வரலாறு காணாத பரபரப்பு; இங்கிலாந்து வெற்றி - Sri Lanka Muslim

வரலாறு காணாத பரபரப்பு; இங்கிலாந்து வெற்றி

Contributors
author image

BBC

 லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரலாறு காணாத பரபரப்போடு நடந்து, கடைசி பந்தில் டையில் முடிந்தது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. ஸ்கோரைப் பார்த்தவுடன் இது இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கப் போவதாகத் தோன்றினாலும், குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் எதிரணியை மண்ணைக் கவ்வவைக்கும் நியூசிலாந்தின் திறனால், ஆட்டம் நிச்சயமற்றதாக இருக்கும் என்றும் தெரிந்தது.

முதலில், அடுத்தடுத்து இங்கிலாந்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோர் நிதானமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.

பரபரப்பான கடைசி ஓவர்

ஆனால், பட்லர் அவுட்டானதும் ஆட்டம் தீர்மானிக்க முடியாத படி நகர்ந்தது. இங்கிலாந்து வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டம் பரபரப்பான கடைசி ஓவருக்குள் நுழைந்தது.

ஓவரை போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தை மிட்விக்கெட் திசையில் சிக்சருக்கு விரட்டினார் ஸ்டோக்ஸ். லார்ட்ஸ் மைதானமே அலையெழுப்பி அடங்கியது. ஆனால், இன்னமும், ஆட்டம் நியூசிலாந்தின் கையிலேயே இருந்தது.

அடுத்த பந்துதான் நியூசிலாந்தின் விதியை முடித்து வைத்தது. ஸ்டோக்ஸ் அந்தப் பந்தை மிட் விக்கெட்டுக்கு மேலாக அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடிக்கொண்டிருந்தார். பந்தைப் பிடித்த கப்தில் ரன் அவுட் செய்வதற்காக விக்கெட்டை நோக்கி பந்தை நேரடியாக வீசினார்.

ஆனால், பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு திசைமாறி ஓடி பவுண்டரியைத் தொட்டது. எனவே, அந்த ஒரு பந்தில் இங்கிலாந்துக்கு 6 ரன் வந்துவிட்டது. இந்த நிலையில் வெற்றிக்கு இங்கிலாந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்டன. இரண்டு விக்கெட் கையில் இருந்தது. கடைசிக்கு முந்திய பந்தை யார்க்கராகப் போட்டார் போல்ட். அதை லாங்க் ஆஃப் திசையில் அடித்த ஸ்டோக்ஸ், இரண்டாவது ரன்னுக்கு முயற்சி செய்தபோது சான்ட்னர் பந்தைப் பிடித்து திருப்பி வீச, போல்ட் அதை அள்ளி எடுத்து இங்கிலாந்தின் ரஷீத்தை ரன் அவுட் ஆக்கினார்.

கிரிக்கெட்படத்தின் காப்புரிமைGLYN KIRK/AFP/GETTY IMAGES

கடைசி பந்தும் வந்தே விட்டது. ஒரு விக்கெட் கையில் இருந்த இங்கிலாந்துக்கு இரண்டு ரன் தேவைப்பட்டது. பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். முந்தைய பந்தைப் போலவே வெற்றிக்கான இரண்டாவது ரன்னை ஓடிக்கொண்டிருந்தபோது இங்கிலாந்தின் வுட்ஸை ரன் அவுட் ஆக்கியது நீஷம் – போல்ட் இணை. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 241 ரன் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது. வரலாறு காணாத முறையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி டையில் முடிந்தது.

சூப்பர் ஓவர்

எனவே, கோப்பைக்கான வெற்றியாளரை முடிவு செய்வதற்காக சூப்பர் ஓவர் ஆடப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து. சூப்பர் ஓவரில் ஒவ்வொரு அணிக்கும் இரண்டு விக்கெட் இருக்கும்.

முதலில் சூப்பர் ஓவரில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன் எடுத்தது. வெற்றிகரமான இன்னிங்ஸை கட்டி எழுப்பிய ஸ்டோக்ஸ் – பட்லர் இணை களமிறங்கியது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் பந்து வீச வந்தார். முதல் பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் 3 ரன் எடுத்தார். அடுத்த பந்தில் பட்லர் 1 ரன் எடுத்தார். அடுத்த பந்தில் ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார். நான்காவது பந்தில் ஸ்டோக்ஸ் ஒரு ரன் எடுத்தார். ஐந்தாவது பந்தில் பட்லர் 2 ரன் எடுத்தார். கடைசி பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு பவுண்டரி எடுத்தார்.

