முஸ்லிம் சமூகம் இதனை படிப்பது முக்கியம் » Sri Lanka Muslim

முஸ்லிம் சமூகம் இதனை படிப்பது முக்கியம்

muslims

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சீவகன் பூபாலரட்ணம்


“காத்தான்குடி உங்களை வரவேற்கிறது” என்ற தலைப்பில் இரு வாரங்களுக்கு முன்னதாக நான் எழுதிய ஆசிரியர் குறிப்பை பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். முகநூலில் அதனைப் பார்த்த சிலர் வெளியில் அபிப்பிராயம் சொல்லப் பயந்து, உள்பெட்டியில் வந்து வாழ்த்தியுள்ளனர். ஆனால், இந்தக் குறிப்பு அவர்களுக்கானது அல்ல.

அந்தக் குறிப்புடன் சிலர் முரண்பட்டுள்ளனர். அவர்களுக்கானதுதான் இந்தக் குறிப்பு. அப்படி முரண்பட்டவர்களில் சிலர் உண்மையில் நான் அன்று கூறிய விடயங்களின் தாற்பரியத்தை தெரிந்தவர்கள். ஆனால், தமது குறுகிய சில அரசியல் நோக்கங்களுக்காக, லாபங்களுக்காக அதனை எதிர்ப்பவர்கள். நடிப்பவர்கள். அவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், பொதுமக்கள் அவர்கள் மீது கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால், உண்மையிலேயே அந்தக் குறிப்பைப் பார்த்து சிலர் நான் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் எழுதியதாக நினைத்திருப்பதனையும் நான் அறிகிறேன். இந்தக் குறிப்பு அவர்களுக்கானதுதான்.

முதலில் நான் மீண்டும் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். நான் எனது நிலைப்பாட்டுல் இருந்து கொஞ்சம் கூடப் பின்வாங்கவில்லை. பின்வாங்கப் போவதுமில்லை. எல்லோரும் ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது எனது கடந்த கட்டுரையில் நான் “சண்டை போடாதீர்கள்” என்றுதான் எழுதியிருந்தேன். “சண்டையைப் போடுங்கள்” என்று எழுதவில்லை. ஆகவே நான் என்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவேண்டிய அவசியம் எதுவும் கிடையாது.

இலங்கை உள்நாட்டுப் போரின் போதும் இதேபோன்ற ஒரு நிலையை நான் எதிர்கொண்டுள்ளேன். கொழும்பில் நான் இருந்து “சண்டை போடாதீர்கள்”, “போர் வேண்டாம்” என்று சொன்னபோது. இங்கு நான் தேசத்துரோகியாக ஊடகங்களில் பேர் சொல்லி அறிக்கையிடப்பட்டேன். அந்த நிலை, குற்றச்சாட்டு அத்தோடு முடிந்துவிடவில்லை. நான் இங்கிருந்து லண்டனுக்கு ஓடும் நிலை ஏற்பட்டது. அதனை அடுத்து லண்டனில் இருந்து எழுதும் போதும், நான் துரோகியாக்கப்பட்டேன். அங்கு நான் அறிவிக்கப்பட்டது “தமிழ் துரோகி”யாக. மொத்தத்தில் நான் அன்று சொன்னது போர் வேண்டாம் என்றே. அது போரில் ஈடுபட்ட இரு தரப்புக்கும் பிடிக்கவில்லை. இரு தரப்பும் என்னைத் துரோகி என்றன. ஆனால், இறுதியில் என்ன நடந்தது. ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் எமது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று இன்று புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

எனக்கும் துரோகிப்பட்டம் என்பது பழகிப்போய் விட்டது. எனக்கு இப்போது இதெல்லாம் ஏதோ “எருமை மாட்டின் முதுகில் மழை பெய்வது போல” ஆகிவிட்டது. இதில் என்ன பிரச்சினை என்றால் அன்று போருக்கு அழைத்த “பெருவீரர்கள்” எல்லாம் எனக்கு பின்னால் துரோகியாக்கப்பட்டார்கள். துரோகிப் பட்டம் பெற்றதில் நான் அவர்களைவிட சீனியர். அது நிற்க.

மீண்டும் விடயத்துக்கு வருகிறேன். இப்போதும் நான் சொல்வது எங்களுக்குள் சிக்கல்கள் வேண்டாம் என்றுதான்.

