ராஜராஜனும் தேவதாசி முறையும் » Sri Lanka Muslim

ராஜராஜனும் தேவதாசி முறையும்

IMG_20190612_232453

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

A.Marx


இறுதியாக ஒன்று. ராஜராஜன் தான் தேவதாசிகள் முறையைக் கொண்டுவந்தான் என்பதும் அப்படித்தான். அதில் உண்மையும் உண்டு பெரிய தவறும் உண்டு. கணவன் என ஒருவர் இன்றித் தம் அழகாலும், ஆடல் பாடல் திறனாலும் பலரையும் ஈர்த்து வாழும் பெண்டிர்கள் சோழர் காலத்திற்கு 500 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருந்து வந்தனர். சிலப்பதிகாரத்தின் மாதவி, அவரது அன்னை சித்திராபதி, மாதவியின் மகள் மணிமேகலை முதலானோர் அந்த மரபில் வந்தவர்கள். கோவலன் மறைவுக்குப் பின் ஆடல் பாடற் கலைகளில் வல்லவரான மாதவியும், மிக்க அழகு மிக்கவரான மணிமேகலையும் அத் தொழிலை விட்டு விலகி பௌத்தத்தில் இணைந்து துறவுப் பாதையைத் தேர்வு செய்தபோது அவர்கள் தம் குல மரபை விட்டுச் செல்வதாக சித்திராபதி வருந்தி எப்படியாவது மணிமேகலையைக் குலத் தொழிலில் ஈடுபடுத்த முனைவதைப் பெரும்புலவர் சாத்தனார் விரிவாகச் சொல்வார்.

அனால் இவர்கள் தேவதாசிகள் அல்ல.

தேவதாசி என்கிற அமைப்பு சங்க காலத்திலோ காப்பிய காலத்திலோ கிடையாது. தேவதாசி என்போர் கோவில் என்கிற நிறுவனம் தமிழகப் பொருளாதார அமைப்பில் ராஜராஜன் காலத்தில் முக்கியம் பெரும்போது உருவான ஒரு அமைப்பு. அவன் காலத்தில்தான் அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் எல்லாவற்றிலிருந்தும் ஓலைகள் அனுப்பி 400 கன்னிப் பெண்கள் கொண்டுவரப்பட்டு அவர்கள் தாசிகள் ஆக்கப்பட்டனர். ‘தேவதாசி’ என்பதன் பொருள் அந்த ஆலயத்தின் தலைமைக் கடவுளுக்கு மனைவி என்பதுதான். தாசி என்பது இங்கு தாலி கட்டிக் கொண்ட மனைவி எனப் பொருள்படும். அவர்கள் அதன் பின் கல்வி, நடனம், பாடல் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படுவர்.

ராஜராஜனின் காலத்திலும், அதற்குப் பின்னரும் கூட அவர்களில் பலர் ஆலயங்களுக்கு தானங்கள் வழங்கும் அளவிற்கு வளமாகவும் இருந்துள்ளனர்.

இன்னொரு பக்கம் அவர்கள் காமக் கிழத்தியர்களாகவே அதிகாரத்தில் உள்ளவர்களால் பயன்படுத்தப்படும் நிலையும் இருந்தது. குலோத்துங்கன் ஆட்சியில் திருக்காளத்தி ஆலயத் தேவதாசிகளை அவன் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்று பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்்து குறித்த திருக்காளத்தி ஆலயக் கல்வெட்டு பற்றி நேற்று எழுதி இருந்தேன்.

சென்ற நூற்றாண்டில் தேவதாசி முறையை ஒழிப்பதில் மூவலூர் இராமாமிர்தம் முதலான திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் முக்கிய பங்கு வகித்ததை இங்கு குறிப்பிடுதல் அவசியம். ஆனால் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற பார்ப்பனர்கள் அந்த நிறுவனத்தைக் கட்டிக் காக்க முயற்சித்ததும் வரலாறுதான்.