மீண்டும் டை

இதையடுத்து 16 ரன் எடுத்தால் உலகக் கோப்பையை வெல்லலாம் என்ற இலக்கோடு களம் புகுந்தது நியூசிலாந்தின் பேட்டிங் படை. நீஷமும், கப்திலும் பேட் செய்ய வந்தனர். இங்கிலாந்தின் ஆர்ச்சர் பந்து வீசினார். முதல் பந்தில் வைட் மூலம் ஒரு ரன் பெற்றது நியூசிலாந்து. அடுத்த பந்தில் நீஷம் 2 ரன் எடுத்தார். அடுத்த பந்தில் நீஷம் பிரம்மாண்ட சிக்ஸர் அடித்தார். மூன்றாவது பந்தில் மீண்டும் 2 ரன் மட்டுமே கிடைத்தது. 4வது பந்திலும் 2 ரன்தான் கிடைத்தது. ஐந்தாவது பந்தில் நீஷம் பெற்றது ஒரே ரன். கடைசி பந்தில் மீண்டும் கேள்விக்குறி. அதே 1 பந்து 2 ரன். முக்கியப் போட்டியைப் போலவே, இரண்டாவது ரன்னுக்கு முயன்றபோது கப்தில் ரன் அவுட் ஆனார். சூப்பர் ஓவரிலும் இரண்டு அணியின் ஸ்கோரும் சமன் செய்யப்பட்டது.

இதையடுத்து, போட்டியிலும், சூப்பர் ஓவரிலும் சேர்த்து அதிக பவுண்டரிகளை அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.

ஆட்ட நாயகன் – தொடர் நாயகன்

அற்புதமாக விளையாடி இங்கிலாந்தை வெற்றிக் கோட்டுக்கு கொண்டு சென்ற இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகன் – கிட்டத்தட்ட நியூசிலாந்தை கோப்பையை நோக்கி இட்டுச் சென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தவிர வேறு யார்?

உலகக் கோப்பை 2019: கோப்பையை வென்றது நியூசிலாந்து அணிபடத்தின் காப்புரிமைPAUL ELLIS/AFP/GETTY IMAGES

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா ஆகிய பத்து அணிகள் போட்டியிட்ட இந்த உலகக் கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றன.

அதில் நியூசிலாந்து அணி இந்தியாவையும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்பின் அந்த அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது.

நியூசிலாந்து அணியின் கேப்டனும் அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த வீரரான கேன் வில்லியம்சன் 30 ரன்களை எடுத்தார். நிக்கல்ஸ் 55 ரன்களையும், அவரை தொடர்ந்து, அந்த அணியின் லேதம் 47 ரன்களையும், நீஷம் மற்றம் கப்டில் 19 ரன்களையும் எடுத்திருந்தனர்.

இங்கிலாந்து அணியின் ப்ளன்கட் மூன்று விக்கெட்டுகளையும், வோக்ஸ் மூன்று விக்கெட்டுகளையும், வுட் மற்றும் ஆர்சர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் மற்றும் மார்கன் பெரிதும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்கள்.

கிரிக்கெட்படத்தின் காப்புரிமைMICHAEL STEELE/GETTY IMAGES

அதன்பின் கூட்டு சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் நிதானமாக விளையாடி அரை சதங்களை எடுத்தனர்.

59 ரன்கள் எடுத்திருந்த பட்லர் பெர்குசன் வீசிய பந்தில் அவுட் ஆனார். இதையடுத்தே போட்டி நியூசிலாந்துக்கு சாதகமாக நகரத் தொடங்கியது.

இன்றைய வெற்றியின் மூலம் உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியது இங்கிலாந்து அணி.

ப்ரெண்டன் மெக்கலம் தலைமையில் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் இறுதி போட்டிக்கு சென்ற நியூசிலாந்து அணி, மைகேல் க்ளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியால் வீழத்தப்பட்டது.

இந்த உலகக் கோப்பையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில், முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு முறையும், இந்தியா இரண்டு முறையும், ஆஸ்திரேலியா ஐந்து முறையும், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team