இலங்கைச் சூழலில் "காபிர்கள்" என்றழைக்கலாமா? » Sri Lanka Muslim

இலங்கைச் சூழலில் “காபிர்கள்” என்றழைக்கலாமா?

unity

Contributors

லறீனா அப்துல் ஹக்


ஒரு சகோதரி என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். அவர் ஓர் ஆசிரியை. அவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் எனும் மும்மொழிப் பாடசாலை ஒன்றில் பணியாற்றுகிறார். பேச்சுவாக்கில், தமது அதிபர் உளவள ஆலோசனை உள்ளிட்ட முக்கியமான எல்லாப் பொறுப்புக்களையும், “காஃபிர்”களிடம் ஒப்படைத்து இருப்பதாகச் சொல்லிக் குறைப்பட்டார். சுகநலங்களை விசாரித்து விட்டு, தனக்குப் பாடத்துக்குப் போக நேரமாவதாய்ச் சொல்லிவிட்டு ஃபோனைக் கட் பண்ணினார். அவரது கருத்துக் குறித்து அவரை அடுத்த முறை நேரில் சந்திக்கும் போது விரிவாய்ப் பேசவேண்டும் என எண்ணிக் கொண்டேன். அந்த உரையாடலின் அடியான எண்ணங்கள் மனதை ஆட்கொள்ளத் தொடங்கின.

இலங்கை பன்மைத்துவ சமூகங்கள் வாழும் ஒரு நாடு. இனமுரண்பாட்டுப் போரினால் மூன்று தசாப்தகாலமாய் சீர்குலைந்த ஒரு நாடும்கூட. இந்நிலையில், அதுபோன்ற ஒரு கொடிய இன முரண்பாடு மீண்டும் எழாமல் இருக்க இனங்களுக்கு இடையில் நல்லெண்ணமும் பரஸ்பரப் புரிந்துணர்வும் மதிப்புணர்வும் எல்லாத்தரப்பு மக்கள் மத்தியிலும் பரவலாக வேண்டிய தேவை ஆழமாக இருக்கின்றது. அத்தகைய ஒருநிலை வெற்றிடத்தில் இருந்து தோன்றிவிடப் போவதில்லை. மாறாக, சமாதானத்தையும் அமைதியையும் விழையும் அனைத்துத் தரப்பினரும் தத்தமது மட்டங்களில் அதற்கான முனைப்பில் ஈடுபடல் வேண்டும். குறித்த சகோதரி சொன்ன கருத்தில் இரண்டு விடயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்களாகின்றோம்.

1. முஸ்லிம் அல்லாதோரைக் “காஃபிர்கள்” என வகைப்படுத்துதல்

2. முஸ்லிம் அல்லாதவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தல் தொடர்பான அதிருப்தி

உண்மையில், காஃபிர்கள் என்ற பதப்பிரயோகத்தை அல்குர்ஆன் யாரை நோக்கிப் பயன்படுத்தியுள்ளது என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. அரபிகள் மத்தியில் அல்குர்ஆன் இறங்கப்படும்போது, அரபிகளாக இருந்த, அல்குர்ஆனின் தூதை நன்கு புரிந்துகொண்டபின் அதனை மனமுரண்டாக மறுத்தவர்களையே அல்லாஹ் “காஃபிர்கள்” – இறை மறுப்பாளர்கள் எனக் குறிப்பிடுகின்றான். அப்படியானால், இலங்கையில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் யாவரும் அல்குர்ஆனின் செய்தியை உள்ளவாறு முழுமையாகப் புரிந்துகொண்ட பின் அதனை வேண்டுமென்றே ஏற்க மறுத்த காஃபிர்கள் என்ற வகைப்பாட்டுக்குள் அடங்குவார்களா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இலங்கை – இந்தியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்கள் பற்றிய இந்தப் பிழையான வரைவிலக்கணப் படுத்தல், அவர்களைத் தம்மைப் போலவே கருதிச் சகமனிதர்களாய் சமத்துவமாய் ஏற்றுக் கொள்ளத் தயங்குதல், அவர்களுடனான ஊடாட்டங்களை இயன்றளவுக்குக் குறைத்துக் கொள்ளும் முனைப்பு, அவர்களைப் பற்றிய இழிவெண்ணம், தனித்துவம் காத்தல் என்ற பெயரில் அவர்களில் இருந்து ஒதுங்கி வாழும் விழைவு என்பன நம் சமூகத்தில் வேரூன்றி வளர்ந்தமைக்கான முழுப் பொறுப்பும் நமது ஆலிம்களையே சாரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள் தமது சன்மார்க்க உரைகளின் வழியே இத்தகைய தவறான கருத்துக்களை மக்கள் மனங்களில் தூவி, அவை வளர்ந்து பரவலடைய அறிந்தோ அறியாமலோ காரணமாகி விட்டார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மையாகும்.

