தமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் கலவரங்கள் » Sri Lanka Muslim

தமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் கலவரங்கள்

IMG_20190801_105353

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அண்மையில் மீராகேணி வாராந்த சந்தையை திறந்து வைத்து, பஷீர் சேகுதாவூத் நிகழ்த்திய உரை
*********************
இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த சிங்கள இனவாதம் என்ற ஒற்றைப் போக்கு யுத்தம் நிறைவடைந்த பின்னர் சிங்கள- பௌத்த இன மற்றும் மதவாத இரட்டை ஒடுக்குமுறையாக கட்டவிழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

தொன்றுதொட்டு தமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தியும் கலவரங்கள் மூலம் அச்சுறுத்தி அடக்கியும் வந்த சிங்கள மொழி பேசும் இனவாத அரசியல் தற்போது இந்து, இஸ்லாம் மதங்களை பின்பற்றும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக பௌத்த மத அரசியலின் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து வருகிறது.

வடக்கில் இந்து மதத்தலங்கள் பலவற்றை பலவந்தமாக பவுத்த விகாரைகளாக மாற்றுவதற்கும், மேலும் பல இடங்களில் விகாரைகளை நிறுவி அவற்றைச் சுற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும், நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்துவருகிறார்கள்.திருகோணமலையிலும் இவ்வாறே செயற்படுகிறார்கள்.

சாதாரண சிங்கள பவுத்த மக்களுக்குள்ளும் தமிழ் இந்து மக்களுக்குள் இலகுவாக சென்றடையும் வகையிலான இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கட்டுக்கதைகளைப் பிரச்சாரம் செய்தும் வருகிறார்கள்.

தமிழர்களை அடித்து அடக்குவதை நிறுத்தி முஸ்லிம்களை அடித்து அடக்கத் தொடங்கியிருக்கிறார்கள் நவீன இரட்டை அடக்குமுறை பவுத்த பெருந்தேசியவாதிகள்.

இவர்கள், இலங்கை தமது நாடும்தான் என்று நம்புகிற தமிழ் முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்கி அநியாயங்களைச் செய்தால் சிறுபான்மையினர் இது எமது நாடு அல்ல என்று குரலெழுப்புவார்கள்.இதன்மூலம் தமது இரட்டை அடக்குமுறையை உலகுக்கு நியாயப்படுத்தலாம் என்று நம்புகிறார்கள்.

ஏற்கனவே தனிநாடு கோரிப் போராடிய தற்போது சுயாட்சி கோருகிற தமிழர்களையும், கிழக்கில் அரசியல் ரீதியாக ஒரு இளநிலைத் தேசத்தவர்களாக வளர்ந்து வந்துவிட்ட முஸ்லிம்களையும் எதிரிகளாக ஆக்குவதிலும் இந்த நவீன பவுத்த சக்தி கடுமையாக உழைத்துவருகிறது. இச்சக்தியின் சதிவலையில் இரு தரப்பு சிறுபான்மையினருக்கும் தலைமை தாங்கும் சிலரும் அவர்களது ஆதரவாளர்களும் சிக்கிவிட்டதைக் காணக்கூடியதாக உள்ளது.இந்நிலைமையினால் பெருமதவாதிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.இரட்டை அடக்குமுறை உத்தி சாத்தியமாகிவருவதாக இவர்கள் நம்புகிறார்கள்.ஆனால் தாம் இந்த உத்திக்குள் அகப்பட்டுவிட்டதாக இன்னும் சிறுபான்மையினர் உணரந்ததாகத் தெரியவில்லை.தயவு செய்து பேரினப் பெருமதவாதிகளின் Double structure of operation எப்படிச் செயல்படுகிறது என்பதை தமிழரும் முஸ்லிம்களும் கலந்துரையாடத் தொடங்குமாறு இங்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இலங்கை முஸ்லிம்கள் சிங்கள நாட்டை அவர்களது கடைத்தொகுதியாக கருதுகிறார்கள் எனவும் சிங்கள பெரும்பான்மையை களவாட முனைகிறார்கள் எனவும் சிங்கள மக்களுக்குள் பீதியை விதைக்கிறார்கள்.
முஸ்லிம்கள் எதனை சாப்பிடவேண்டும்,எப்படி உடை அணியவேண்டும், எந்த அடிப்படையில் கல்வி கற்கவேண்டும், மல்லாந்தா அல்லது ஒருக்கணிந்தா தூங்கவேண்டும், எந்த வகையில் வணங்கவேண்டும் என்று நவீன பெருமதவாதிகள் சொல்லித் தருகிறபடிக்கு முஸ்லிம் மக்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.இல்லாவிட்டால் முஸ்லிம்கள் இலங்கையரல்ல என்று அடித்து அடக்கவும் பயங்காட்டி பயமுறுத்தி பணிய வைக்கவும் வேலைத்திட்டங்களை செய்கிறார்கள். இப்படிச் செய்தால் இலங்கையை சுதந்திர நாடு என்று எப்படி உலகு ஒப்புக்கொள்வது?