நான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அன்றைய கட்டுரையை எழுதினேனா என்றால், ஆம் நான் அப்படித்தான் எழுதினேன். அது உண்மைதான். ஆனால், அந்த நலனில் எமது சொந்த நலனும் இருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

பாதுகாப்புக் கெடுபிடிகளை பார்க்காத சமூகம் அல்ல தமிழ்ச் சமூகம். அந்த அவலங்கள் எமது எதிரிக்கும் வரக்கூடாது என்பதை அதனை அனுபவித்தவர்கள் உணர்வார்கள். அதனைத்தான் நான் எனது கட்டுரையில் சொன்னேன்.

அடுத்தவிடயம் எமக்கும்(தமிழர்களுக்கும்) முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கிறதா என்றால் உண்டு என்றுதான் நானும் சொல்கிறேன். இங்கு எனக்கு எதிராக மறைந்து நின்று கல்லெறியும் பலருக்கு ஒரு விடயத்தை நான் சொல்லியாக வேண்டும். நீங்கள் எல்லாம் முஸ்லிம்களின் தவறான தலைவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் பயந்து, முகம் காட்டாமல் அடக்கி வாசித்துக்கொண்டிருந்த காலத்தில், லண்டனில் இருந்து மட்டக்களப்பில் வந்து நின்று, நேருக்கு நேராக, அம்பாறை மாவட்டத் தமிழர் நிலை குறித்தும், ஆளுனர் நியமனம் குறித்து வெளிப்படையாகவே எழுதியது அரங்கம் பத்திரிகைதான். அம்பாறை பற்றி எமது அரங்கத்தில் தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் வந்த கட்டுரைகளை எல்லோரும் மறந்துவிட்டார்கள் போலும். சில உள்ளூராட்சிகளின் மிரட்டலுக்கு பயந்து சில பத்திரிகைகள் மன்னிப்பு கோரி, தப்பிய போதும், விடாப்பிடியாக எதிர்த்து நின்றவர்கள் நாம்.

ஆனால், எனது ஊரவன் எந்த மதமாக, இனமாக இருந்தாலும் அவனுக்கு பிரச்சினை என்று வரும்போது அவர்களுக்கு நாம் அனுசரணையாக நிற்க வேண்டும் என்பதிலும் நாம் விடாப்பிடியாகவே நிற்போம். எம்முடைய பிரச்சினையை நாம் பேசித்தீர்ப்போம், ஆனால், எம்மவருக்கு நாம் உறுதுணையாக நிற்போம்.

எமக்கு இப்படியான பிரச்சினை வந்தபோது எமக்கு அவர்கள் உதவ வரவில்லையே என்று சிலர் கேட்கலாம், அவர்கள் உதவிக்கு வரவில்லை என்பதையே உண்மையாகவும் எடுத்துக்கொள்வோம், அப்படியானால், அவர்கள் உதவிக்கு வராததை நாம் பிழை என்று கருதுகின்றோம் என்று பொருள், அப்படியானால், அதே பிழையை நாம் செய்யலாமா? இதுதான் தமிழர் பண்பா? அப்படியானால் என்னை எதிர்ப்பவர் எல்லாம் யார்?

முஸ்லிம்கள் தமிழர்களைவிடப் பலமாக இருந்தபோது எம்மீது பலவிதமான ஆக்கிரமிப்புக்களை செய்ததாக அரங்கத்திலும் கட்டுரை வந்திருக்கின்றது. ஆகவே, அவர்கள் இக்கட்டில் இருக்கும் போது அவர்களை நாம் அழுத்த வேண்டும் என்பது சிலரது விருப்பம் போலும். அது அறம் அல்ல. ஆனால் ஒன்று செய்யலாம். அவர்கள் சிரமத்தில் இருக்கும் போது அவர்களை அணுகி அவர்களுக்கு உதவியாக, அனுசரணையாக இருந்தால் பின்னர் அதன் மூலம் எமது பிரச்சினையையும் பேசலாம்.

ஆனால், அவர்களது ஒரு இக்கட்டான நிலையை நாம் பயன்படுத்துவது மிகப்பெரும் தவறு. அடுத்தது எந்தக் குற்றத்துக்கும் காரணகர்த்தாவை மிகச் சரியாக அடையாளம் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாமே எதிரொயை பலமாக்கி விடுவோம்.

