காஷ்மீரிகள் » Sri Lanka Muslim

காஷ்மீரிகள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

A.Marx


முஸ்லிம் ஆட்டிடையர்கள்தான் முதன் முதலில் அந்த மலைக் குகையில் பனி உறைந்துள்ளதைக் கவனித்து வந்து அங்குள்ள அவர்களின் இந்து நண்பர்களிடம்,

“அதைப் பார்த்தால் உங்க லிங்கம் மாதிரி இருக்கு..”

என்றார்கள். எல்லோரும் சென்று பார்த்தபோது அப்படித்தான் அவர்களுக்கும் தோன்றியது. அவர்கள் மற்றவர்களிடம் சொன்னார்கள். எல்லோரும் வந்து பார்க்கத் தொடங்கினார்கள். அப்படித்தான் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. ஆண்டில் இந்த சீசனில்தான் பனி அந்த வடிவில் திரண்டு சில வாரங்களில் உருகிவிடும்.

இப்படித் தொடங்கியதுதான் அமர்நாத் யாத்திரை, அந்த நாள் முதல் அந்த சற்றே ஆபத்தான பாதையில் யாத்திரை வரும் யாத்ரீகர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் பெரிய பெரிய லங்கர்களில் உணவு தயாரித்து அளிப்பதும் காஷ்மீர முஸ்லிம் மக்கள்தான்.

காஷ்மீரிகள் விருந்தோம்பும் பண்பு மிக்கவர்கள். நாங்கள் அங்குள்ள நிலைமை குறித்து அறிக்கை அளிக்கும் நோக்குடம் சென்றிருந்தபோது ஒருநாள் பலரையும் சந்தித்துவிட்டு நல்ல பசியோடும் களைப்போடும் அந்த முஸ்லிம் நண்பரின் வீட்டிற்குள் நுழைந்தோம். மதிய உணவு அங்கே ஏற்பாடாகி இருந்தது. தரையில் அழகிய கம்பளம் விரித்திருந்தார்கள். எல்லோரும் உட்கார்ந்தோம். எல்லோருக்கும் அழகான கண்ணாடி தம்ளர்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. கெட்டில்களில் அருகிருந்த ஒன்றை அந்த காஷ்மீரி எடுத்து என் தம்ளரை நிரப்பினார். பாலில்லாமல் குங்குமப்பூ மற்றும் பல வாசனைப் பொருட்கள் கலந்த அந்த காஷ்மீரத் தேநீர் அத்தனை சுவையாயும் காஷ்மீர் குளிருக்கு இதமாகவும் இருந்தது .

ஒரே மூச்சில் குடித்துவிட்டு தம்ளரை வைத்தேன். மீண்டும் அது நிரப்பப் படது. அதையும் குடித்து முடித்தேன். மூன்றாம் முறையும் அது நிரப்பப் பட்ட போது…… சற்றே திகைத்துப் போய் நிமிர்ந்தபோது அருகிலிருந்த காஷ்மீர நண்பர் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் சொன்னார்:

“நீங்கள் முழுவதும் குடித்து தம்ளரைக் காலி செய்தால் மீண்டும் ஊற்றுவது எங்கள் மரபு. இப்படிப் பன்னிரண்டுமுறை ஊற்றுவது வழக்கம். உங்களுக்குப் போதும், அதற்குமேல் குடிக்க முடியாது என்றால் தம்ளரில் கொஞ்சம் மிச்சம் வைக்க வேண்டும்.”

காஷ்மீரிகள் மிகவும் அழகானவர்கள் என்பதை அறிவோம். காஷ்மீரிகள் மிக்க அன்பானவர்களும்கூட. அந்நியர்களை விருந்தோம்புதலில் அவர்களுக்கு இணை யாரும் இல்லை.

Web Design by The Design Lanka