இன நல்லுறவு பற்றி பேசிய சிலரை மினுவாங்கொடை தாக்குதலின் பின் காணவில்லை - Sri Lanka Muslim

இன நல்லுறவு பற்றி பேசிய சிலரை மினுவாங்கொடை தாக்குதலின் பின் காணவில்லை

Contributors
author image

ஊடகப்பிரிவு

இன நல்லுறவு பற்றி பேசிய சிலரை மினுவாங்கொடை தாக்குதலின் பின் காணவில்லை என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். புதன்கிழமை மாலை கல்வி அமைச்சில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பயங்கரவாதி சஹ்றான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடக்கம் குருநாகல்,மினுவாங்கொடை பகுதியில் மேட்கொள்ளப்பட்ட தாக்குதல் அனைத்தும் ஆட்சிக்கு வர துடிக்கும் ஒரு குழுவினரின் நன்மைக்காவவே திட்டமிட்டு மேற்கொள்ளப்படுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வரை நாட்டை குழப்பகரமான சூழ்நிலையில் வைத்திருக்கவேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. நாட்டில் இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தி பெரும்பான்மை மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி தேர்தலில் வெற்றிபெறவேண்டிய தேவை அவர்களுக்குள்ளது.

இவர்களுக்கும் இந்த சம்பவங்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம். உரிய ஆதாரங்களை திரட்டிய பின் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற இந்த குழப்பங்களை விளைவித்தவர்கள் யார் என்பதை மக்கள் முன் வெளிகாட்டுவோம்.

உதிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இந்நாட்டின் அப்பாவி முஸ்லிம்கள் அனைவருக்கும் பயங்கரவாத முத்திரை குத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் இனவாதிகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டு பெரும்பான்மையினரை முஸ்லிம்களுக்கு எதராக திருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பிரச்சாரங்களின் பின்னால் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் பொருளாதார நோக்கங்கள் காணப்படுகின்றன.

இந்த தாக்குதலின் பின் இன ஒற்றுமையை வலியுறுத்திய பலரை கடந்த இரண்டு மூன்று நாட்களாக காணவில்லை. அப்பாவி முஸ்லிம்களின் பல கோடி பெறுமதியான சொத்துக்கள் நாசமாக்கப்பட்ட போது இன ஒற்றுமை பேச இவர்கள் வரவில்லை.இவர்களின் நோக்கம் இன ஒற்றுமையல்ல தமது அரசியல் பொருளாதார இருப்பை தக்க வைத்துக்கொள்வதே ஆகும்.

நாட்டில் இவ்வாறான பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படும்போது சட்டம் ஒழுங்கு அமைச்சை பலாத்காரமாக வைத்திருக்கும் நபர் நாட்டில் இருப்பதில்லை. போதை பொருள் கைப்பற்றும்போது முன்னால் வருவபர் அசம்பாவிதங்கள் நடக்கும்போது முன்னால் வருவதில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக அவர் இதுவரை வாயை கூட திறக்கவில்லை.

நாட்டின் பாதுகாவலராக தன்னை அடையாளைப்படுத்திக்கொள்ளும் எதிர்கட்சி தலைவர் மினுவாங்கொடை சம்பவத்தின் பின்னால் காணாமல்போயுள்ளார்.சிறு சம்பவங்களுக்கும் ஊடகவியலாளர் மாநாடு நடாத்தி தேசிய பாதுகாப்பு பற்றி அரசாங்கத்துக்கும் புலனாய்வுத்துறைக்கும் புத்திமதி சொல்லும் விமல்வீரவம்ச மற்றும் கம்பன்பில போன்ற காட்போட் தேசபற்றாளர்கள் இரண்டு நாட்களாக வெளியில் வரவில்லை.

ஆகவே நாடு எதிர்நோக்கியுள்ள இந்த அபாயகரமான சூழ்நிலையில் இருந்து வெளியே வரஇந்த இனவாத அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரங்களுக்குள் அகப்படாமல் நாம் அனைவரும் இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டும் கடந்த 30 வருட யுத்தத்தில் நாம் இழந்தவை அதிகம் எனபதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு

Web Design by Srilanka Muslims Web Team