மாகாண மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆளுநர்களுக்கு பணிப்பு » Sri Lanka Muslim

மாகாண மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆளுநர்களுக்கு பணிப்பு

mai6

Contributors
author image

Presidential Media Division

மாகாண சபைகள் கலைக்கப்பட்டிருந்தாலும் முன்னாள் முதலமைச்சர்களின் பங்களிப்புடன் அனைத்து மாகாண சபைகளையும் மீள அழைக்கப்பட்டு அந்தந்த மாகாணங்களின் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக மீளாய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் அனைத்து ஆளுநர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக உரியவாறு பாதுகாப்பு குழுக்களை ஒன்று திரட்டி தத்தமது பிரதேசங்களின் பாதுகாப்பையும் அமைதியை பேணவும் பாதுகாப்புத் துறையினருடன் ஒன்றிணைந்து தேவையான தீர்மானங்களையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காலி மாவட்ட பாதுகாப்புக் குழு கூட்டத்தின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டினுள் அமைதியை பேணுவதற்கு மாகாண ரீதியில் அமுல்படுத்த வேண்டிய விசேட வேலைத்திட்டமொன்றின் தேவை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தினார்.

பொலிசார், முப்படையினர், அரசியல் தலைமைகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரையும் இந்த வேலைத்திட்டத்தோடு இணைத்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அனைத்து இனங்களுக்கிடையேயும் சமாதானத்தையும் சகவாழ்வையும் உறுதி செய்வதற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால செயற்திட்டத்தின் தேவையையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

பிரதேச ரீதியாக ஏற்பட்டுள்ள வன்முறை சூழலை தவிர்ப்பதற்கு இவ்வாறு பாதுகாப்பு குழு கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டதிட்டங்களை அமுல்படுத்துதல் மிக முக்கியமானதென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பாதுகாப்பு வழங்க வேண்டிய இடங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நுட்பமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய இடங்கள் தொடர்பில் சரியான புரிந்துணர்வு அந்த சமூகத்துடன் செயற்படுபவர்களுக்கே அதிகம் என்பதினால் உரிய வகையில் பாதுகாப்பு குழுக்களை உரியவாறு ஒன்றுகூடி தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.05.14

Web Design by The Design Lanka