இஸ்லாம் என்பது றஹ்மத்துலில் ஆலமீன் – உலக மக்களுக்கு ஓர் அருட்கொடை – என்றும், முழு மனித குலமும் ஆதம் – ஹவ்வா (அலை) எனும் ஒரே பெற்றோரில் இருந்து உருவானதே என்றும் சொல்கின்றது, அல்குர்ஆன். இறைவனை விசுவாசிப்போர், இணைவைப்போர், இறைவனே இல்லையென்போர் என எல்லாத் தரப்பினரும் உலகம் அழியும் வரையில் இருக்கவே பூமியில் போகிறார்கள் என்பதே யதார்த்தம். அல்லாஹ்வை ஒருவர் ஏற்றுக்கொள்கிறார், நிராகரிக்கிறார் என்பதை அல்லாஹ் அவரவர் தெரிவாக வழங்கியுள்ளான். அதற்கான தீர்ப்பினை இறுதிநாளில் வழங்கிவைக்க அவனே போதுமானவன். “லகும் தீனுக்கும் வலியத்தீன்” (எனக்கு எனது மார்க்கம், உங்களுக்கு உங்களது மார்க்கம்), “லா இக்ராஹ ஃபித்தீன்” (மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை) என்ற அல்குர்ஆன் வசனங்களின் ஊடே தனிமனித சமய சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளித்து, மனித உரிமை பேணும் ஒரு மார்க்கம், இஸ்லாம். அதேவேளை, பிற சமயத்தவர்களை நேசிக்கக்கூடாது என்றோ அவர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுமாறோ, அவர்களுக்கு அநீதி இழைக்குமாறோ. அவர்களை வெறுத்து ஒதுக்குமாறோ இஸ்லாம் ஒருபோதும் கட்டளை இடவில்லை.

மாறாக, நம்முடைய சொல்லாலும் செயலாலும் நீதி நேர்மையாகவும் உண்மையாகவும் சக மனிதர்மீது அன்புகாட்டியும் “உம்மத்தன் வஸத்” எனும் நடுநிலைமைப் பண்புடன் முன்மாதிரியாய் வாழ்வதன் மூலம் இஸ்லாத்தின் செய்தியை எத்திவைப்பதும், நீதி நியாயம், மனித உரிமைகள் முதலான விழுமியங்கள் உலகில் தழைத்தோங்க உழைப்பதுமே அல்லாஹ்வின் பிரதிநிதிகளான, நமது கடமையாகிறது. இந்நிலையில், மற்றைய சமூகத்தவரை மானசீகமாகவும், பௌதீக ரீதியாகவும் புறந்தள்ளி ஒதுக்குவதன் மூலம், அவர்கள் மீது அசூயை கொள்வதன் மூலம் நம்மால், உலகுக்கு அருளாக அமையும் இந்த வகிபாகத்தைத் திறம்பட ஆற்றுவது எப்படிச் சாத்தியமாகும்?