அடுத்ததாக எமது குழந்தைகள், எமது அடுத்த தலைமுறை குறித்த கரிசனையும் முக்கிய இடம்பெறுகிறது. இலங்கையில் இருக்கும் தமிழ் பெற்றோர் ஒருதடவை உங்கள்குழந்தைகளின் முகங்களைப் பாருங்கள். நாம் முப்பது வருடம் அனுபவித்த கஸ்டங்கள் நம் குழந்தைகளுக்கு தேவையா? எனது பிள்ளைகளை நான் ஓரளவு பாதுகாப்பான சூழ்நிலையில் வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் இங்குள்ள ஏனையவர்களும் தங்கள் குழந்தைகளை அடுத்த தசாப்தத்தின் போரின், மோசமான நிலையின் இலக்காக மாற்றிவிடாதீர்கள்.

மட்டக்களப்பிலும், கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் இப்போது உள்ள பதின்ம வயதுச் சிறார்களை பார்த்திருக்கிறேன். 30 வருடங்களுக்கு முன்னர் நாம் இருந்த நிலையில் அவர்கள் இல்லை. மிகவும் மென்போக்கானவர்களாக, உலகை ரசிக்கப் பிறந்தவர்களாக மாத்திரமே அவர்கள் இருக்கிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக இங்கு, இந்த நாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி அவர்களுக்கு எந்தவிதமான தகவலும் சரியாகத் தெரியவில்லை. கடுமையான ஒரு காலத்தை எதிர்கொள்ளும் மனோநிலையில் அவர்கள் இல்லை. தமது நெஞ்சைத் தொட்டுப் பேசும் பெற்றோர் அனைவருக்கும் இது புரியும். அவர்களை மீண்டும் ஒரு போர் முனையில் கொண்டு சென்று நிறுத்த உங்களுக்கு விருப்பமா? அவசரகாலச் சட்டத்தின் தாற்பரியம் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான் சொல்கிறேன் இங்கு தேவை ஒரு உண்மையான நல்லிணக்கம் என்று. ஒரு சிறு குழு தவறாக நடந்தாலே நாட்டில் அனைவரின் நிம்மதியும் கெட்டுவிடும் என்பதை அண்மைய நிகழ்வுகள் தெட்டத்தளிவாகக் காண்பித்துள்ளன. அதனால்தான் சொல்கிறேன் அடுத்த எவருடனும் முரண்பாடு தேவையில்லை. நிதானமாகச் செயற்படுங்கள். யாரையும் பகைக்க வேண்டாம். யாரின் மீதும். ஒடுக்குதல் சிந்தனை வேண்டாம். அதேபோலவே முஸ்லிம்களோடும் சகவாழ்வுக்கு வழி செய்யுங்கள்.

உரிய பகையாளியை சரியாக அடையாளம் காணாமல் அனைவரையும் பகையாளியாக்கிக் கொள்ள வேண்டாம். உங்கள் பகையாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள வேண்டாம்.

ஒரு விவேகியே உண்மையான வீரனாக இருக்க முடியும். தெருச்சண்டியன் எல்லாம் வீரனாக முடியாது. ஒளிந்திருந்து கல்லெறிபவன், தனது படத்தை, அல்லது முகத்தைக் காண்பிக்காமல் ஒளிந்திருந்து கல்லெறிவது போல, மறைந்திருந்து கருத்துக் கூறுபவன் எல்லாம் வீரனாகமாட்டான். அவனெல்லாம் கோழைகள். ஒரு விவேகி சமாதானத்தை நிராகரிக்க மாட்டான். அடையாளம் தெரியாமல் கல்லெறிய மாட்டான். தன் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள மாட்டான். என்மீது கல்லெறிபவர்களின் வார்த்தையில் கூறுவதானால் இவர்கள் எல்லாம் தமிழனாகவே இருக்க மாட்டான். சரி அது அவர்களுக்கு.

என்னைப் பொறுத்தவரை நான் மனிதனாக இருக்க முயற்சிக்கிறேன். அப்போதுதான் நான் பிறந்த நாட்டுக்கும் ஊருக்கும் என்னால் பெருமை சேர்க்க முடியும். அடுத்தவர்களையும் மனிதனாக இருக்க அழைக்கிறேன். அதுதான் மட்டக்களப்புக்கும், கிழக்கு மாகாணத்துக்கும், அவ்வளவு ஏன், இலங்கைத் திருநாட்டுக்கும் உதவும்.

Web Design by The Design Lanka