கல்முனை செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்பட்டதன் பின்னால் உள்ள சூட்சுமம் » Sri Lanka Muslim

கல்முனை செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்பட்டதன் பின்னால் உள்ள சூட்சுமம்

kalmunai coastal district

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Raazi Mohammedh


கல்முனைப் பிரதேசத்தில் நேற்று பட்டாசுச சத்தங்கள் கேட்டன.ஒரு மகிழ்ச்சியான செய்திக்கான வேட்டுக்கள் அவை.
விசாரித்துப் பார்த்ததில் சட்டவிரோதமாக இயங்கும் உப தமிழ்ப்பிரதேச செயலகத்திற்கு ஒரு கணக்காளரை ரணிலின் அரசாங்கம் நியமித்திருக்கிறது என்ற செய்திகள் வெளியாகின்றன.அதற்கான மகிழ்ச்சியைத் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் கொள்ளையடித்த பணத்தை வெள்ளையடிக்க கோயில் கட்டுவது போன்றதுதான் இது.அபகரித்த நிலத்திற்கு திருட்டுத்தனமாக உறுதி முடித்து நிலத்தை சட்டரீதியாக்கும் முயற்சிதான் இது.

ரணிலின் அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த போது அதனை எதிர்த்து வாக்களிக்க தமிழ்த் தலைமைகள் இட்ட நிபந்தனை தமிழ் உப பிரதேச செயலகத்திற்கு ஒரு கணக்காளரை நியமிப்பது.வாக்கு வேண்டுமென்றால் கணக்காளரை நியமியுங்கள்.ரணில் நியமித்து விட்டார்.வாக்கு வேண்டுமென்றால் கணக்காளரை நியமிக்காதீர்கள் என்றாவது முஸ்லிம் பிரதிநிதிகள் கேட்டிருக்கலாம்.வழமையைப் போல ரணிலின் அரசாங்கம் எப்போதெல்லாம் மூழ்கிறதோ அப்போதெல்லாம் அவருக்கு கைகொடுத்து,வெளியில் இழுத்து,மயங்கிக் கிடக்கும் அவரது அரசாங்கத்தின் வாயில் வாயை வைத்து ஊதிஇழுத்து, நெஞ்சை நன்றாக அமத்தி இருமிக்கொண்டு எழும்புபவரை மடியில் வைத்துப் பால் கொடுத்து எழும்பி நடக்க வைக்கும் நிகழ்வை அற்புதமாகச் செய்கிறார்கள் அவரின் முஸ்லிம்  செல்லக் குழந்தைகள்.

கல்முனையில் உப தமிழ்ப் பிரதேச செயலகம் என்ற ஒரு பிரதேச செயலகம் சட்டத்திற்கு முரணாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது இந்த சட்டத்திற்கு முரணான பிரதேச செயலகத்திற்கு சட்டரீதியான ஒரு கணக்காளரை நியமித்திருக்கிறார்கள்.இது எப்படியென்றால் நான்கு பொலீஸ்காரர்கள் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பொலிஸ் நிலையம் என்று ஒரு போட்டைப் போட்டுவிட்டு கொஞ்சக் காலம் நடத்திக் கொண்டு வந்து விட்டு பின்னர் எங்கள் பொலீஸ் நிலையத்திற்கு ஒரு ஓ.ஐ.சியை நியமிக்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்பது.வாக்கு தேவை இருப்பதால் அரசாங்கம் ஓ.ஐ.சியை நியமிப்பது.

இதுதான் இலங்கையின் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிர்வாக நீதி என்றால் நாளை நான்கு சட்டத்தரணிகளை வைத்து எங்கள் பழைய வீட்டிற்கு பெயிண்ட் அடித்துவிட்டு நீதவான் நீதிமன்றம் என்ற போட்டைப் போட்டுக் கொண்டு கொஞ்ச நாளை வைத்துவிட்டு அதற்கு ஒரு நீதிபதியை நியமிக்கக் கோரினால் கதை முடிந்தது.யாரும் எந்த அரசாங்க அலுவலகத்தையும் புதிதாக உருவாக்கலாம். நடத்தலாம்.

திற்கு ஒரு உத்தியோகத்தரை நியமிக்கிறது என்றால் அவ்வலுவலகம் சட்ட ரீதியானது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுவிட்டது என்றுதானே அர்த்தம்.உப அலுவகத்தை சட்ட ரீதியானது என்று சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லாத காரணத்தினால் கணக்காளரை சட்ட ரீதியாக நியமிப்பதன் மூலம் பின்வழியாக இந்த அலுவகலத்தின் சட்டத்தன்மையை தமிழ்த் தரப்பு உறுதி செய்யப்பார்க்கிறது.அதன் மூலம் இது சட்ட ரீதியானது அல்ல ன்று இது வரைக்கும் முஸ்லிம் தரப்பு செய்து வந்த வலிதான, உறுதியான வாதத்திற்கு இந்த நியமனத்தோடு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படுகிறது.இதன் தீவிரத்தை யாரும் புரிந்ததாகத் தெரியவில்லை.

