பதவியா ? சமூகமா? முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிர்கொள்ளும் சவால்! » Sri Lanka Muslim

பதவியா ? சமூகமா? முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிர்கொள்ளும் சவால்!

IMG_20190604_132532

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Fauzar mahroof

முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது அமைச்சுப்பதவிகளை துறந்த நிகழ்வானது, இலங்கை முஸ்லிம்களின் இதுவரையான அரசியல் வரலாற்று செயற்பாட்டில் மிக முக்கியமான பதிவுதான். அப்படியானதொரு தீர்க்கமான அரசியல் கூட்டு முடிவினை முஸ்லிம் அரசியல் தலைமைகள் எடுக்காது விட்டிருந்தால் , அப்போது உருவாக்கப்பட்டிருந்த இனவாத முற்றுகையை தகர்த்து எறிய முடியாது போயிருக்கும்.

உரிய காலத்தில் உரிய வகையில் எடுக்கப்பட்ட அந்த முக்கிய முடிவு , முஸ்லிம் எதிர்ப்பு இனவாதிகளின் உடனடி திட்டங்களை நலமடித்து , நிலைமைகளை தணித்ததை அதன் பின்னான நிலமைகள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன .

இந்த முடிவானது இன்றைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் கட்சிகளினதும், தேசியக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களினதும் கூட்டு முடிவு என்பதால், இலங்கை அரசியலிலும் , இலங்கை ஒடுக்கப்படும் மக்களின் பார்வையிலும் , இந்த நிகழ்வு ஒரு தாக்கத்தினையே நிகழ்த்தி இருக்கிறது. யாருமே இந்த முடிவினை நிராகரிக்காது, பதவிகளை கட்டிப்பிடித்து காலம் தள்ள நினைக்காதது கவனத்திற்கொள்ளத் தக்கது.

இந்த அரசியல் தலைமைகள், இந்த முடிவினை எடுப்பதற்கு மிக முக்கிய காரணம் ஒட்டு மொத்த முழு முஸ்லிம் சமூகத்தின் மன நிலையையும் எண்ணப்பாட்டையும் துல்லியமாக உணர்ந்திருந்ததும் மிக முக்கிய அழுத்தம் என்று சொல்லலாம்.

ஞானசார தேரர் விடுத்த 12 மணி நேர காலக்கெடு முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய வன்முறைக்கு தீமூட்டிக் கொண்டிருந்த அபாய சூழல் அது. பதவியில் இருக்கும் அரசாங்கம் நிலைமையை கையாள வக்கில்லாமல் மூச்சில்லாமல் திணறிக் கொண்டிருந்தது.

அன்று தோற்றுவிக்கப்பட்டிருந்த அந்த இனவாத முற்றுகை நிலை மிகக் கொதி நிலையை ஏற்படுத்தி இருந்தது. முஸ்லிம்களுக்கு ஏதாவது நடந்திருந்தால் அதற்கான முழுப் பொறுப்பினையும், இன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்த முஸ்லிம் தலைமைகளே பொறுப்பு எடுக்க வேண்டி வந்திருக்கும். பாவத்தினையும் பழிச்சொல்லையும் சுமப்பதுடன், தமது அரசியல் நிலை இருப்பையும் மிக மோசமாக பாதித்திருக்கும் என்பதும் இந்த அரசியல் தலைமைகளுக்கு நன்கு தெரிந்திருந்தது.

ஆகவே தற்காலிகமாக சமூக இருப்பையும் காப்பாற்றி , தற்காலிகமாக தம்மையும் அவர்கள் காப்பாற்றிக் கொண்டனர். இந்த முடிவின் மூலம் இரண்டு விடயங்கள் முன் எழுந்தன.
ஒன்று… உடனடி நிலைமையை தணித்தல்… அது எதிர் கொள்ளப்பட்டு, உடனடி விளைவினைத் தந்துள்ளது.
இரண்டாவது .. இப்போதும் தொடரும் அச்சுறுத்தல்கள், இனவாதப் பிரச்சாரங்களை எதிர் கொள்வதும், முஸ்லிம்களின், இருப்பினையும் பாதுகாப்பினையும் உறுதி செய்து, அம்மக்களை மோசமான ஒடுக்குமுறை, இனவாத முற்றுகையிலிருந்து விடுவித்தல்.