தமிழில் அச்சு கோர்ப்பு முறையை அறிமுகம் செய்த சீகன்பால்கு, அவர் காலத்தில் (1700 கள்) அன்றைய தமிழகக் கல்வி முறை குறித்து சேகரித்த தரவுகளில் நாம் வியப்படையும் ஒரு செய்தியைக் காண முடிகிறது. அன்று பெண்களில் தேவதாசியருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு இருந்துள்ளது. அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட நூல்களின் ஒரு சிறு பட்டியலையும் சீகன்பால்கு தருகிறார். அதில் சில நூல்களை நம்மால் இன்று இனம்காண முடியவில்லை. அந்த நூற்பட்டியல் சீகன்பால்கு பற்றிய என் குறு நூலில் உண்டு.

கர்நாடக இசை அறிஞரான தியாகையருக்குத் திருவையாறில் சமாதி எழுப்பி அருகில் அடக்கமாகி இருக்கும் புட்டலக்ஷ்மி நாகரத்தினம்மாள் தேவதாசி மரபில் வந்தவர். ஒரு சமஸ்கிருத மாநாடொன்றிற்குத் தலைமை தாங்கும் அளவிற்குப் பாண்டித்தியம் பெற்றவராக அவர் இருந்தார். அவரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம் என்கிற நிறுவன அடிப்படையிலான ஏற்பு இல்லாமல் வாழ்ந்தவர்தான். அந்தத் தயாரிப்பாளர் அவருக்கு இறுதியில் அளித்த சொத்தைப் பயன்படுத்தித்தான் தியாகையருக்கு அந்த நினைவிடத்தை உருவாக்கினார் எனச் சொல்வார்கள்.

தேவதாசிப் பரம்பரையில் பிறந்தவர்களுக்குத் தந்தை பெயர் கிடையாது என்பர். நாகலட்சுமி அம்மையாரின் தலைப்புப் பெயராக உள்ள புட்ட லக்ஷ்மி என்பது அவரது தாயாரின் பெயர் என்பது குறிப்பிடத் தக்கது.

தேவதாசியர்கள் கல்வி வல்லமை பெற்றவர்களாக இருந்தனர் என்பதற்கு இன்னொரு சான்று சென்ற நூற்றாண்டில் சர்ச்சையான ‘ராதிகா சாந்தவனம்’ எனும் சிருங்கார காவியத்தை எழுதிய முத்துப் பழனியும் ஒரு தேவதாசி மரபில் வந்தவர்தான். அவரது நூலை நாகரத்தினம்மாள் வெளியிட்டபோது வீரேசலிங்கம் பந்துலு போன்ற தெலுகு அறிஞர் பெருமக்கள் அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அந்த நூல் தடை செய்யப்பட்ட வரலாறு சென்ற நூற்றாண்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சி.

ஆனால் தேவதாசியர் எல்லோரும் இப்படி சொல்லிக் கொள்ளத் தக்க வாழ்க்கையை வாழ்ந்தவர்களாக இருந்ததில்லை. பெரும்பான்மையானவர்கள் பாலியல் தொழிலில் தங்கள் வாழ்க்கையை இழந்து வறுமையில் வாடியவர்களாகத்தான் இருந்து மடிந்தனர். தி.ஜானகிராமனின் புகழ்பெற்ற நாவல் ‘மோகமுள்” அப்படி ஒரு வாழ்வைச் சொல்லும் ஒரு அற்புதமான காவியம்.

தமிழகத்தில் தேவதாசிமுறை ஒழிக்கப்பட்டபோது அவர்களில் பலர் திரைப்படத் தொழிலுக்கு வந்தனர் எனவும், தமிழ் சினிமாவில் பாடல்கள் வேறெந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு அதிகமாக இன்றுவரை உள்ளதற்கு அதுவும் ஒரு காரணம் என்றும் தமிழ் திரைப்பட வரலாறு குறித்து மிக ஆழமாக ஆய்வுகள் செய்துள்ள தியோடர் பாஸ்கரன் அவர்கள் கூறுவது குறிப்பிடத் தக்கது.

இம்மாதிரிப் பிரச்சினைகளை அவைகளுக்குரிய complexity யுடன் அணுகுவது முக்கியம். மிகை எளிமைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. பாலியல் தொழிலையே ராஜராஜன்தான் உருவாக்கினான் எனப் புரிந்து கொள்வது அபத்தம். ஆனால் கோவிலுடன் இணைத்து பெண்களை இப்படியான ஒரு தனி சாதியாக உருவாக்கிய “பெருமை” தமிழகத்துக்கும் ராஜராஜனுக்குமே உண்டு.

Web Design by The Design Lanka