இந்தக் கணக்காளர் நியமனத்தை கேள்விக்குட்படுத்தாவிட்டால் இந்த உப அலுவலகம் சட்ட ரீதியாகவிடும் என்பதில் எந்த விதச் சந்தேகமும் இல்லை.ஒரு பிரதேச செயலகம் உருவாகும் என்று இருந்தால் அதே எல்லைகளை வைத்துப் பிரதேச சபையைக் கோருவது மிகவும் இலகுவாகிவிடும்.இது கல்முனையின் எல்லைகளைக் கேள்விக்குட்படுத்தி குறுக்கிவிடும்.அது மாத்திரமல்ல கல்முனையின் எல்லைகள் இவைகள் தான் என்று வரையறுக்க இந்த நியமனத்தினூடாக மெதுவாக உருவாகிவரும் பிரதேச செயலகம் உதவி செய்யும். கல்முனையின் அரசியல், நிர்வாக செயற்பாடுகளை குழி தோண்டிப் புதைத்து அதில் தமிழர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு முதல் வெற்றிப்படிதான் இந்த கணக்காளர் நியமனம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இன்று விட்டுக் கொடுக்கும் ஒற்றை அடி நாளை ஏக்கர்களை எடுத்துச் சென்றுவிடும் என்பதை இறந்தகால வரலாறுகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த கணக்காளர் நியமனத்தை சகித்துக் கொள்பவர்கள், சாதாரணமாகப் பார்ப்பவர்கள், இந்த விட்டுக் கொடுப்பு மூலம் கல்முனை நகரம் முஸ்லிகளுக்காக இருக்கும் என்று பிரதமரின் வாய்வார்த்தைகளை நம்புபவர்கள்,ஹரீஸின் கதையைக் கேட்டு தலை ஆட்டுபவர்கள் எல்லோரும் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.இந்தக் கணக்காளர் நியமனத்தின் மூலம கல்முனையின் தனித்துவத்தின் மீது மண்ணள்ளிப் போடுவதற்கான முதலாவது மடு வெட்டப்படுகிறது.அரசியல்வாதிகளின் வெற்று வாக்கு̀றுதிகளைக் கேட்டு ஏமாறாதீர்கள்.

இதற்கு என்ன தீர்வு?

முதலாவது ஏற்கனவே இந்த உப பிரதேச செயலகத்திற்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் போட்ட வழக்கு ஆமை வேகத்தில் நகர்கிறது.அது அவசரப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவது சட்ட முறையற்ற ஒரு செயலகத்திற்கு ஒரு கணக்காளரை நியமிப்பது சட்ட முரணானது என்பதைச் சுட்டிக் காட்டி இந்த நியமனத்தை ரத்து செய்யக் கூறி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும்.

இவைகளை செய்யாது போனால் அவர்கள் முந்துவார்கள். சட்டரீதியாக கணக்காளர் நியமனம் செய்யப்பட்டிருப்பதால் இந்த செயலகம் சட்டத்திற்கு முரணானது அல்ல ஆகவே இதனை உத்தியோக பூர்வமான செயலகமாகப் பிரகடனப்படுத்த அரசாங்கத்திற்கு கட்டளை இடுமாறு அவர்கள் வழக்குத் தாக்கல் செய்தால் கதை முடிந்தது.அதை நோக்கித்தான் அவர்கள் நகர்கிறார்கள்.வழக்குத் தாக்கல் செய்ய வேண்டாம் என்று முஸ்லிம்களைக் கேட்கும் எந்த அரசியல்வாதியும் நல்லெண்ணம் கொண்டவர்கள் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்படியானால் தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு செயலகத்தைக் கேட்க முடியாதா?

முடியும்.அதற்கு முஸ்லிம்களும் உதவி செய்வார்கள்.முறைப்படியாக வாருங்கள்.சட்டத்திற்கு முரணாக,பலவந்தமாக வராதீர்கள். எல்லைகள் எது என்பதை நிர்ணயிப்போம்.பேசுவோம்.ஒரு உடன்படிக்கைக்கு வருவோம்.ஒருவரை ஒருவர் மதிப்போம்.கை குலுக்கிப் பிரிந்து செல்வோம். ஒன்றாக வாழ்வோம்.இந்தத் தட்டிப் பறிப்பு, பலவந்த ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதம்,பின்கதவு மிரட்டல்கள் எப்போதைக்கும் சரிவராது.

Web Design by The Design Lanka