முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் » Sri Lanka Muslim

முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்

jawahir6

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


சென்னை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 அன்று தேவாலயங்கள் மற்றும் விடுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்களை . எந்த வகையிலும் யாரும் நியாயப்படுத்த முடியாது. இப்பயங்கரவாத நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் வன்மையாகக் கண்டித்துள்ளன.

குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு இலங்கையில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது தொடர்ந்து திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் எனக் குறிவைத்துத் திட்டமிட்டுத் தாக்குதல் நடைபெற்று வருவது வேதனைக்குரியது. உயிருக்கு அஞ்சி முஸ்லிம்கள் காடுகளில் தஞ்சம் புகும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாட்டில் அவசர நிலை அமலில் இருக்கும்போது இதுபோன்ற தொடர் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டு வருவதையும், அதனை அரசு தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளதையும் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் காணொளிகள் மூலம் தெரியவருகிறது. .

குண்டுவெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகள் பற்றி முன்கூட்டியே பல முஸ்லிம் அமைப்புகள் இலங்கை அரசிடம் தகவல் அளித்தும் அதனைத் தடுத்து நிறுத்த தவறி அப்பாவி சிறுபான்மை கிறிஸ்தவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமாக இருக்கும் இலங்கை அரசு இப்போது சிங்கள பயங்கரவாத குழுக்கள் மற்றொரு சிறுபான்மை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தி வரும் தாக்குதலைத் தடுக்க தவறிய ஒரு கையாலாகாத அரசாகச் செயல்பட்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

பயங்கரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து சமையல் அறையில் காய்கறி வெட்ட வைத்திருக்கும் சிறு கத்திகளைப் பறிமுதல் செய்யும் இலங்கை அரசு பயங்கர ஆயுதங்களுடன் வாகனங்களில் பவனி வரும் சிங்கள பயங்கரவாதிகள் மீது உருப்படியான நடவடிக்கை எடுக்கத் தவறிவருவது அதன் ஒருதலைபட்ச போக்கைக் காட்டுகிறது. இஸ்லாமிய வரம்பிலிருந்து வெளியேறிய ஒரு சிறு பயங்கரவாத கும்பல் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களுக்காக முழு இலங்கை முஸ்லிம் சமுதாயத்தையும் குற்றவாளிகளாகச் சித்தரித்து இலங்கையின் பாதுகாப்புப் படையினர் நடந்து கொண்டிருக்கும் போக்கு பிரச்சினைகளைத் தீர்க்க எவ்வகையிலும் உதவிடாது.

சிறுபான்மை மக்களைக் காக்கத் தவறி வரும் இலங்கை அரசைக் கண்டித்தும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை உடனே தடுத்து நிறுத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கக் கோரியும் உயிர் மற்றும் உடைமைகளை இழந்த சிறுபான்மை மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் மே 17 வெள்ளி மாலை 4 மணிக்கு எனது தலைமையில் நடைபெற உள்ளது. அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka