அசாத் சாலி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் » Sri Lanka Muslim

அசாத் சாலி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

IMG_20190612_060126

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹசீமின் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பிற்கு முன்னாள் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீமின் சகோதரரான சாயிம் என்பவர் உதவி செய்துள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சி வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு காத்தான்குடி பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு காத்தான்குடியில் சஹ்ரான் என்ற நபர் பாரம்பரிய முஸ்லிம் மக்களின் 120 வீடுகளை தீ வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், பொலிஸார் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் இதனால் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது சஹ்ரானை கைது செய்ய முயற்சித்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ததாகவும் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டதால், பாரம்பரிய முஸ்லிம் மக்கள் முறைப்பாடுகளை வழங்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவ்வாறானவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு தேவையான சாட்சிகளை முன்வைக்குமாறு பாராளுமன்ற தெரிவுக்குழுவினர் அசாத் சாலியிடம் தெரிவித்திருந்தனர்.

சாட்சியமளிக்க வருமாறு கூறியதால் வந்ததாகவும், சாட்சியங்களை எடுத்துவர போதுமான நேரம் கிடைக்கவில்லை எனவும் அவர் பதிலளித்துள்ளார்.

எவ்வாறாயினும் தாக்குதல் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் சஹ்ரான் தொடர்பில் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பில் 1994 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பில் 5 பாதுகாப்பு செயலாளர்களிடம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka