இதில் எது உங்கள் தெரிவு?; விசேட கட்டுரை - கட்டாயம் வாசியுங்கள் » Sri Lanka Muslim

இதில் எது உங்கள் தெரிவு?; விசேட கட்டுரை – கட்டாயம் வாசியுங்கள்

IMG_20190614_203502

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Fauzar mahroof


அன்றாடம்அல்லது காலத்திற்கு காலம் நடந்துவரும் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுவது, அதைப்பற்றி பேசுவது ஒரு விடயம். ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு, இதன் அரசியல் தன்மைகளுக்கு
அடிப்படைகள் எவையாக இருக்கின்றன எனக் கண்டு நீண்டகால அடிப்படையில் இதனை மாற்றுவதற்கு அரசியல் தெளிவுடனும் உறுதியுடனும் வேலை செய்வது, தொடர்ச்சியாக இயங்குவது என்பது இன்னொரு விடயம்.

பலர் காலத்திற்கு காலம் நடக்கும் நிகழ்வுகளை பற்றி மட்டும் பேசுவதையும், அதற்கு மேலோட்டமான எதிர்வினையாற்றுவதையும் செய்வர். சிலர் இரண்டையும் செய்வர். காலத்திற்கு காலமான நிகழ்வுகளுக்கு உடன் எதிர்வினை செய்வோர், இலங்கையின் இனத்துவ முரண்பாடுகளுக்கும் இனத்துவ ஒடுக்குமுறை வடிவத்தினை தக்க வைப்பதற்கும் , இலங்கையின் அரசியலமைப்புத் தொடக்கம் இலங்கை அரச கட்டுமாணக் கருத்தியல் வரை ஆழப் பதிந்து இதனை மேலும் மேலும் வலுப்படுத்துவதுடன், மேலும் மேலும் ஊக்குவிக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

இந்த அடிக்கட்டுமாணங்களை மாற்றாதவரை, அல்லது இந்த நிலைமைகளை மாற்றுவதற்கான முன் மொழிவுகளை சாத்தியப்படுத்தாத வரை இலங்கையின் இன, மத முரண்பாடுகளை , மேலாதிக்கத்தினை முடிவுக்கு கொண்டு வரலாம் என நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இலங்கையின் அரசியலமைப்பு பவுத்தத்திற்கும் ,சிங்கள இனத்திற்கும் முதன்மையான இடம் அளிப்பதுடன், ஏனைய இனங்கள், மதங்கள், சமூகங்கள், அவர்தம் பண்பாட்டு கலாசாரங்களுக்கு இரண்டாம் தர அடுக்கினையே ஆழ வலியுறுத்தி நிற்கிறது. இதுவே இலங்கையின் இதுவரையான பிற இனங்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் காலாகவிருக்கிறது.

ஒரு நாட்டின் அரசியலமைப்பில் ஒரு இனம், ஒரு மதம் முதன்மை பெறுவதில் உள்ள மேலாதிக்க அரசியல் தன்மையை விளங்கிக் கொள்ளவே இரண்டு தினங்களுக்கு முன் முக நூலில் ஒரு பதிவினை இட்டேன். முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்த பலருக்கு இதனை விளங்கிக் கொள்ள முடியாதிருந்ததா ? அல்லது விளங்க மறுக்கிறார்களா என்பது இன்னும் பிடிபடவில்லை. ஆனால் பலரும் இஸ்லாமிய நாடுகளில், இஸ்லாம் அரச மதமாக உள்ள நாடுகளில் சிறுபான்மையினர் மீது ஒடுக்குமுறைகள் இல்லை என்கிற தொனியில் வாதிட வருகின்றனர். ஆகக் குறைந்த பட்சம் இதனை தேடிப்படிக்க, தெரிந்து கொள்ள ஆர்வமற்று இருப்பதுடன், உடன் மறுத்தான் எழுதவும் வெளிக்கிடுகின்றனர். இது முட்டாள்தனமாது என்பதுடன், இலங்கையில் பவுத்த மத, சிங்கள இன மேலாதிக்கம் தொடர்பான அரசியல், சமூக எதிர்வினையை செய்வதற்குமான தார்மீக நிலையை சிதைத்துவிடும் என முஸ்லிம் சகோதரர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் இதனை சொல்கிறேன் என்றால், அந்த நாடுகளில் இஸ்லாம் அரச மதமாக இருப்பதை ஆதரிப்போர், அந்த நாடுகளில் நிலவும்
ஏனையவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை கண்டும் காணாமல் இருப்போர், அதனை நியாப்படுத்துவோர் ,இலங்கையில் பவுத்தம் அரச மதமாக இருப்பதை கேள்விக்குற்படுத்த எந்த அரசியல் தார்மீகமும் அற்றவர்கள். இந்த விடயத்தினை இங்கு சொல்வதற்கான காரணம் மதம் அரசியலில் முன்கையெடுப்பதன் பின்னுள்ள விடயங்களை சுட்டிக்காட்டத்தான்.

