அன்று மக்கம் தப்பினால் மருதமுனை: இன்று குளிசை தப்பினால் மருதமுனை » Sri Lanka Muslim

அன்று மக்கம் தப்பினால் மருதமுனை: இன்று குளிசை தப்பினால் மருதமுனை

Contributors
author image

A.H.M.Boomudeen

மருதமுனையில் கடந்த இரண்டு தினங்களாக பேசப்படுகின்ற விடயம் சகோதரர் தம்ஸீரின் படுகொலை.
அதற்கு இணையாக பேசப்படுகின்ற விடயம் போதை குளிசை.

போதை குளிசைக்கு அடிமையாகும் சிறு பராயத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

500 ரூபா முதல் 5000 ரூபா வரையிலும் இந்தத் குளிசைக்கு விலை கொடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது . யார் மொத்த வியாபாரி? யார் சில்லறை வியாபாரிகள் என்று சிலரின் பெயர்கள் ஊகங்களாக உச்சரிக்கப்பட்டாலும் இதுவரை ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. ஆனால், நிச்சயமாக மருதமுனை நபர்கள்தொடர்புபடாமல் இந்த போதை குளிசை மருதமுனைக்குள் கொண்டு வரப்பட்டிருக்க முடியாது.

அடுத்து கஞ்சா தாராளமாக பாவிக்கப்படுகின்றது. மருதமுனை மையவாடிக்கு முன்பான கடற்கரை யோரம், வீட்டு மொட்டை மாடி போன்ற இடங்கள் கஞ்சா வெறியர்களின் ஆஸ்தான பகுதிகளில் சில.

கடந்த 6 அல்லது 7 மாதங்களில் கஞ்சா குடித்த பலர் அதிரடியாக கைதாகி 9000 ரூபா தண்டத்துடன் சிறைக்குள் இருந்து வெளியேறியமை ஊர் அறிந்த பேருண்மை.

இந்தக் கோணத்தில் தான் சகோதரர், நண்பர், இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட தம்ஸீரின் படுகொலையை மருதமுனை மக்கள் நோக்குவதை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இப்போது, தம்ஸீரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது. படுகொலை செய்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மகனால்தான் இந்த கொடூரமான படுகொலையை செய்தார் என்றும் – இந்தளவுக்கு மோசமானவர் அவர் இல்லை என்றும் கூறப்படுகின்றது. அவர் தற்போது விசாரனைக் கைதி. பொலிஸார் அதனை பார்க்கட்டும்.

போதை குளிசை, கஞ்சா, படுகொலை என்று மருதமுனை இன்று பெயர் வாங்கியுள்ளது.

மக்கம் தப்பினால் மருதமுனை என்று அன்று அழைக்கப்பட்ட மருதமுனை, இன்று குளிசை தப்பினால் மருதமுனை என்று அழைக்கப்படுவதற்கு யார் பொறுப்பேற்பது?

வட்டி, கள்ளத் தொடர்பு, மது அருந்துதல் என்று ஒரு பக்கம் .

சொந்த மகளை தாயாக்கிய தந்தை என்ற கேவலம் கெட்ட அநாச்சாரம் மறுபுறம்.

மனைவியையும் பிள்ளைகளையும் தவிக்கவிட்டு இன்னொருத்தியுடன் ஓட்டம் மறுபக்கம்.

65 M இல் உள்ள தேங்காய்களை அரபு மத்ரஸாவுக்கு கொடுங்கள் என்று கொடுத்தால் ( 50 தேங்காய்கள்) அதைக் கொண்டுபோய் மனைவியிடம் கொடுக்கும் அரசியல்வாதி. மனைவி அந்த தேங்காய்களில் 15 ஐ தனது சகோதரியான அதிபரின் மனைவிக்கு கொடுப்பது என்ற பச்சத் திருட்டுத்தனமும் ஹராமும் இன்னொரு பக்கம்.

போதாக்குறைக்கு பயங்கரவாத தொடர்பு என்ற சந்தேக கைது மற்றொரு புறம் என்று , இன்று மருதமுனை சீரழிந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

காதி நீதிமன்றத்தில் மருதமுனை பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அறிவிக்கப்படுகின்றது. சின்ன, சின்ன – சின்னத்தனமான காரணங்களுக்காகவும் இன்னுமொன்றின் மீது கொண்ட ஆசை, ஆர்வத்துக்காகவும் பஸகு என்று நிறைய பெண்களும், தலாக் என்று சில ஆண்களும் அங்கு குழுமி நிற்பதற்கு சிறந்த தீர்வைக் ஊருக்குள்ளேயே கண்டு தீர்த்து வைக்கும் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை அது ஒரு புறம்.

நான்கு வேளைத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழும் ஊரின் முக்கியஸ்தராம் என்று அறியப்பட்ட நபர், தனது மோட்டார் சைக்கிளில் இரவு நேரத்தில் கொண்டுவந்த போத்தல் நீலாவணை உள் வீதி ஒன்றில் தவறி விழுந்துள்ளது. அங்கு ஓடிச்சென்று பார்த்தால் சாராய போத்தல். இஷாத் தொழுகையின் பின் வீட்டில் இருந்து குடிக்க கொண்டு போறார். ” பைட்ஸ்” மனைவி செஞ்சி தருவாவாம். சுபஹ் தொழுகை இல்லை. ( அதுக்குத்தான் நான்கு வேளை என்றேன்). இவரும் ஊரை கட்டுப்படுத்துபவர்களில் ஒருவராம்.

இப்படியெல்லாம் கேவலமான ஊராக மருதமுனை மாறிக் கொண்டிருக்க – ஊர் முக்கியஸ்தர்கள் என்று மக்களை நம்ப வைக்கும் சிலரும் அதே கேவலத்தை செய்ய – மருதமுனையை ஒரு கட்டுக்கோப்பில் வைத்திருக்கும் பொறுப்பை யார் கையிலெடுப்பது என்பதே இன்று ஊர் இளைஞர்களிடம் எழுந்துள்ள கேள்வி.

நேற்று ஒரு இளைஞரின் ஆதங்கம் இவ்வாறு இருந்தது.

” களிசறைத்தனம் ஊருக்குள்ள கூடிட்டு மாமா. இல்லாட்டி தம்ஸீர இப்படி கொண்டிருப்பானுகளா ? ஹரவாப்போன மாவாவ திண்டு நாசமாப்போறானுகள் .” என்றார்.

அன்றைக்கு, திருமணமான ஒருத்தன்- ஒருத்தியை கூட்டிக்கு ஓடிட்டான். இவங்களை சேர்த்து வைக்க ஒரு உலமா காசு வாங்குறான் என்றால் , மருதமுனை உலமா சபையை எவன் மதிக்கப்போறான்.

நேற்று நடந்த நகைச்சுவையான உண்மை சம்பவம் இது.

சாராயம் குடிச்சிக்கி ஒருவர் வந்தார்.
நோன்பு காலத்திலையுமா? என்று கேட்டேன்.
என்ன செய்யலாம் குடிச்சிட்டன். தம்ஸீர நினைச்சி கடும் கவலை அதான் என்று இழுத்தார். சும்மா பல்ப் கட்டித்தந்தான். அவனைப் போய் கொலை செஞ்சிபோட்டானுகள். கொலை செய்றாங்க, வட்டிக்கு கொடுக்காங்க, கூட்டிக்கு ஓடுறாங்க, மச்சான் ஊரில இல்லை வீட்ட வா இரவைக்கு 12 க்கு பொறகு என்டு கூப்புர்ராளுகள். இதையெல்லாம் விட்டுப்போட்டு நாம சாராயம் குடிக்கத்த கேட்கானுகள். கேட்கவனும் கௌரவ வளப்புனி.
என்ட காசி, என்ட பைக். பாருக்கு போய் குடிக்கன். அல்லாஹ்வுக்கும் எனக்கும் தான் பிரச்சினை. கேவலமா நடக்கவன் ஊருக்குள்ள நல்லவன்.சாராயத்த அப்பப்ப குடிக்கவன் கெட்டவன். நீங்களும் ஒங்கட ஊரும் ” என்று மளமளவென உளறிவிட்டு போய்ட்டார். இந்த உளறலில் எந்த தவறும் கிடையாது.

ஆனால், இந்தளவுக்கு தைரியமாக சாராயத்தையும் குடிச்சிக்கி தெனாவெட்டா பேசுறார் என்றால்- இவரைக் கட்டுப்படுத்த ஊரில் யாருமில்லை என்பதுதான் அர்த்தம்.

மருதமுனை உலமா சபை என்று ஒன்று இருக்கிறது. அது அதுர பாட்டுக்கு தூங்குது. அது அப்படியே தூங்கட்டும். அதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

அப்படி என்றால் இந்த ஊரை கட்டுப்படுத்துவது யார்? இது தொடர்பில் அவசரக் கலந்துரையாடல் அவசியமாகின்றது. மருதமுனையில் அனைத்து தரப்பினராலும் உண்மையாக மதிக்கப்படுகின்ற, சுய நலமற்ற ஒரு தரப்பு – இளைஞர்களின் ஒத்துழைப்புடன் இந்த கலந்துரையாடலை முன்னெடுக்க வேண்டும்.

Web Design by The Design Lanka