இந்த இரண்டாவது விடயத்தினை எப்படி இந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கையாளப் போகிறார்கள் என்பதில் இருந்தே இவர்களின் அரசியல் முடிவின் வெற்றி தங்கி இருக்கிறது. இதனை இவர்கள் செய்யத் தவறுவார்களேயானால், மீண்டும் இவர்கள் மோசமான அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள்.
இந்த ராஜினாமா தீர்மான செயற்பாட்டை , ஒரு அரசியல் சர்க்கஸ் விளையாட்டாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் பயன்படுத்தி விடுமோ என்கிற அச்சம் சமூக சக்திகளிடம் உள்ளது.
000

இப்போது பாருங்கள்..
முழு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கொடுஞ் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்புத் தரப்பு 500க்கும் உட்பட்டவர்கள் என்கிறது… ஆனால் திரட்டப்படுகின்ற தகவல்கள் , இத்தொகை ஆயிரங்களை தாண்டுகிறது என்கிறது.

கைது செய்யப்பட்டவர்கள் எங்கெங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், இவர்கள் மீது எந்த வகையான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்கிற விபரங்கள் இல்லை.

உள் நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் இந்த விடயத்தினை அரசியல், மனித உரிமை விவகாரமாக இத்தலைமைகள் இன்னும் கொண்டு செல்லவில்லை.

அச்சுறுத்தலால் அன்றாட தொழில்களை இழந்து, நாளாந்த ஜீவனோபாயத்தினை ஒட்ட முடியாமல், தவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

இப்போது பாருங்கள் , ஈஸ்தர் தாக்குதல் தொடர்பான உண்மை நிலையை கண்டறிய சபானாயகரால் நியமிக்கப்பட்டு விசாரணையை மேற்கொண்டுவரும் ஆணக்குழுவை கலைத்து விடுமாறு மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தி , இலங்கை ஜன நாயக அம்சத்தினையே நசுக்கத் தொடங்கி விட்டார்.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் யார்? இதன் பின்னணி என்ன ?
தகவல்கள் முன் கூட்டியே தெரிந்தும் இதனை தடுக்கத் தவறிய மறை கரங்கள்
எவை? என்பன நாட்டு மக்களுக்கு தெரிதல் அவசியம், அது ஒட்டு மொத்தமான முழு முஸ்லிம் சமூகத்திற்கும் முன்னாலுள்ள மிக முக்கியமான தேவை, இந்த உண்மைகள் வெளி வருவது.

ஆகவே , இந்த உண்மைகள் சாட்சியங்களாக நாட்டு மக்க்ளுக்கு முன் வருவதை தடுக்கும் சக்திகளுக்கு எதிராக உடன் போராட வேண்டிய தேவை இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு முன் உள்ளது.
இந்த பகிரங்க விசாரணை ஆணைக்குழு , இந்த விவகாரத்தில் நடப்பது முஸ்லிம்களை பொறுத்து மட்டுமல்ல, முழு இலங்கை சமூகங்களுக்கும் முக்கியமானது.
இடதுசாரிகள், ஜன நாயக சக்திகளுடன் பேச வேண்டியுள்ளது.
இனவாத ஒடுக்குமுறைய எதிர்த்து நிற்கும் தென்னிலங்கை, மற்றும் தமிழ், மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச வேண்டியுள்ளது.

இலங்கையிலுள்ள வெளி நாட்டு இராஜதந்திர தூதுவராலயங்களுக்கு , நிலைமைகளை விளக்கும் வகையிலான தூதுக் குழுக்கள், நிலைமை அறிக்கைகள் கையளிக்கப்படல் வேண்டும்.
இவைகள் இன்று முன்னுரிமை கொடுத்து செய்யப்பட வேண்டிய உடனடிப் பணிகள்.

Web Design by The Design Lanka