இலங்கைக்கு உரியதல்லாத அந்நியமான சமாச்சாரம், அரபு மொழிமட்டும்தானா? » Sri Lanka Muslim

இலங்கைக்கு உரியதல்லாத அந்நியமான சமாச்சாரம், அரபு மொழிமட்டும்தானா?

IMG_20190616_052839

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Riyas qurana


இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தமிழ் பேசுகிறார்கள். அதற்கு நிகராக சிங்களத்தையும் பேசுகிறார்கள். ஆங்கிலம் உளகளவிலுள்ள அனைத்து மக்கள் மீதும் திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது உலகப் பொதுமொழி என்ற ஒரு கருத்தை பின்னால் வைத்துக்கொண்டு இந்த திணிப்பு நடந்தேறுகிறது.

அதே நேரம், தாங்கள் பின்பற்றும் மதநுால்களை படிக்கவும் அறிந்துகொள்ளவும் அரபு மொழியை பயன்படுத்துகிறார்கள். இது 80 களுக்குப் பிறகு தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவிலான முஸ்லிம்கள் பெயர வேண்டியிருந்தது. அங்கு பல ஆண்டுகளாக கூலி உழைப்பாளர்களாக வாழ்கிறார்கள்.

அவர்களின் பொருளாதார நிமித்தமாக வசிக்கும் நாடுகளில் உரையாடுவதற்கும், அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரபு மொழி அவசியமாகின்றது. அதன் பின்னரே அதிகமான முஸ்லிம் பொது மக்களுக்கும் அரபு மொழி தெரியவந்தது.

மத்திய கிழக்கில் கூலி உழைப்புக்காக இலங்கையிலிருந்து சென்றிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கும் அரபு மொழி பேச முடியுமாக இருக்கிறது.

வறியநாடான இலங்கை தனது குடிமக்களைக் காப்பாற்ற முடியாமல், பொருளாதார வருமானத்திற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியை அனுமதித்திருக்கிறது.

சில ஆண்டுகளின் முன்பு, கொரியாவுக்கு கூலித் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதற்காக கொரிய மொழியைக் கற்றுக்கொடுக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியதையும் இங்கு நினைவு கூரலாம்.

இருபதாம் நுாற்றண்டிலும் அதற்கு முன்பும் கூட இலங்கை முஸ்லிம்கள் அரபுத் தமிழ் என்ற ஒரு மொழியை பயன்படுத்தினர். அதில் பல இலக்கியங்கள் வெளிவந்திருக்கின்றன.

ஒரு மக்கள் கூட்டம் தனக்கான தனித்துவமான பண்பாடு பழக்கவழக்கம் நடைமுறைகள், மதநம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டிருப்பதற்கும், விரும்பிய ஒன்றைத் தேர்வு செய்வதற்கும் இருக்கின்ற உரிமையை மறுத்து, தனித்தன்மையை இழந்துவிட்டு, பிற சமூகங்கள் விரும்பும் ஒன்றையே பின்பற்ற வேண்டும் எனக் கோருவது மிக மோசமான அடிப்படைவாத தன்மைகொண்டது.

மொழியை மையமாக வைத்து முஸ்லிம்கள் தமிழராக அவர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களாக மாற வேண்டும் என்ற தோரணையில், மிக மோசமாக சிந்திக்கிற தமிழ் அடிப்படைவாதிகள் சிலரை காண முடிகிறது.

அரபு மொழியை முஸ்லிம்கள் கற்பதும், அவர்களின் சமூக உள்ளக அம்சங்களில் பயன்படுத்துவதும், இனவாதமாக பார்க்கப்படுவது முட்டாள்தனமானது.

அரபு மொழியையே பயங்கரவாத்தின் மொழி என்ற தோரணையில் சிங்கள பௌத்த தேசியவாதிகள்- எதுவும் அறியாத சிங்கள மக்கள் மத்தியில் பரப்புவது அதைவிட கேவலமானது.

தனிநபரோ, ஒரு சமூகமோ இந்த உலகிலுள்ள எந்தவொரு மொழியையும் பயன்படுத்தலாம். தேர்வு செய்யலாம். இதில் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பது, மனிதாய அறிவுசார் நடத்தைகளுக்கு எதிரானது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் கூட தமிழை கைவிட்டுவிட்டனர். உலகில் எத்தனையோ மொழிகள் மறைந்தே போய்விட்டன. மொழி மற்றவர்களோடு உரையாடவும், பகிர்ந்துகொள்ளவுமானதே. ஒருமொழியை பயன்படுத்த விரும்பாமல் தவிர்ப்பதற்கான உரிமைகூட மனிதர்களுக்கு உண்டு.

