பாதிக்கப்பட்டு கண்ணீரில் வாழும் முஸ்லிம்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் » Sri Lanka Muslim

பாதிக்கப்பட்டு கண்ணீரில் வாழும் முஸ்லிம்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

IMG-20190515-WA0001

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

குருநாகலை மினுவங்கொடை முதலான பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம் விரோதத் தாக்குதல்களினால் சில உயிரிழப்புகளும், பெரும் உடைமை இழப்புகளும் ஏற்பட்டுள்ளமை மிகுந்த வருத்தத்துக்கு உரியவை. இந்நிலையில், அன்றாடங் காய்ச்சிகளான முஸ்லிம் – சிங்கள – தமிழ் சிறு வர்த்தகர்கள் பலர் மோசமான பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் வர்த்தக முயற்சிகளை மீளக் கட்டியெழுப்புவதில் சக இலங்கையராய் நமக்கு ஒரு தார்மீகக் கடமை உள்ளதாகவே கருதுகின்றேன்.

இது ரமழான் மாதம். அருள்மிகு மாதம். அதிகமதிகம் தர்மம் செய்யும் மாதம். எனவே, எமது ஸகாத் மற்றும் ஸதக்காக்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்து உதவ முன்வருவோம். அதன் பொருட்டு,

1. இப்பிரதேசங்களைச் சேர்ந்த அல்லது கொழும்பையோ கண்டியையோ மையமாகக் கொண்டு, பிற பிரதேசங்களையும் இணைத்த நம்பிக்கையும் பொறுப்பாண்மையும் கொண்ட இளையோர் – முதியோர் ஒன்றிணைந்து நம்பிக்கை நிதியம் ஒன்றை நிறுவலாம்.

2. அதற்கான நிவாரண நிதி தொடர்பில் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கலாம்.

3. பாதிப்பு/ உடைமை இழப்புகள் சரியான முறையில் நிபுணர்களைக் கொண்டு சரியாகக் கணக்கிடப்படுதல் வேண்டும். அந்த அடிப்படையில், மிக மோசமான, மோசமான, சாதாரணமான பாதிப்பு என்ற அடிப்படையில் மேலிருந்து கீழாக முன்னுரிமைப்படுத்தப் படுதல் வேண்டும்.

4. இந்த நிதியத்துக்கான கணக்கு வழக்குகளை யார் வேண்டுமானாலும் காண, அறிய முடியுமான வகையில் வெளிப்படைத் தன்மை பேணப்படுதல் வேண்டும். அதன் பொருட்டு,

அ) இந்நிவாரண நிதியத்துக்காக ஒரு பொதுவான முகநூல் பக்கம் திறக்கப்பட்டு, நிதி செலுத்துவோர் வங்கிப் பற்றுச் சீட்டினைப் படமெடுத்துப் பதிவேற்றலாம்.

இ) உரிய நிவாரண நிதியைப் பெறுபவரின் கைப்பட, பெற்றுக்கொள்ளப்பட்ட தொகை குறிப்பிடப்பட்டு, எழுதப்படும் கடிதப் பிரதி அப்பக்கத்தில் பதிவேற்றப்படலாம்.

5. இந்நிவாரண உதவிகள் இன, மத, மொழி பேதமின்றி, பாதிப்புக்கு உள்ளானோர்க்கு வழங்கப்படுதல் வேண்டும்.

6. இவற்றுக்கு மேலதிகமாக, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை/ குறிப்பாக சிறுவர்களை மீட்டெடுக்கும் வகையில் நிபுணர்களைக் கொண்டு “கவுன்ஸலிங்” எனப்படும் உளநலச் சேவை ஒன்றும் ஒழுங்கமைக்கப்படலாம். இதன் மூலம் இளம் தலைமுறையினரின் உள்ளங்களில் இன-மத வெறுப்பு ஊன்றி விடாமல் பாதுகாக்கப் படலாம்.

மேற்கண்டவை என் சிற்றறிவுக்கு உட்பட்ட சில ஆலோசனைகளே. மேலதிக ஆலோசனைகள் இருப்பின் தெரிவிக்கலாம்.

நம்பகமான ஒரு குழு இதனைப் பொறுப்பேற்க முன்வரும் பட்சத்தில், இம்முறை ஈத் பெருநாளைக்காகப் புத்தாடை வாங்காமல், அதற்கான செலவுப் பணத்தை இந்நற்காரியத்துக்காகத் தருவதற்கு நான் தயாராக உள்ளேன்.

உங்களில் யாரெல்லாம், என்ன வகையான பங்களிப்பினை வழங்கப் போகின்றீர்கள் என அறியும் ஆவலோடு…

உங்கள் சகோதரி,
~ லறீனா அப்துல் ஹக்~

Web Design by The Design Lanka