மீள்குடியேற்ற செயலணி குறித்து வடக்கு மாகாண சபை குற்றச்சாட்டு » Sri Lanka Muslim

மீள்குடியேற்ற செயலணி குறித்து வடக்கு மாகாண சபை குற்றச்சாட்டு

north

Contributors
author image

Farook Sihan - Journalist

வடகிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற செயலணி குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கபப்ட்டுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வதுடன் வடமாகாண சபையையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 124வது சபையின் நேற்றைய(12) அமர்வின்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்திற்கான விசேட கவனயீர்ப்பு ஒன்றை கொண்டுவந்த மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து தெரிவிக்கையில்

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த செயலணியில் தமிழ் மக்களும் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் மீள்குடியேற்றப்படவேண்டும் என நாங்கள் கேட்டு வந்தோம். அதனை பேச்சில் அங்கீகரித்த செயலணி பின்னர் தனியே சிங்களஇ முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியேற்றம் செய்து வருகின்றது.

இந்த நிலையை மாற்றியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் மேற்படி செயலணியில் இணைத்துக் கொள்ளவேண்டும். அதன் ஊடாகவே தமிழ் மக்களையும் மீள்குடியேற்றுவதற்கான செயலணியாக இந்த செயலணியை மாற்ற இயலும் என கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அரசியல் கட்சிகளை உள்ளீர்ப்பதனால் மேற்படி செயலணி முன்னர் செய்த தவறுகள் எல்லாவற்றையும் சரி என நாங்கள் ஒத்துக்கொள்வதாக அமையும். ஆகவே வடமாகாண சபையை அதற்குள் உள்ளீர்க்க வேண்டும் என தீர்மானம் எடுங்கள் என கூறியிருந்தார்.

இதற்கமைய மேற்படி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் வடமாகாண சபையையும் உள்ளீர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இத் தீர்மானம் பொறுப்புவாய்ந்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதே வேளை அமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன் றிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 4 அமைச்சர்களை கூட்டுதலைமைகளாகக் கொண்ட மீள்குடியேற்ற செயலணி அரசியல்மயப்படுத்தப்பட்டு ஒரு இனத்திற்கு மட்டும் நன்மைகளை செய்யும் செயலணியாக மாறியிருக்கின்றது என்று வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதில் அவர் தெரிவித்துள்ளதாவது

அமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன் றிஷாட் பதியூதீன் மற்றும் துமிந்த திஸநாயக்க மற்றும் பைஷர் முஸ்த்தபா ஆகியோர் கூட்டு தலைமையில் வடகிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி உருவாக்கப்பட்டது.

குறித்த செயலணியின் 3வது கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோரை அடுத்த கூட்டத்திற்கு அழைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 4வது கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் நான் கலந்து கொண்டேன்.

இதன்போது 1990ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து பேசப்பட்டது. அப்போது நாம் கூறியிருந்தோம் தனியே முஸ்லிம் சிங்களம் என பயன்படுத்தாமல் 1990ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களை என பயன்படுத்துங்கள் என. அது அன்றைய கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் 2017ம் ஆண்டு இந்த செயலணி ஊடாக வவுனியா மாவட்டத்திற்கு 200 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 100 வீடுகளும் வழங்கப்பட்டன.

அவை பூரணமாக முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும் வவுனியா மாவட்டத்தில் உட்கட்டுமான பணிகளுக்கான 80 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுவும் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் தனி ஒரு கிராமத்தின் உள்ளக வீதிகள் புனரமைப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2018ம் ஆண்டு இந்த வருடம் மேற்படி செயலணி ஊடாக வடமாகாணத்திற்கு 342 வீடுகள் ஒதுக்கப்பட்டது. அதில் 50 வீடுகள் சிங்கள மக்களுக்கும் 292 வீடுகள் முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வவுனியா நகரில் வீடு தேவையாக உள்ளவர்கள் பட்டியல் ஒன்று மேற்படி செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த பட்டியலில் ஒரு தமிழருடைய பெயரோ சிங்களவருடைய பெயரோ இல்லை. தனியே முஸ்லிம் மக்களுடைய பெயர் மட்டுமே உள்ளது. இவ்வாறே செட்டிகுளம் உள்ளிட்ட பல பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Web Design by The Design Lanka