மட்டக்களப்பு மஜீதியா ஹோட்டலின் ஆட்டுக்கால் சூப்பும் சாவலின் கடை ஏலக்காய் பிளேன் டீயும் » Sri Lanka Muslim

மட்டக்களப்பு மஜீதியா ஹோட்டலின் ஆட்டுக்கால் சூப்பும் சாவலின் கடை ஏலக்காய் பிளேன் டீயும்

FB_IMG_1565149643266

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Maunaguru sinnaiah


 இப்படியும் ஒரு  காலம் நிலவியது-.கதை—8

மட்டக்கள்ப்பு மஜீதியா ஹோட்டலின் ஆட்டுக்கால் சூப்பும் சாவலின் கடை ஏலக்காய் பிளேன் டீயும்

(எல்லா இனத்துப் பேரப் பிள்ளைகளுக்கும் ஒரு பாட்டன் சொல்லும் பழம் கதைகள்-8 )
————————————————————————————
1960 களின் முன் பகுதிஅப்போது எமக்கு 20 வயதிருக்கும் பேராதனைப் பல்கலைக்க்ழகத்தில் படித்துக்கொண்டிருந்த நாட்கள். தவணை முடிவில் வீடு வருவோம். விடுமுறை நாட்களில் வீட்டில் நிற்பதனை விட நண்பர்களோடு சுற்றும் நாட்களே அதிகம்.

பின்னேரம் இருக்கவே இருகிறது சினிமா

அப்போது மட்ட்க்கள்ப்பில் மூன்று சினிமா நிலையங்கள் இருந்தன

ஒன்று கோட்டைமுனைப்பாலத்துக்கு இப்பால் அமைந்திருந்த இம்ம்பீரியல் தியேட்டர்

மற்றது சற்றுத் தள்ளியிருந்த விஜயா தியேட்டர்,

இன்னொரு தியேட்டரான ராஜேஸ்வரா தியேட்டரோ கோட்டைமுனைப்பாலத்துக்கு அப்பால் ல் இருந் தது.அனைத்தும் வாவிக்கரை ஓரம் அமைந்திருந்தன.

சினிமாவுக்குப் போகு முன் நண்பர்கள் ஓரிடத்தில் ஒன்று திரள்வோம்

நாம் சொல்லி வைத்துத் திரளும் இடம் மூன்று

ஒன்று பழைய பொலீஸ் ஸ்டேசனுக்கு முன்னலிருந்த மெட்ராஸ் கபே

.மற்றது இன்றைய பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்னால் இருந்த இருந்த லங்கா பேக்கறி…

இன்னொன்று அதற்கு எதிர்ப்புறமாக அரசடி பிள்ளையார் கோவிலுக்கு முன் இருந்த மஜீதியா ஹொட்டல்

இந்தக் ஹோட்டல் 1965 இல் குயீன்ஸ் ஹொட்டல் என்று பேர் மாற்றவும் பட்டது

மூன்று கடைகளும் மூவினத்தவர்களுக்குச் சொந்தமானது

லங்கா பேக்கறியின் உரிமையாளர் ஒரு சிங்களவர்.

அங்கு அருமையான ஐட்டமாக பாண் இருந்தது. சரியாக ஐந்து மணிக்கு .சுடச்சுட போறணையிலிருந்து இறக்கும் பாண் ஓர் இனிமையான மணம் தரும் . அப்பாணுடன் ஓர் சீனிச் சம்பலும் தருவர். இரண்டும் இணைகையில் அதன் சுவையே அலாதி.சீனிச் சம்பலுடன் சாப்பீட்டு முடிய வாய் உறைப்பைத் தணிக்க சுடச்சுட ஒர் பிளேன் டீயும் அருந்தினால் சுவையின் உச்சம் தெரியும்

மெட்றாஸ் கபே உரிமையாளர் ஒரு இந்தியத் தமிழர்.

அதிலே போடப்படும் உழுந்துவடையும் பருப்புவடையும் மிகச் சுவையானவை.

