"ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல" எனும் சட்டத்தரணி அலி சப்றி அவர்களின் கூற்று தவறானது. » Sri Lanka Muslim

“ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல” எனும் சட்டத்தரணி அலி சப்றி அவர்களின் கூற்று தவறானது.

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சட்டத்தரணி மர்சூம் மௌலானா


மனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை உருவாக்கும் என்பது தொடர்பில் எச்சரிக்கிறேன்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இது தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இலங்கையின் பாரம்பரிய முஸ்லிம்கள் ஷாபி மற்றும் ஹனபி மத்ஹப் ஆகியவற்றை பின்பற்றி வந்தவர்கள் என்பதை அவர் நன்கு அறிவார் என்றே நினைக்கிறேன்.

ஏனெனில் இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டமாகிய முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் இந்த மத்ஹப்களை அடிப்படையாக வைத்தே அன்றைய உலமாக்களாலும் சட்டத்தரணிகளாலும் வரையப்பட்டது.

அலி சப்ரி கலந்து கொண்ட நேர்காணல் இலங்கை முஸ்லிம்களின் உடை நடை பாவனை மற்றும் உப கலாசார ( Sub culture) பாரம்பரியம் தொடர்பில் பல விடயங்களை பேசிய போதிலும் யாதேனும் ஒரு மத்ஹபை பின்பற்றுவது என்பதும் இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியத்துடன் ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்தது என்பதை அவருக்கு இத்தால் அறியத்தருகிறேன்.

Judicial Precedent என்று அழைக்கப்படும் முத்தீர்ப்புக் கோட்பாடு பற்றி குறித்த சட்டத்தரணி நன்கு அறிவார்.

பலதசாப்தகாலங்களுக்கு முந்திய வழக்குகளுக்கு காலம் சென்ற நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை அதுபோன்ற நிகழ்வுகளை கொண்ட இன்றைய வழக்குகளுக்கும் பிரயோகிக்கலாம் என்பதே முத்தீர்ப்புக் கோட்பாடு பற்றிய எளிய விளக்கம்.

அது போன்ற பிரயோகமுறைமையை வழங்குவதே மத்ஹப்களின் மரபு. அவற்றை பின்பற்றுவது நமது பாரம்பரிய முஸ்லிம்களின் உலமாக்களின் பண்புசார் ஒழுக்கம்.

குர்ஆனும் ஹதீஸூம் மாத்திரம்தான் இஸ்லாம் என்று கூறுவது இஸலாத்தின் ஆய்வு முறைமையை அதன் தொன்மத்தை மறுதலிப்பதாகும். அத்தகைய குதர்க்கங்கள்தான் அடிப்படைவாதத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்தன என்பதை அடிப்படை வாதத்தை எதிர்கும் சட்டத்தரணி அலி சப்றி புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் அடிப்படை வாதம் இஸ்லாமிய இயக்கங்களால் மாத்திரமல்ல மதசார்பற்ற ( Secular Education) கல்வி முறையாலும் தோற்றுவிக்கப்படுகன்றன என்பதற்கு சட்டத்தரணி அலி சப்றியின் வாதமும் ஒரு சான்று.

இலங்கை ஆடை மரபுக்குள் முஸ்லிம்களின் பாரம்பரிய ஆடை என்பது எப்படி Sub Culture என்று அவர் கூறுகின்றாரோ அதே போல் இஸலாமிய கல்வி முறையில் மத்ஹப்களை கற்பதும் பின்பற்றுவதும் Sub culture தான்.

இவர் போன்ற சட்டத்தரணிகள் மேற்குலகின் குளிர்ச் சூழலின் கலாசாரமான கோட் ,சூட் , டை ஆகியவற்றை அணிவது எத்தகைய Sub Culture என்பது தொடர்பில் ஒரு சர்ச்சையை தொடர்வது எப்படி ஆரோக்கியமில்லையோ அவ்வாறானதுதான் “ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல ” எனும் வாதமும் ஆரோக்கியமல்ல என்ற கருத்தை மிகவும் ஆணித்தரமாக முன் வைக்க முயல்கின்றேன்.

இலங்கையின் சிவில் நடை முறைக் கோவை ஒரு சட்டமாக இருந்தாலும் முக்கிய வழக்குகளை தொகுத்து ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ எழுதிய நூல் சிவில் சட்டத்தரணிகளுக்கு மிகவும் உபயோகமானது. இன்னும் பின்னர் வந்த ஓய்வு பெற்ற நீதிபதி U.L.A.மஜீத் அவர்கள் எழுதிய முக்கிய குறிப்புகளுடன் கூடிய வழக்குகளை கோர்த்த சிவில் நடை முறை தொடர்பான நூல் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபோல் எல்லா விதமான துறை களிலும் உண்டு.

அது போன்றதே இஸ்லாத்தில் மத்ஹப்களும் குர்ஆன் ஹதீஸ் ஆகியவற்றை மூலாதாரமாக கொண்டு அறிவும் ஞானமும் காெண்ட இமாம்களால் தொகுக்கப்பட்டவை.

இவை தொடர்பில் கவனம் செலுத்தாமல் கண்டனம் தெரிவிக்காமல் அகில இலங்கை உலமா சபையும் அதன் தலைவர் றிஸ்வி முப்தி அவர்களும் இருப்பார்களேயானால் அது கள்ள மௌனமே அன்றி வேறில்லை.

பிரித்தானியர் காலனித்துவ காலத்தில் மதசார்பற்ற கல்வி முறைமையை பாடசாலைகளில் தோற்றுவித்த போது அன்றைய நமது முஸ்லிம் உலமாக்கள் அத்தகைய கல்வி முறைமையை எதிரத்ததற்கான காரணம் மார்க்க ஞானம் இன்றி இவ்வாறு பலர் தேன்றுவார்கள் என்ற அச்சம்தான் என்பதை பற்றியும் சிந்திப்போமாக!

Web Design by The Design Lanka