தென்கிழக்குப் பல்கலைக்கழக, கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியானார் கலாநிதி றமீஸ் அபூபக்கர்! » Sri Lanka Muslim

தென்கிழக்குப் பல்கலைக்கழக, கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியானார் கலாநிதி றமீஸ் அபூபக்கர்!

IMG_20190711_134150

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.வை.அமீர்-


தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று அங்கு விரிவுரையாளராகி பல்வேறு மட்டங்களில் பதவி வகித்த கலாநிதி அபூபக்கர் றமீஸ், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு தற்காலிக விரிவுரையாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட றமீஸ் அபூபக்கர், 2006 ஆம் ஆண்டு நிரந்தர விரிவுரையாளராக நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.

சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் இரண்டுக்கு 2011 இல் பதவி உயர்வு பெற்ற இவர், 2017 இல் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றுக்கு பதவி உயர்த்தப்பட்டார். பின்னர் 2017 இல் கலை கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
மாணவ சேவை நலன்புரி பணிப்பாளர், ஆசிரியர் விருத்திநிலைய பணிப்பாளர், மற்றும் பல்கலைக்கழக வெளிவிவகாரங்களுக்கான பணிப்பாளர் என பல்வேறு பதவிகளை வகித்திருந்த கலாநிதி றமீஸ் அபூபக்கர், தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைகலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி றமீஸ் அபூபக்கர், தனது ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திலும் இரண்டாம்நிலைக் கல்வியை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும், பல்கலைக்கழக கல்வியை தென்கிழக்குப் பல்கலக்கழகத்திலும் கற்றிருந்தார். இங்கு சமூகவியல் விஷேட துறையில் (First Class) முதற்தர சித்திபெற்று 2004 ஆம் ஆண்டு வெளியேறினார்.

சமூகவியல் துறையில் தன்னுடைய முதுமாணிப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2010 ஆம் ஆண்டு பூர்த்திசெய்தார். இதேவேளை முரண்பாடு, சமாதானம் போன்றவற்றில் பட்டப்பின்படிப்பை இங்கிலாந்து பெரட்போர்ட் பல்கலைக்கழகத்தில் 2009-2010 காலப்பகுதியில் தொடர்ந்து அங்கு பட்டம் பெற்றார்.

பின்னர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வு புலைமைப்பரிசிலைப் பெற்று தனது கலாநிதி பட்டப்படிப்பை அங்கு முடித்து வெளியேறினார். அதிகமான ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் தேசியத்திலும் சர்வதேசத்திலும் சமர்ப்பித்துள்ள இவர், பல்வேறு மட்ட சமூகசேவை நிறுவனங்களிலும் அமைப்புக்களிலும் இணைந்து செயலாற்றி வருகின்றார்.
சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி றமீஸ் அபூபக்கர், கலை கலாச்சார பீடத்தின் ஒன்பதாவது பீடாதிபதியாவார். சாதாரண தொழிலாளியான மிஸ்கீன் பாவா அபூபக்கர் மற்றும் உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையான இவர், இரண்டு சகோதரிகளையும் ஒரு சகோதரரையும் உடன் பிறப்புக்களாக கொண்டவராவார். ஆசிரியையான சில்மியத்துல் சிபானாவை மனைவியாக கரம்பிடித்த இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

Web Design by The Design Lanka