அவற்றோடு தேங்காய்ப்பூவும் பச்சைமிளகாயும் வைத்து அரைத்த சம்பல் ஒன்றும்தருவர்அச்சம்பலோடு அந்த வடைகளைத் தொட்டுச் சாப்பிடுவது மஹா இன்பம்

மஜீதியா ஹொட்டலை நடத்தி வந்தவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்த இஸ்லாமியர்,
கடை உரிமையாள்ரின் மகன் முபாரக் அரசடிப் பாடசாலையில் படித்துகொண்டிருந்தான்

இந்த மஜீதியா ஹோட்டலில் மிகச் சுவையான ஆட்டுக்கால் மாட்டுக்கால் சூப்புகளும் பிரியாணியும் கொத்துரட்டியும் கிடைக்கும்

மஜீதியா ஹொட்டலுக்கு எதிரேதான் கிங்ஸ் ஹொட்டல் இருந்தது,

அங்கு உள்ளூர் வெளியூர்ச் சாராயம் இருந்தது சாரயப்பிரியர்கள் அங்கு அங்கு மாலைவேளிகளில் கூடுவர்.இரவு பத்துமணிவரை கிங்ஸ் ஹொட்டல் திறந்திருக்கும்

.இரவு பத்து மணிவரை ஏனைய இரண்டு ஹொட்டல்களும் திறந்திருக்கும்

.இம்மூன்றினுள்ளும் எமது நண்பர் குழுவுக்கும் எனக்கும் மிகப்பிடித்த இடம் மஜீதியா
ஹொட்டல்தான்.

அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன ஒன்று அங்கு பரிமாறப்படும் மிக மிகச் சுவையான உணவு மற்றது அங்கு பணியாற்றிய இஸ்லாமிய தமிழ்ப் பணியாளர்களின் அன்பான உபசரிப்பு

ஆம் அங்கு இரு இனத்தவரும் பணி புரிந்தனர்.தினமும் மாலை வேளைகளில் அங்கு போவதால் அங்கு பணியாற்றிய அத்தனைமுகங்களும் இப்போதும் ஞாபகத்தில் உள்ளன

பெயர்களைத்தான் மறந்து விட்டேன்

மஜீதியா ஹொட்டல் உணவு மிக விசேடமானது

இக்ஹோட்டலை எனக்கு அறிமுகம் செய்தவன் காலம் சென்ற கவிஞன் சுபத்திரன்
அவனது இயற்பெயர் தங்கவடிவேல்.

.மட்ட்க்கள்ப்பில் கம்யூனிஸ சிந்தனைகளை விதைத்தவர்களில் முக்கியமானவன்.இன்னொருவன் எனது மைத்துனன வடிவேல்

மூன்று பேரும் மாலைவேளைகளில் மஜீதியா ஹோட்டலில் கூடியமை காத்தான்ன்குடியாரின் அந்த உண்வுச் சுவையைச் சுவைத்தமை என்பன என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத பொழுதுகள்

முதல் நாள் மஜீதியா ஹொட்டல் சென்றமை ஞாபகம் இருக்கிறது

.இப்போது பெற்றோல் செற் இருக்கும் இடத்தில்தான் மஜீதியா ஹொட்டல் இருந்தந்து

சைக்கிளை ஸ்டான்டில் சாத்திவிட்டு மஜீதியா ஹோட்டலின் உள்ளே செல்கிறோம்

சுபத்திரனுக்கு அந்த இடம் பழக்கம்

அங்கு பணிபுரிந்தோர் பழக்கம் அதில் சிலர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரகள் வேறு

சுபத்திரனுக்கு அந்த இடம் மாத்திரமல்ல முன்னாலிருந்த கிங்ஸ் ஹொட்டலும் பழக்கம் அவனுக்கு அந்தப்பழக்கம் உண்டு,