இன்று இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதாக் கட்சி போன்றவை இந்துத்துவாவை முன்னிருத்தி, இந்தியாவை ஒரு இந்துத்துவ தேசமாக பிரகடனப்படுத்தியே அரசியல் அதிகாரத்தினை பெறுவதுடன், இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பினை ஒழித்து, இந்துத்துவா அரசியலமைப்பினை கொண்டு வருதலே நோக்கமாகும். இந்தியாவில் வாழும் சிறுபான்மையினர், தலித்துகள், இந்தி தவிர்ந்த பிற மொழி பேசுவோர் எதிர்கொள்ளும் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இவைகள் நம்முன்னுள்ள கிட்டிய உதாரணங்களாகும்.

00000
நாம் இனி இலங்கை விகாரத்தினை பார்ப்போம்.

இலங்கை விவகாரத்தினை பார்த்தால், 5 தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை தமிழ் மக்கள் இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றே கோரினர், போராடினர். அகிம்சை தொடக்கம் ஆயுதப் போராட்டம் வரை சென்றும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்பதுடன், பவுத்த பேரினவாதம் ஆழ நிறுவனமயப்பட்டு நிற்கிறது என்பதே உண்மை. இப்போதுதான் முஸ்லிம்களை நோக்கி பாரியளவில், திட்டம் தீட்டப்பட்டு பவுத்த பேரினவாதம் மேலுக்கு வருகிறது. இந்த வகையான அரச ஒடுக்குமுறையை பெருமளவிலான முஸ்லிம்கள் புதியதொரு அனுபவமாகவே பார்க்கின்றனர்.அரசாங்கங்களை, தலைவர்களை மாற்றினால், வாக்குறுதிகள் கிடைக்கப் பெற்றால் எல்லாம் பழைய நிலைக்கு திரும்பி விடும் என நம்புகின்றனர், நம்பவைக்கப்படுகின்றனர். உண்மையான மாற்றம் இதன்மூலம் வரப்போவதில்லை. ஒருவேளை தற்காலிக அமைதி சொற்பகாலத்திற்கு கிடைக்கக் கூடும்.

ஆகவே இந்த இனவாத அடிக்கட்டுமாணங்களை மாற்றாதவரை,அல்லது இந்த நிலைமைகளை மாற்றுவதற்கான முன் மொழிவுகளை சாத்தியப்படுத்தாத வரை இலங்கையின் இன, மத முரண்பாடுகளை , மேலாதிக்கத்தினை முடிவுக்கு கொண்டு வர முடியாது.

இரண்டு வகையான தேர்வுக உள்ளன

01. மதச்சார்பற்ற ஒரு அரசியலமைப்பினை கோரல்.

02. பௌத்த மத , சிங்கள இன அரசியலமைப்பில் , ஏனைய இனங்கள் , மதங்கள் , சமூகங்களுக்குமான சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள்.

இதில் எது உங்கள் தெரிவு என்பது, உங்கள் அரசியல் பார்வையையும் , இலங்கை நடைமுறை யதார்த்தத்தினையும் பொறுத்தது.

இதில் இரண்டில் ஒன்றை முன்வைத்து, சிங்கள அரசியல் தலைமைகளுடன் அரசியல் பேச இன்றுள்ள எந்த முஸ்லிம் தலைவர்களும் தயாராக இருக்கிறார்களா? இல்லை என்பதே நடைமுறை உண்மை.

ஆனால் இந்த விடயம் முஸ்லிம் அரசியல் தரப்பிடமிருந்து எழாத வரை, இந்த முக்கியமான அரசியலமைப்பு மாற்றத்தினை கோராதவரை , அடிப்படை கட்டுமாணத்தின் வழியாக எழும் அரசியல் ஒடுக்குமுறை தீரும் என்று நாம் நினைக்கவில்லை.

Web Design by The Design Lanka