வறுமை குஃப்ரை நெருங்கச் செய்யும் என்கிறது, இஸ்லாம். ஆக, வறுமை ஒழிப்பினை ஊக்குவித்து, ஸக்காத், ஸதகா முதலான பொருளாதார நடைமுறைகளை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். என்றாலும், அதன்போது, அனைவரதும் இறைவனான அல்லாஹ், முஸ்லிம்கள் மட்டுமே அவற்றின் மூலம் பயனடைந்து வறுமையில் இருந்து மீளவேண்டும் என்று பாரபட்சம் காட்டுபவனாய் இருப்பானா என்ற கேள்வி மிக முக்கியமானது. நீதியாளனாகிய, உணவளிப்பவனாகிய அல்லாஹ், முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒரே விதமாகவே உணவளிப்பான், நீதி செலுத்துவான் என்ற உண்மை நம் உள்ளங்களில் அழுந்திப் பதிய வேண்டாமா?

இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இன்றும்கூட நமது இஸ்லாம் பாடப் புத்தகங்களில், ஸக்காத்தினை முஸ்லிம் களுக்கு இடையில் மட்டும் வழங்கப்பட வேண்டியதாகவும், ஸதகாவினை முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என எல்லோருக்கும் வழங்கப்படக் கூடியதாகவும் வரைவிலக்கணப் படுத்தப்படும்ம் அவலம் குறித்து அப்பாடத்திட்டத்தை வகுக்கும் நமது ஆலிம்கள் யோசித்ததாகத் தெரியவில்லை. ஓர் ஊரில், 40 குடும்பங்களில் 10 குடும்பங்கள் கடும் வறுமையில் இருப்பதாகவும் அதில் 3 குடும்பங்கள் முஸ்லிம் அல்லாதோருடைய தாகவும் இருக்குமானால், ஸக்காத்தின் மூலம் அந்த ஊரின் வறுமையை ஒழிக்கும் போது, அந்த முஸ்லிம் அல்லாதோர் புறக்கணிக்கப் படும் நிலையை றஹ்மத்துலில் ஆலமீனாகிய இஸ்லாத்தின் பார்வையில் நின்று எப்படி அங்கீகரிக்க முடியும்? அப்படிப் புறக்கணிக்கப் படுமானால், அதன் மூலம் தம்மை அறியாமலேயே சக சமூகத்தவர் மத்தியில் விதைக்கப்படும் வெறுப்புக்கும் குரோத உணர்வுக்கும் காழ்ப்புணர்வுக்கும் யார் காரணம்? அதன் விளைவுகளை யார் எதிர்கொள்ள நேரும் என்பதைச் சிந்தித்து உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும், அல்லாஹ் மனித மேம்பாட்டினைக் கருதி எல்லா மனிதருக்கும் பல்வேறுவிதமான அறிவாற்றல்களை, திறன்களை அள்ளி வழங்கி உள்ளான். இதில் அவன் இன, மத, கலாசார, மொழி, பால், பிரதேச, நிற பேதங்களைப் பார்ப்பதில்லை. ஒருகாலத்தில் முஸ்லிம்கள் அறிவியலுக்குப் பெரும் பங்காற்றினார்கள்; அதனால் முழு உலகும் பயனடைந்தது என்பது வரலாறு கூறும் உண்மை.

அவ்வாறே இன்றுவரை முஸ்லிம் அல்லாத அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்களின் ஆராய்ச்சிகளின் விளைவுகளை முஸ்லிம்கள் உள்ளிட்டு முழு உலகமும் பயன்படுத்தி வருகின்றது என்பதே யதார்த்தம். ஆக, அறிவும் அதனை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியும், கண்டுபிடிப்புகளும் பேதங்களுக்கு அப்பாற்பட்டவையாகும். முழு உலகுக்கும் பயன் தருபவையாகும். பல்வகை நிறுவனங்களின் பதவிகள், மருத்துவம், தாதிச்சேவை, உளவள ஆலோசனை, ஊடக சேவை என அன்றாடம் நாம் பயன்கொள்ளும் எல்லாமும் இதில் அடங்கும்.

ஆகவே, இதுபோன்ற சேவை நுகர்வின் போது, யார் நிபுணத்துவம் உடையவர் என்பதும், யாருக்கு குறித்த விடயத்தில் சிறப்புத் தேர்ச்சியும் பயிற்சியும் அனுபவமும் இருக்கின்றன என்பதுமே கருத்திற் கொள்ளப்பட வேண்டுமே ஒழிய, அவர் முஸ்லிமா அல்லவா என்பதையிட்டு அலட்டிக்கொள்ளத் தேவையே இல்லை. முஸ்லிம்களில் இருந்தும் அவ்வாறான நிபுணர்கள் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுவது தவறல்ல. ஆனால், முஸ்லிம் அல்லாதோர் இதில் உள்வாங்கப் படுகின்றார்களே என்று பதற்றம் அடைவதோ கவலை கொள்வதோ எந்த வகையிலும் அறிவுபூர்வமானதல்ல. அவ்வாறு கருதுவதுதான் உண்மையில் துவேஷ மனப்பாங்காகும். இலங்கையின் முப்பது வருட கால யுத்த நெருப்பின் “பொறி” அந்த இடத்தில் இருந்தே தொடங்கியது என்பதையும், இஸ்லாம் ஒருபோதும் துவேஷத்தை விதைக்கும் சமயம் அல்ல என்பதையும் நாம் ஆழ மனங்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அவ்வாறே, நாட்டினதும் ஊரினதும் நலனைக் கருத்திற்கொண்டு, பொதுவான சமூகப் பணிகளில் பேதங்களுக்கு அப்பால் உரிய வளவாளர்களோடு இணைந்து பணியாற்ற நாம் முன்வரவேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு அண்மைக்காலமாக நம் சமூகத்தில் மேலெழத் தொடங்கித் தொடர்வது மனதுக்கு ஆறுதல் அளிக்கும் ஓர் அம்சமாகும்.

ஆக, முஸ்லிம் அல்லாதோரும் நேசிப்புக்கும் கௌரவத்துக்கும் உரிய, நம்மைப் போன்ற சகமனிதர்களே என்ற உணர்வை ஆழமாக ஊட்ட வேண்டியது நம்முடைய ஆலிம்களின்/ஆசிரியர்களின் கடமையாகும். அதன் மூலமே இந்நாட்டில் சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வுக்கு உரமூட்ட முடியும். இலங்கை போன்ற ஒரு நாட்டில், முஸ்லிம் அல்லாதோரைக் குறிப்பிடுவதற்கு “காஃபிர்” என்ற பதப்பிரயோகம் எந்த வகையிலுமே பொருத்தம் அற்றது என்பதை முதலில் ஆலிம்கள்/ஆசிரியர்கள் உணர்ந்து தெளிவார்கள் எனில் மட்டுமே அவர்களால், இதுகாலம் வரையிலும் படித்தவர் – பாமரர் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால், முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம் அல்லாதவர்களைக் “காஃபிர்” என்று அழைத்து, அவர்களை இரண்டாம் தரப்பினராகவோ தம்மைவிடத் தாழ்ந்தவர்களாகவோ கருதிவரும் மனப்பாங்கு படிப்படியாக மாற்றமுறும்.

அப்படி இல்லாத பட்சத்தில், நாம் பொதுச் சமூக நீரோட்டத்தில் இருந்து விலகி அந்நியப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவோம். அது எந்த வகையிலும் பாதுகாப்பானதல்ல என்பதோடு, அல்லாஹ் தந்த பிரதிநிதித்துவக் கடமைக்குப் பொருத்தமானதும் அல்ல என்பதை மனங்கொள்வோம். இஸ்லாம் என்பது அன்பின் மார்க்கம். மகத்தான அருளின் மார்க்கம். அதனை அன்பினாலும் அருளினாலுமே பூரணப்படுத்த நம்முடைய பங்குப் பணியினை ஆற்றுவோம். அதற்கான முதலடியாக, நம்முடைய மனங்களில் சக சமூகத்தவர் மீதான துவேஷ உணர்வு முளைவிடாமல் காப்போம். சமய/இனப்பற்றுக்கும், சமய/இன வெறிக்கும் இடையிலான மெல்லிய ஆனால், ஆழமான பிரிகோட்டை ஐயம் திரிபறத் தெளிந்துணர்வோம்.
நன்றி: விடிவெள்ளி (15/05/2015)

Web Design by The Design Lanka