை. மாறாக அன்பாகவும், சகோதரத்துவத்துடனும், சந்தோசமாகவுமே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நாட்டில் உள்ள சகல சமயத்தவர்களினதும் சமய, சம்பிரதாயங்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களின் நல்லது, கெட்டதான விடயங்களில்கூட பங்கேற்று ஒற்றுமையாக வாழ்பவர்களாகவே காணப்படுகின்றனர். இவ்வாறான நிலைமைகளுக்குள் நாசகார சக்திகள் மேற்கொண்ட துரோகத்தனமான செயற்பாடுகள் இன உறவிற்கு உலை வைத்து விட்டது என்பதே ஜீரணிக்க முடியாத விடயமாக உள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கும், கத்தோலிக்க மக்களுக்கும் பிரிவினை வரும் அளவிற்கோ அல்லது சண்டையிடும் அளவிற்கு இதுவரையிலும் எந்தவித பிணக்குகளும் ஏற்பட வில்லை. முறண்பாட்டுத் தன்மைகள்கூட இல்லாத நிலையில் கத்தோலிக்க மக்களும் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் அவர்கள் மீது முஸ்லிம் என்ற பெயரில் மேற்கொண்ட தாக்குதல் ஒரு ஈனச் செயல்களாகவே அதனை முஸ்லிம்கள் கண்டிக்கின்றனர்.

மானிட சமுகம் என்ற வகையில் வன்முறைக் கலாசாரத்திற்கோ அல்லது பிரச்சினைகளுக்கோ உட்பட்டு வாழ முடியாது. எல்லாச் சமயங்களும் மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையுமே போதிக்கின்றன. இவ்வாறான நல்ல போதனைகளுக்கு மத்தியில் வன்முறைகளுக்கென மதத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் ஒருசில நாசகாரக் குழுக்கள் மேற்கொள்ளும் தீய செயற்பாடுகள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தினையும் துன்பத்திற்குள்ளாக்கி இருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் வீணான பிரச்சினைகளுக்கு வழிவகுத்து நாட்டின் இறையான்மையை பாதிக்கும் வகையிலேயே அமைகின்றன. அப்பாவி கத்தோலிக்க சகோதரர்கள் மீது அவர்களின் வழிபாட்டுத் தளத்தில் மேற்கொண்ட மேற்படிச் செயற்பாட்டுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விலை கொடுத்தேயாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

நீதியும், சட்டமும் பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்புக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே வன்முறைகளை விரும்பாத மக்களின் கோரிக்கைகளாகும். உண்மையான குற்றவாளிகளுக்கு எந்த விதத்திலும் யாரும் உத முன்வரக்கூடாது. அவ்வாறு உதவச் செல்வார்களானால் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கருத்தாகும்.

சமுகம் எனும்போது அவர்கள் சமய அடிப்படையில் ஏதோ ஒருவகையில் தமது வாழ்வியலை இறை நம்பிக்கையுடனேயே கொண்டு செல்வர். இது எந்த மதமாகவும் இருக்கலாம் சமயமாகவும் இருக்கலாம். அவர்கள் இறைவனின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த உலகில் வாழுகின்றனர்.

இறைவன் மீது கொண்ட கருணை மற்றும் சமயத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலேயே இறை வழிபாட்டிடங்களுக்குச் செல்கின்றனர். வேறு எந்த தீய சிந்தனைகளுமின்றி தூய்மையான என்னங்களுடன் இறைவனை வழிபடும் அந்த அப்பாவி மக்கள் மீது அவர்கள் கிஞ்சித்தும் என்னியிராத நிலையில் அவர்களை இழக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான படுகொலைக் கலாசாரம் மிகவும் கேவலமானதும், மிலேச்சத்தனமானதுமாகும்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பலபாகங்களிலும் ஒரே நாளில் மூன்று கத்தோலிக்க ஆலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் மேற் கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் காணரமாக பலரின் உயிரை பலி கொடுக்க வேண்டி ஏற்பட்டதுடன் பல நூற்றுக் கணக்கானவர்கள் வயது, பால் வேறுபாடின்றி படுகாயங்களுக்கு உள்ளானது ஒவ்வொரு மனிதனையும் ஒருகனம் கதிகலங்க வைத்து விட்டது.

தமது திட்டங்களை நிறைவேற்ற இவ்வாறு மேற்கொள்ளும் அருவருக்கத் தக்கவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறை வேறலாம். ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கங்கள், அவர்களின் அவல உணர்வுகள், கதறல்கள் நிச்சம் தாக்குதல் மெற்கொண்டவர்களை விட்டு வைக்காது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இவ்வுலகில் உள்ள அற்ப ஆசைகளுக்கும், கடும்போக்குகளுக்கும் விலைபோகும் நபர்கள் மற்றவர்களின் உணர்வுகளையும், அவர்களின் உயிர்களையும் ஒரு கனம் சிந்திக்க வேண்டும். தீய சக்திகள் தம்மை பலிக்கடாக்களாக ஆக்குகின்றமையை ஏன் சிந்திக்கக்கூடாது. தானும் இறந்து மற்றவனையும் இறக்க வைப்பதால் என்ன பயனை இவர்கள் அடைந்து விடுகின்றனர் என்பதனைச் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

மனிதன் இறைவனால் இந்த உலகில் ஏன் படைக்கப்பட்டான் என்ற விடயத்தின் அடிப்படையில் வாழ வேண்டுமே தவிர மற்றவனின் உயிருக்கோ அல்லது அவனின் உடமைகளுக்கோ ஆபத்து விளைவிக்கும் வகையில் செயற்பட்டு விடக்கூடாது என்பது முக்கியமான அம்சமாகும். இறைவன் மனிதனை இச்செயற்பாடுகளுக்காக இவ்வுலகிற்கு அனுப்ப வில்லை.

நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் பலியான ஒவ்வொரு ஆத்மாவின் கதறல்களும் எம்மை கண்ணீரினால் மூழ்க வைக்கின்றது. குறிப்பாக இத்தாக்குதல்களில் மொத்தமாக சுமார் 45 சிறார்கள் பலியாகியுள்ளனர் இது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றுமறியாத இந்த பாலகர்கள் என்னதான் குற்றம் செய்தார்கள்?. வெளிநாட்டு உல்லாசப் பயணிகள்கூட இந்தக் கோரத்தில் பலியாகியமை மிகவும் வேதனையான விடயம். அதிலும் இந்த நாட்டின் நலன்களுக்காக தமது சொந்த பணத்தை முதலீடு செய்து உதவிய பிரித்தானியப் பிரஜையின் குடும்ப உறுப்பினர்கள்கூட பலியாகியமை வேதனைக்குரிய விடயமாகும்.

மேற்படிச் சம்பவங்களுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகமும் கவலையுடனும், வேதனையுடனுமே இருந்து வருகின்றனர். வெளிநாட்டு சக்திகளின் பணத்திற்காகவும் அவர்களின் கபடத்தனத்திற்காகவும் இவ்வாறான படுபாதகச் செயல்களில் ஈடுபட்ட ஒருசிலரின் செயற்பாடுகளை மையமாக வைத்து இன்று ஒரு சிலர் அப்பாவி முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளமை இந்த நாட்டில் மீண்டும் சமாதானம் நிலைபெறுமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த 07ஆம் திகதி அவிசாவெல்ல புவக்பிட்டிய தமிழ் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 12 முஸ்லிம் அரச ஆசிரியர்களை அப்பாடசாலையிலிருந்து மனித நாகரீகமற்ற வகையில் துரத்தியடிக்கும் நடவடிக்கiயில் ஒரு சில இனவாத பெற்றோர் நடந்து கொண்ட விதம் சமுகத்தில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருப்பதுடன் சமாதான விரும்பிகள் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தி இருக்கின்றது. காரணம் பாடசாலைச் சிறார்கள் மத்தியில் இன்னொரு சமுகத்தினைக் காட்டிக் கொடுத்து அவர்களை பரிம எதிரிகளாக சித்தரித்து தேவையற்ற வகையில் வன்முறைகளைத் தூண்டும் செயற்பாடுகள்தான் இவை என்பதாகும்.

இவர்கள் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் சம்பந்தப்பட்ட அமைச்சு, திணைக்களங்களுக்கு அறிவித்து தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து அதன் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஒரு சமுகத்தின் கடந்தகால ஒற்றுமை, சமாதானச் செயற்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். நடைபெற்ற சம்பவத்தில் அரச ஊழியர்களை பெற்றோர் விரட்டுவதற்கும், அவர்களின் அரச கடமையை செய்யவிடாது அச்சுறுத்துவதற்கும் அறுகதையில்லை. சட்டப்படி குறித்த நபர்கள் மீது அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வம்பவத்தை அறிந்து கொண்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப்புலிகள் காலத்தில் அவர்கள் பல்வேறுபட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் மிகவும் அச்சமான நிலைமைகள் தோன்றிய காலத்திலும்கூட அவர்களை காட்டிக் கொடுக்கவோ அல்லது இவர்கள் செய்தது போன்று தமிழ் கலாசாரங்களுடன் பொட்டு வைத்து, கையில் நூல் கட்டி வயிற்றுப் பகுதியையும், முதுகுப் பகுதியையும் காட்டியபடி வரவேண்டாமென விரட்டவோ எந்தவொரு முஸ்லிலும், முஸ்லிம் பாடசாலைகளும் கீழ்த்தரமாக செயற்பட வில்லை என்பதனை முஸ்லிம் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒருசிலரின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக ஒட்டுமொத்த சமுகங்களையும் குற்ற உணர்வுடனும், வெறுப்பபுடனும் பார்ப்பதை அவிசாவலை தமிழ் மாகா வித்தியாலய பெற்றோர்களும் அங்குள்ள ஆசிரியர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். மாணவச் சமுகங்களை இனவாத செயற்பாடுகளுக்கு தூண்டுபவர்களாக தமிழ் மாகாவித்தியாலய பெற்றோர்களும், ஆசிரியர்களும் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக மாணவர்கள் மத்தியில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதனால் மீண்டும் ஒரு பயங்கரவாத சமுகத்தை அவர்கள் உருவாக்குவதற்கு முனைகின்றனர் என்றே நோக்க வேண்டியுள்ளதையே எடுத்துக்காட்டுவாதக அவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றது என சமுகஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவிசாவெல பாடசாலையின் சம்பவத்தால் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். காரணம் அவிஸ்சாவெல தமிழ் பாடசாலையில் அவர்கள் செய்ததுபோல் முஸ்லிம் பாடசாலைகளிலும் எமக்கு ஏற்பட்டுவிடுமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் அவ்வாறான மனமுடையக்கூடிய நாகரீகமற்ற செயற்பாடுகளுக்கு செல்பவர்கள் அல்ல என்பதனையும் ஆசிரியர் ஒருவர் இங்கு சுட்டிக்காட்டுகின்றார்.

எனவே நடந்த சம்பவங்களில் இருந்து அணைவரும் மீண்டு வரும் செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், சமுக, சமய ஒற்றுமையை மேம்படுத்த பாடுபட வேண்டுமே தவிர எரிகின்ற நெருப்பில் வேல் பாய்ச்சுவதைப்போல் ஒருசில பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது என சர்வமத ஆர்வளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team