பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அன்றி, சந்தர்ப்பவாதிகளின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சிகளுக்கே தற்போது நாடு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. – ஜனாதிபதி - Sri Lanka Muslim

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அன்றி, சந்தர்ப்பவாதிகளின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சிகளுக்கே தற்போது நாடு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. – ஜனாதிபதி

Contributors
author image

Presidential Media Division

தற்போது நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏதும் தற்போது இல்லையென்றும் சந்தர்ப்பவாதிகளின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சிகளுக்கே தற்போது நாடு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறான முறையில் கையாண்டு சரியான தகவல்களை அறியாமல் முன்வைக்கப்படும் சிலரது கருத்துக்கள் காரணமாக நாட்டை அழிவுப் பாதையில் செல்வதற்கு இடமளிக்க முடியாதென அண்மையில் களுத்துறை மாவட்ட அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரதானிகளுடன் களுத்துறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

கட்சி பேதமின்றி அரசியல்வாதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை பிரதானிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னெடுத்து செல்லப்படும் வேலைத்திட்டங்களுக்கு பிராந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்புத் துறையினருக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புகள் தொடர்பிலும் நாட்டினுள் வன்முறை சம்பவங்கள் இடம்பெறாதிருக்கவும் இனங்களுக்கிடையே நம்பிக்கையை உறுதி செய்து அமைதியான சூழலைப் பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த கூட்டத்தொடர் அண்மையில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் இடம்பெற்றதுடன், அதன் 12வது மாவட்டக் கலந்துரையாடல் களுத்துறையில் இடம்பெற்றது.

ஏனைய மாவட்டங்களுக்கான கூட்டத் தொடர்களும் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளன.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இலங்கை பாதுகாப்புத் துறையினர் மீது பூரண நம்பிக்கை வைத்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்படுமானால் அதனை தானோ பாதுகாப்புத் துறையினரோ மறைத்து வைக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையினரின் தெளிவான உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது என்றும் பிள்ளைகளின் கல்வி, நாட்டின் அன்றாட செயற்பாடுகள் மட்டுமன்றி தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தடுப்பதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நாட்டிற்காகவும் மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் பயங்கரவாத சவாலை வெற்றிகொள்வதைப் போன்றே பொருளாதார, சமூக சவால்களையும் வெற்றிகொண்டு நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team