தமிழர்களுக்கு தீர்வு இல்லை, அவர்களது இராணுவத்தை தீர்த்துக்கட்டிவிட்டோம். முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஆளும் சிங்கள பவுத்த அரசாங்கத்தில் பங்கெடுக்க அநுமதிக்க முடியாது,அவர்களது அடையாள அரசியலை அழித்தொழித்தே தீர்வோம் என்பன இரட்டை அடக்குமுறை சக்தியின் திடசங்கற்பமாகும். இந்த அடக்குமுறை ஓர்மத்தை எதிர்கொள்ள தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினர் ஒற்றுமைப்பட முடியாவிட்டால் இருதரப்பையும் தந்திரமாக அழிக்க நினைக்கும் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு சிறுபான்மையினர் ஒத்துழைப்பதாய் அமைந்துவிடும்.தமிழ் பேசும் மக்களைப் பிரித்து வைத்து சாதிக்க முயலும் ஆதிக்கப் பெரும்பான்மையின சதியை ஆமோதிப்பதாய் அமைந்துவிடும்.இரு சிறுபான்மைகளையும் அச்சிறுபான்மையினங்களை பிரித்தாளுவதன் ஊடாக ஒரே நேரத்தில் ஒடுக்கும் விதியை ஒத்துக்கொண்டதாகிவிடும்.

ஆகவே, இந்த இன- மத அடிப்படையிலான பெரும்பான்மை அடக்குமுறையை எதிர்கொள்வதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை இரட்டை ஒற்றுமை கேடயத்தைக் கையிலெடுக்கவேண்டும்.இந்தக் கேடயத்தை ஒற்றுமையாக பெரும்பான்மை அரசியலிடம் அடகுவைத்துவிட்ட தீராத இலாப வேட்டையை நடாத்திக்கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் தலைமைகள் புத்தி தெளிந்து கேடயத்தை மீட்கவேண்டும்.அவர்கள் தவறின் வாக்கு உண்டியலைக் குலுக்கியாவது மக்கள் தமது கேடயத்தின் அடவை மீட்க வேண்டும்.இதற்கு சரியான தருணம் ஜனாதிபதித் தேர்தல் எனும் வடிவில் வருகிறது.இலாப வேட்டையை தடுக்காவிட்டால் சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷை எனும் வேட்கையை என்றைக்கும் அடையமுடியாது.

இங்கு கலந்துகொண்டிருக்கும் ஏறாவூர் பற்று உள்ளூராட்சி சபையின் தமிழ் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளே,தமிழ் முஸ்லிம் பொதுமக்களே,தமிழ் பேசும் வியாபாரிகளே! நமது வாக்குகள் இங்கே விற்பனைக்காகப் பரப்பப்பட்டிருப்பது போல ஒரு சந்தைப் பொருளல்ல என்பதை உணருங்கள். சிறுபான்மையினரின் நலன்களை கருத்தில் எடுக்காது நமது வாக்குகளை மட்டும் கவனத்தில் எடுத்து செயல்படும் சிங்களப் பெரிய கட்சிகளுக்கு இனிமேலும் சிறுபான்மை அடையாளக் கட்சிகள் இரையாகாமல் பார்த்துக்கொள்வது சிறுபான்மை மக்களாகிய நமது உரிமைப் போரில் மிக முக்கியமானதாகும்.

இன்னுமொரு முக்கிய விடயத்தைக் கூறி எனதுரையை முடிவுக்கு கொண்டு வருகிறேன். அதாவது; இந்த இரட்டை அடக்குமுறை பெருந்தேசியவாதம் தனது புதிய சட்டவாக்கமாகவும் பெருமெடுப்பிலான ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரமாகவும் One Nation One Law ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தை முன்வைக்கவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதனை நடைமுறைப்படுத்தத் தயாராகிவிட்டது. இது தமிழர்களையும் முஸ்லிம்களையும் நசுக்கி நக்கித் துடைத்துவிடும் என்பதைச் சொல்லிக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதில் மூன்று பெரிய சிங்கள பவுத்தக் கட்சிகளும் உடன்பாடு கண்டுவிட்டன. நன்றி வஸ்ஸலாம் வணக்கம்!!

Web Design by The Design Lanka