நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் - ஜனாதிபதி வேண்டுகோள் - Sri Lanka Muslim

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி வேண்டுகோள்

Contributors
author image

Presidential Media Division

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை திருப்திகரமாக உள்ளதாகவும் மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தத்தமது அன்றாட நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜனாதிபதி அவர்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (12) பிற்பகல் காலி மாவட்ட அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகளுடன் காலி தக்ஷிணபாய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளும் அதற்காக பிரதேச அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளினால் பாதுகாப்பு துறையினருக்கு கிடைக்கப் பெற வேண்டிய ஒத்துழைப்பு தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் இந்த சந்திப்பு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கான கூட்டத் தொடர்கள் அண்மையில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன்று இடம்பெற்ற காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கான சந்திப்பில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பேதமின்றி பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

காலி மாவட்ட சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் பாதுகாப்பு நிலைமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதைப்போன்று தோற்றத்தை சித்தரிப்பதற்கு சிலர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அதன் காரணத்தினால் இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து மக்களும் தெளிவுடனும் புத்திசாதுர்யத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாத சம்பவம் ஒரு புறமிருக்க சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே பகைமையை உருவாக்குவதற்கு சிலர் முயற்சித்து வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

நாட்டின் இனங்களுக்கிடையே இருக்க வேண்டிய நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் உறுதிப்படுத்தி, அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை ஆற்றுவதற்கும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களுக்கு அகப்படாமல் அன்றாட வாழ்க்கையை சுமுகமான முறையில் நடாத்தி செல்வதற்கு சமுதாயத்தை அறிவூட்டுவதற்கு மதத் தலைவர்கள், பிரதேச அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, கயந்த கருணாதிலக, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, சந்திமிக வீரக்கொடி, நிசாந்த முதுஹெட்டிகம, தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, மாகாண அமைச்சர் விஜயபால ஹெட்டியாராச்சி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன ஆகியோரும் பாதுகாப்பு உயர் மட்ட அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் ஜனாதிபதி அவர்கள் களுத்துறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் களுத்துறை மாவட்ட அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை பிரதானிகளையும் சந்தித்தார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, மஹிந்த அமரவீர, ஜயந்த சமரவீர உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளும் பாதுகாப்பு துறை தலைமை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019-05-12

Web Design by Srilanka Muslims Web Team