கட்டாயம் இந்த மொழியைப் பயன்படுத்த வேண்டும். இதுதான் இந்த சமூகத்துக்கான மொழி என்றோ, இலங்கைக்கான மொழி என்றோ அதை பிறசமூகத்தின்மீது திணிக்க முடியாது.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், சிங்களத்தையும் பயன்படுத்துகிறார்கள், தமிழையும் பயன்படுத்துகிறார்கள். ஏன் ஆங்கிலத்தைக்கூட பயன்படுத்துகிறார்கள். அதுபோலதான், அரபு மொழியையும் பயன்படுத்துகிறார்கள்.

இதை அனுமதிப்பதுதான் சக சமூகமாக முஸ்லிம்களை கருதுவதற்கான அடிப்படை. அதை மறுத்து, அவர்களின் கருத்தையும், படைப்புக்களையும், மத நம்பிக்கைகளையும் கையாள்வதற்காக பாவிக்கும் மொழியை அவர்களின் சிந்தனையிலிருந்து அழித்துவிட முயற்சிப்தென்பது, அந்த சமூகத்தை அழித்துவிடுவதற்கு சமமானது.

உண்மையில், முஸ்லிம் சமூகத்தை இலங்கையில் அழித்துவிட விரும்புகிறீர்களா? அல்லது சக சமூகமாக கருதி அவர்கள் தங்கள் தனித்துவத்தோடு வாழ்வதை ஏற்றுக்கொள்ளப் போகிறீர்களா? என்பதிலிருந்துதான் பிற சமூகங்களுடனான உறவு சாத்தியமாகும். இதுதான் மற்றமைகளை மதிப்பது என்று பொருளாகும்.

தமிழைப் பேசுகிறார்கள் ஆகவே தமிழர்களாகவே தங்களை அடையாளப்படுத்த வேண்டும். இலங்கைக்கு அந்நியமான மொழியான அரபு மொழியை பாவிக்க கூடாது என்று வற்புறுத்துவது ஏன்?

இலங்கைக்கு தொடர்பற்ற மொழி அரபு எனவே இலங்கையில் எவரும் அரபு மொழியை பயன்படுத்தக் கூடாது என்று சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் கோருவது ஏன்?

இல்லை, இலங்கைக்கு தொடர்பற்ற மொழியை – பண்பாட்டை, கலாச்சாரத்தை, என அனைத்தையும் இலங்கையில் வசிக்கும் எவரும் பயன்படுத்தக் கூடாது என்று கூறினால், அதை ஏற்றுக்கொள்ள முடியும்.

அதுதான் நியாயமானது. அப்படி எனில், சமஸ்கிருதம், பாளி, ஆங்கிலம், என எத்தனையோ மொழிகளை அனைவரும் கைவிட்டுவிட்டு தமிழையும், சிங்களத்தையும் மட்டுமே அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

இலங்கை உலகிலுள்ள வேறு எந்த நாட்டுடனும் தொடர்புகளை வைத்திருக்க கூடாது. சிங்களத்தையும், தமிழையும் மாத்திரமே பயன்படுத்த வேண்டும். இணையத்தை தடை செய்ய வேண்டும். வெளிநாட்டு உதவிகளை கைவிட வேண்டும். சொந்த நாட்டிலேயே உற்பத்தி செய்து, சொந்த ஆடைகளை தயாரித்து, பயன்படுத்த வேண்டும். இலங்கைக்கு தொடர்பற்ற உணவு தொடங்கி உடை, பொருளாதாரம், என அனைத்தையும் கைவிட்டுவிட வேண்டும்.

கட்டிடங்களை இடித்து தள்ள வேண்டும், சட்டங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட வேண்டும். அரசமைப்பு, நிருவாக கட்டமைப்பு அனைத்தையும். ஏனெனில், இவை எதுவும் இலங்கைக்குரியதல்ல.

இலங்கைக்குரியவை அல்லாத அந்நியமான அனைத்தையும் கைவிட்டுவிடுவோம் வாருங்கள் என அழைத்தால் அது நியாயமானது. ஏற்றுக்கொள்ளக் கூடியது. இவை அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு, முஸ்லிம்களின் செயற்பாடுகளில் மட்டும் மயிர் புடுங்கவருவதுதான் பக்கா இனவாதம். பக்கா அடிப்படைவாதம். பெரும்பான்மையினரின் ஆதரவு இருக்கிறது என்பதற்காக இவை எல்லாம் ஜனநாயகமான விசயங்களாகவும், நியாயமான விசயங்களாகவும் மாறிவிடும் என்பது அடிமுட்டாள்தனமானது.

Web Design by The Design Lanka