பரிசோதனைக்கு வர மறுக்கும் தாய்மார்! » Sri Lanka Muslim

பரிசோதனைக்கு வர மறுக்கும் தாய்மார்!

IMG_20190713_173720

Contributors
author image

Editorial Team

மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபி மீது குற்றம் சுமத்தியுள்ள தாய்மாரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலை மற்றும் சொய்சா பெண்கள் வைத்தியசாலை ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை எந்த தாய்மாரும் பரிசோதனைக்கு வரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவப் பரிசோதனைக்கு நீண்ட நேரம் செல்லும் எனவும் பரிசோதனைக்கு வைத்தியசாலைகளில் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் பரிசோதனைக்கு எவரும் வரவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

இந்த நிலையில், குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதாக கூறப்படும் தாய்மார் சார்பில், இன்று செய்தியாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டதுடன், மருத்துவப் பரிசோதனைக்கு செல்லாதமைக்கான காரணம் தெளிவுபடுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பக்கச்சார்பாக இருப்பதாகவும் இந்த பரிசோதனைகளில் மருத்துவர் ஷாபிக்கு நியாயம் கிடைக்கலாம் என மக்கள் சந்தேகிப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன, SHG பரிசோதனையில் பெலோப்பியன் குழாய்களுக்கு பாதிப்பில்லை என ஒப்புவிக்கப்படும் என்பதால், தமது தரப்பு அதனை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இது சாதாரண எக்ஸ்ரே கதிரை விட 50 மடங்கு பலமானது. புற்றுநோய் ஏற்படக் கூடும் என்பதுடன் கரு முட்டைகளுக்கும் சேதம் ஏற்படலாம். தாய்மாருக்கு இந்த மருத்துவப் பரிசோதனை மிகவும் ஆபத்தானது எனவும் அவர் கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka