தமிழர் தேசியத்தின் தன்மானத்தை உரசிப்பார்த்த பொதுபலசேனவின் கண்டி மாநாடு » Sri Lanka Muslim

தமிழர் தேசியத்தின் தன்மானத்தை உரசிப்பார்த்த பொதுபலசேனவின் கண்டி மாநாடு

IMG_20190709_151252

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

A.L.Thavam


பொதுபலசேன கண்டி போகம்பறையில் நடாத்திய கூட்டம் மிகமுக்கியமான செய்தி ஒன்றை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொல்லி இருக்கிறது. அதாவது,
“சிங்களவர் மட்டும்” என்ற தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு சிங்கள மக்களை அழைக்கும் அபாயமான அறிவித்தலாக அது அமைந்துள்ளது.

அக்கூட்டத்தில் பேசிய ஞானசார தேரர், பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார்;
👉🏿சிங்கள அரசை அமைப்போம்
👉🏿சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம்
👉🏿பாராளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம்
👉🏿சிங்களவர்கள் முதுகெலும்புடன் இருப்போம்

ஞானசாரவின் இந்தக் கருத்துக்கள் தமிழ் பேசும் சமூகத்தின் மீது “சிங்களம் மட்டும்” என்ற சட்டத்தினூடாக திணிக்கப்பட்ட மொழிசார் இன அடையாள மறைப்பு அல்லது உரிமை மறுப்பை விட, ஒரு படி மேலானதாக பார்க்க வேண்டிய விடயமாகும்.

இது முஸ்லிம்களை இலக்கு வைத்ததாக மேலெழுந்தமானதாக கூறப்பட்டாலும் – உண்மையில் மிக நுணுக்கமாக தமிழர்களையும் சேர்த்து இலக்கு வைக்கப்பட்டிருப்பதையும் – அவர்களின் 30 வருட ஆயுதப்போராட்டத்தின் நியாயங்களை மறுத்து – “தமிழர் தாயகம்” என்ற “தமிழ் தேசிய கோட்பாட்டிற்கு” எதிரானதாகவும் அமைந்திருப்பதை தமிழ் புத்திஜீவிகள் புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கின்றேன்.

அதாவது, முஸ்லிம்கள் மட்டுமல்ல – தமிழர்கள் கூறுவதை போன்று, இலங்கையில் அவர்களுக்கென்றும் எந்த “பாரம்பரிய நிலமும்” கிடையாது என்பதை – மீண்டும் பகிரங்கமாக பிரகடனம் செய்திருக்கிறார்கள் என்பதுதான் இதன் மறுபக்கமாகும்.

இதனை சிறிய விடயமாக தமிழர்கள் எடுத்துக்கொள்ள முடியாது. ஏன்எனில், பண்டா – செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிய வீதிக்கிறங்கிய அதே மத துறவிகள் கண்டியில் இந்த பிரகடனத்தை செய்திருக்கிறார்கள்.

அதுவும், இரு வாரங்களுக்கு முன்னர் தமிழர்களின் காவலனாக, கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு ஆதரவாக கள விஜயம் மேற்கொண்ட அதே நபர்கள், மாநாடு கூட்டி பிரகடனம் செய்திருக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை தமிழர்களை இலக்கு வைக்க முஸ்லிம்களை தாலாட்டுவதும் – முஸ்லிம்களை இலக்கு வைக்க தமிழர்களுக்கு சோறூட்டுவதும் அவர்களின் தந்திரமே. அவை யாவும், அவர்களின் நலன்களை நிலைநிறுத்த கைக்கொள்ளும் ஏமாற்று வித்தைகளே. இதனை மிகத்தெளிவாக கண்டி மாநாடு வெளிப்படுத்தி நிற்கிறது.

அதாவது, “இலங்கை சிங்களவர்களின் நாடு. இதில் தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ பங்கு கிடையாது. விரும்பினால் ,மூடிக்கொண்டு’வாழ்ந்துவிட்டு போங்கள். இல்லாவிட்டால், நாட்டைவிட்டு வெளியேறுங்கள்” இதுதான் இவர்களின் செய்தி.

இந்த செய்தி முஸ்லிம்களை விட தமிழர்களுக்கே ஆத்திரமூட்ட வேண்டிய செய்தியாகும். ஏன்எனில், கடந்தகால யுத்தத்தில் தமிழர்கள்;
👉🏿2,00,000 உயிர்களை இழந்து
👉🏿30,000 பேர் அங்கவீனமுற்று
👉🏿15,000 சிறுவர்கள் அனாதையாகி
👉🏿90,000 பெண்கள் விதைவைகளாகி
நிற்கின்ற ஒரு சூழலில், மீண்டும் இலங்கை “சிங்களவர்களுக்கு மட்டுமான நாடு” என்று பகிரங்கமாக பிரகடனம் செய்வதை தமிழ் சமூகமும், அதன் தலைமைகளும் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தால் அவர்களை என்னவென்றுதான் சொல்வது?

எனவே, ஆகக்குறைந்தது கண்டி மாநாட்டிற்கான பதிலை முஸ்லிம்களையும் முந்திக்கொண்டு
👉🏿தமிழர் அரசியல் தலைமைகளே வழங்க வேண்டும்
👉🏿தமிழர் போராட்டத்தில் பங்கேற்ற இயக்கங்களே வழங்க வேண்டும்.
👉🏿புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளே வழங்க வேண்டும்
👉🏿புலம்பெயர் தமிழர்களே வழங்க வேண்டும்
👉🏿நாடு கடந்த தமிழர்களே வழங்க வேண்டும்

இதுவரை வழங்கினார்களா? இல்லை.
இனியும் வழங்குவார்களா? தெரியாது
ஏன்எனில், இப்போது இவர்களுக்கு முஸ்லிம்கள் தமது எதிரிகள் என்ற மனப்பதிவு வந்திருக்கிறது.

அதனால், முஸ்லிம்களை இலக்கு வைக்கிறார்கள் அல்லது இலக்குவைக்கப்படும் போது உள்ளூர சந்தோசம் கொள்கிறார்கள். அதனால், தமது இவ்வளவு இழப்புக்களையும் தாண்டிய போராட்டத்தின் கருப்பொருளையே கேள்விக்குறியாக்கும் ஞானசாரவின் பிரகடனத்தைப் பற்றி அக்கறையே இல்லாது இருக்கிறார்கள்.

அடித்தாலும் கடித்தாலும் – மொழியால் ஒன்றினைந்த சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் – சிறு சிறு முரண்பாடுகளை தற்காலிகமாக தள்ளிவைத்துவிட்டு – ஒன்று சேர்ந்து கைகோர்த்து – “சிங்களவர்களுக்கு மட்டுமான இலங்கை” என்ற கடும்போக்கு சிந்தனையை எதிர்க்க – அழைப்பு விடுக்க தன்மானமிக்க தமிழ் தேசியத்தில் ஒரு தலைமை கூட இல்லை என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது.

தமிழ் – முஸ்லிம் உறவின் விரிசல்கள் இன்னும் என்னவென்னவற்றையெல்லாம் இழக்க வைக்கப்போகிறதோ என்ற கவலை மனதை ஆட்கொள்கிறது. தமிழர் தேசியம் தனது வீரியத்தை இழந்து நடைப்பிணமாக மாறிவிட்ட இந்த நாட்களை எண்ணி மனம் கூசுகிறது. பாவம் தமிழ் மக்கள். இன்னும் இவர்களையே தமது விடுதலைக்காக நம்பி இருக்கிறார்கள்.

.

Web Design by The Design Lanka