முஸ்லிம் சட்டத்தரணிகளின் கவனத்திற்கு » Sri Lanka Muslim

முஸ்லிம் சட்டத்தரணிகளின் கவனத்திற்கு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சட்டத்தரணி சறூக்-0771884448


திகனைக் கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற்கு நீதவானுக்கே அதிகாரமில்லையென திறந்த நீதிமன்றில் நாம் வாதிட்டதுமில்லாமல் சமூக ஊடகங்களிலும் அதனை வற்புறுத்தி வந்ததை நீங்கள் அறிவீர்கள். இதன் காரணமாக பல சட்டத்தரணிகளினது எதிர்ப்பையும் சம்பாதித்தோம்.

தொடர்ச்சியாக அவர்களின் வழக்குகளை கவனிக்கும் பொறுப்பை ஜம்மியத்துல் உலமாவினால் வேலைக்கமர்த்தப்பட்ட சட்டத்தரணிகள் குழாம் பொறுப்பெடுத்தது. சில காலம் அவர்களும் வழக்குகளை கவனித்து விட்டு கைகழுவி விட்டுள்ளனர். இப்போதெல்லாம் அந்த வழக்குகளை கவனிப்பதற்கு யாருமற்ற நிலை காணப்படுகிறது.

உலமா சபையானது வழமையாக சமூகங்களின் சுமூக வாழ்வுக்கு உறுதுணையாக குற்றம் செய்தவர்களை தண்டிக்காமல் “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டவேண்டும் ” எனும் கோட்பாட்டுக்கிணங்க பன்சலையும் பள்ளியும் சேர்ந்து சமத்துவம் பேசி அவ்வழக்குகளை கணக்கிலெடுக்காமல் விட்டிருப்பார்கள்.

அந்த விட்டுக்கொடுப்பின் பிரதிபலிப்புத்தான் அண்மைய நீர்கொழும்பு, சிலாபம் , குருநாகல் மற்றும் மினுவங்கொடை தாக்குதல். “எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குகிறான், இவன் ரொம்ப நல்லவன்” எனும் வடிவேலுவின் ஜோக்காகிவிட்டது எமது நிலமை.

அமித்வீரசிங்க, டான்பிரசாத் மற்றும் நாமல் குமார போன்றவர்களுடன் பல காடையர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சிலர் பிணையிலும் விடுதலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஏற்கனவே பிணை நிபந்தனையில் இருக்கிறார்கள் அந்த பிணை நிபந்தனைகளை மீறியுள்ளார்கள் என்பதை சம்பந்தப்பட்ட நீதவான்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களுக்கு பிணைவழங்குவதை தடுப்பதற்கு நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்.

திகனையில் கொள்ளையடித்த பணம் ஒரு வருடத்தில் முடிந்திருக்கும் அதனால் அண்மைய கொள்ளையடிப்புக்கள் இது இன்னுமொரு வருடத்திற்கு அவர்களுக்கு போதும் அவர்களது ஜீவனுபாயத்திற்கு.

“இவ்வளவு வீரப்பு பேசும் நீங்கள் இந்த வழக்குகளில் தோன்றலாமே” என நீங்கள் கேட்பது புரிகிறது. சந்தர்ப்பவாதிகளினால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறையில் வாடும் எமது சொந்தங்களுக்காக இரவு பகலாக நாடு பூராகவுள்ள நீதிமன்றங்களில் தோன்றி “தவ்ஹீத் என்றால் என்ன? தவ்ஹீத் ஜமாஆத்களில் எது தடைசெய்யப்பட்டது? “என இஸ்லாமிய அடிப்படைகளை நீதவான்களுக்கும் பொலிசாருக்கும் கோபத்துடன் இப்படியான வழக்குகளில் தோன்றாதலிருக்கும் முஸ்லீம் அல்லாத சட்டத்தரணிகளுக்கும் விளங்கப்படுத்தி கைது செய்யப்பட்டிருக்கும் அப்பாவிகளின் விடுதலைகளுக்காக இப்போதெல்லாம் உதவி வருகிறோம்.

இவர்களின் விடுதலை தான் முக்கியமானது எனச்செயற்படும் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் ஆறுதல் சொல்லி வருகின்றோம். இந்த வேலைப்பழுக்களின் மத்தியில் சண்டியர்களின் வழக்குகளில் தோன்றி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வழக்காடுவது சாத்தியமற்ற விடயமாக காணப்படுகிறது.

இந்த கட்டுரையைப்படிக்கும் இளம் சட்டத்தரணிகளே எம்மோடு இணைந்து எமது வழிகாட்டல்களின் படி அப்பாவிகளுக்காக வழக்காடுவதனூடாகவும் பயந்துக்கொண்டுருக்கின்ற எமது சகோதர்ர்களுக்கான உளவள மற்றும் தற்காப்புரிமை தொடர்பான விளக்கங்களை வழங்கி மறுமைக்காக கொஞ்சம் உழைப்போம்.

சட்டத்தை போட்டவுடன் முகத்தை திறந்த சமூகம். தற்போது நெருப்பை ஏந்திக்கொண்டு நெருப்பு வணங்கும் மஜூசிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னுமொரு துரதிஷ்டமான நிகழ்வு நடந்தால் மொட்டையடித்து காவியுடுத்தும் நிலைக்கு எமது சமூகத்தின் தலைவர்கள் என தம்மைத்தாமே சொல்லப்படுபவர்கள் மாறிவிடுவார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதில் ஒன்றுமில்லை.

இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஊர்களிலுமுள்ள பெரிய பள்ளிவாயல்களின் பொறுப்புதாரர்களே !நீங்கள் அல்லாஹ்வின் சரியான மார்க்கத்தை பின்பற்றாததன் காரணமாக சரியான மார்க்கத்தை பின்பற்றுவதற்காக ஏகத்துவ்வாதிகள் தமது பாட்டில் அரசியலமைப்பினால் வழங்கப்பட்டிருக்கும் மத சுதந்திரத்தின் படி ஒரு கொட்டிலை அடித்து தமது வணக்க வழிபாடுகளை செய்து வருகின்றனர்.

அவர்களை காட்டிக்கொடுக்கு முகமாக நீங்கள் பெரும்பான்மையுடன் சேர்ந்து கொண்டால் வெளியிலிருந்து வரும் 300 மோட்டர் சைக்கிள் காடையர்களின் கூட்டம் முதலாவது கைவைப்பது மினராக்களுடன் கூடிய அவர்களுக்கு தெரிந்த உங்களது பள்ளிவாசல்களைத்தான் தான் கொட்டில்களையல்ல என்பதை கவனத்திற்கு எடுத்து செயற்படுங்கள்.

தாக்குதல்கள் நடந்த பின் எமது அரசியல்வாதிகள் மற்றும் சமூகத்தலைவர்களாக தம்மைத்தாமே சொல்பவர்கள் நிகழ்வுகள் நடந்த இடத்திற்கு விஜயம் செய்து “சொத்தழிவு மதிப்பீட்டதிகாரிகளாக” மாறி சமூக ஊடகங்களில் தமது போட்டோக்களையும் சாதாரண மக்களுக்கு விளங்காத மொழியில் (அரசியல் சானக்கியம்) வீடியோக்களையும் போட்டா போட்டியாக போடுவதை காணக்கூடியதாக இருந்தன.

அப்ப என்னடா அப்பா எங்களை செய்யச் சொல்கிறீர்கள்?

1.தவ்ஹீத் ஜமாத்களுக்கு எதிரானவர்களே!

ISIS காரன்களுக்கும் சாதாரண தவ்ஹீத்காரன்களுக்கும் வித்தியாசத்தை படியுங்கள் அதனை மற்றவர்களுக்கும் எத்திவையுங்கள். சந்தர்ப்பவாதத்தை பாவித்து அவர்களை காட்டிக்கொடுத்தால் சிறைக்குள்ளும் அவர்களின் தஃவா பணி தொடரும் அவர்களுக்கு இறைவனிடமிருந்து நன்மை வந்து கொண்டேயிருக்கும். பாதிக்கப்படுவது நீங்களே!

சிறு சலசலப் பிற்கே ஜும்மாவை கைவிட்டவர்கள் (கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஜும்மாவுக்கு மூடப்பட்டது) பாரம்பரிய முஸ்லிம்களாகிய நீங்கள். அடித்தாலும் தமது கொட்டிலில் ஜும்மா தொழுபவர்கள் ஏகத்துவ வாதிகள் அவர்களை தடுக்காதீர்கள்.

2.அரசியல்வாதிகளே !

ஆட்சி இல்லாமல் போகும் எனும் நிலை வந்த போது சட்டத்தரணி உடையணிந்து சிங்கம் போல் உயர்நீதிமன்றில் வீறுநடை போட்டீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமித்வீரசிங்கயின் பிணைக்கோரிக்கையினை ஆட்சேபியுங்கள்.
முடியாவிட்டால் அப்பாவிகளாக பிடிபட்டிருக்கும் உங்கள் சகோதரர்களின் உடமையில் வைத்திருந்த லெப்டொப் மொபைல் போன்களை பரிசோதிப்பதை குறிப்பிட்ட அமைப்புகளுடன் தொடர்ப்பை ஏற்படுத்தி , துரிதப்படுத்தி அவர்களின் விடுதலைகளை இலகுபடுத்துங்கள்.

3.தனவந்தர்களே!

PTA ன் கீழ் கைது செய்யப்படும் அப்பாவிகளுக்காக பெரும்பான்மை சட்டத்தரணிகள் விலகியிருக்கின்ற போது, பாரம்பரிய முஸ்லிம் சட்டத்தரணிகள் தவ்ஹீத் அமைப்புகளுக்கிடையிலான வேறுபாடுகள் தெரியாததன் காரணமாகவும் பெரும்பான்மை இன நீதவான்களினதும் சட்டத்தரணிகளினதும் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என பயந்து கொண்டு நிற்கும் நிலையில் எமது சட்டத்தரணிகள் அல்லாஹ்தான் எமக்கு உணவளிப்பவன் எனக்களத்தில் இறங்கியுள்ளோம் எமக்காக இப்புனித மாதத்தில் துஆ செய்வதுடன் , உங்களது உதவிகள் ஒத்தாசைகளை இந்த நோன்பு காலங்களில் குடும்ப தலைவர்கள் இன்றித்தவிக்கும் நாம் தெரிவிக்கும் கைதாகியவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக சென்று வழங்குங்கள்.

எது எப்படி இருந்தாலும்
எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குகிறான், இவன் ரொம்ப நல்லவன்” எனும் வடிவேலுவின் ஜோக்காகிவிட்டது எமது நிலை.

சட்டத்தரணி சறூக்-0771884448

(சட்டம் ஒரு இருட்டறை அல்ல like page யிலிருந்து)

Web Design by The Design Lanka