நாமும் அவனோடு அங்கு செல்வோம் அவன் சாரயம் அருந்த நாம் சோடா அருந்துவோம்

நான் இப்போ சொல்ல வருவது மஜீதியா அனுபவம்

ஹொட்டலுக்குள் நுழைந்த சுபத்திரனை வரவேற்கின்றனர் பணியாளார்கள்

என்ன வேணும்

எனக் கேட்கிறார்கள்

மௌனகுரு உனக்கு என்ன வேண்டும் ஆட்டுக்கால் சூப்பா மாட்டுக்கால் சூப்பா கோழிச்சூப்பா

எனக் கேட்கிறான் சுபத்திரன்

நான் திணறிப்போகிறேன்,

மாடு சாப்பிடும் வழக்கம் வீட்டில் இல்லை.அது விலக்க்ப்பட்ட ஒரு இறைச்சியாக எண்ணி வாழ்ந்த குடும்ப் பின்னணியில் வந்தவன் ஆட்டுக்கால் சூப் என்கிறேன்

சிறிது நேரத்தில் அந்த ஆட்டுக்கால் சூப் வருகிறது.

ஒரு குண்டான் பீங்கானில் அது வருகிறது

சூப்பிற்குள் ஆட்டு எலும்புகள் தெரிகின்றன

, ஆட்டு இறைச்சித் துண்டங்களும் இடைக்கிடை தெரிகின்றன ஆவி பறக்கிறது.அதன் மணமோ நாசியைத் துளைக்கிறது,கூடவே மிளகுத் தூளும் உப்பும் உள்ள சின்னக் குப்பிகளும் வைக்கப்படுகின்றன

முதலில் ருசித்தபின்னர் உறைப்பு உப்புக் காணாவிட்டால் எடுட்துக்கலந்து கொள் என்கிறான் சுபத்திரன்

நான் சூப்பைச் சுவைக்கிறேன் ஆஹா என்ன சுவை அது,

அதுவோர் புதுவிதமான சுவை.

புதுவித நறுமணத்தோடு உறைப்பும் உப்பும் புளிப்பும் கலந்த சுவைகளோடு சுடச் சுட ஆட்டுக்கால் சூப்பு தொண்டைக்குள் இறங்குகிறது

தொடர்ந்து ஓர் கொத்துரட்டிக்கும் ஓடர் கொடுக்கிறான் சுபத்திரன்

கொத்துரட்டியும் எனக்குப் புதிது.

ரொட்டியைக்கொத்தி அதன்மேல் சிறிது கறியும் ஊற்றி எம்முன் வைக்கிறான் பணியாள்

அது கோழிக்கொத்துரட்டி

அதுவும் சுடச் சுட முன்னால் வைக்கப்படுகிறது சாப்பிடுகின்றேன்

ஆஹா .அது இன்னோரு சுவை

இக்கொத்துரட்டி மற்றும் சூப்புச் சுவைகளை எமக்கு ஒரு வகையில் அறிமுகம் செய்தவர்கள் நமது காத்தான்குடி இஸ்லாமிய நண்பர்களே

மஜீதியா ஹொட்டல் போல இஸ்லாமியர் ந டத்திய சில ஹொட்டல்கள் மட்ட்க்களப்பு பட்டிணத்தில் இருந்தனஅவைபற்றித் தனியாக எழுத வேண்டும்

மஜீதியாவில் ஆட்டுக்கால் சூப்பும் கொத்துரட்டியும் சாப்பிட்டு விட்டு இம்பீரியல் தியேடருக்குப் படம் பார்க்கப்போகிறோம்

சினிமா முடிகிறது

வரும் வழியில் சாவலுடைய தேநீர்க்கடை இருக்கிறது.அதற்குல் நுழைகிறோம்

அன்று மோசமானதோர் தமிழ்ப்படம் பார்த்தமையினால் உடலும் உள்ளமும் சோர்ந்து களைப்படைந்திருந்தது

சாவல் என அழைகப்பட்ட அந்தச் சாஹுல் ஹமீட் டின் தேநீர்க்கடை கலகலப்பாக இருகிறது
அதன் கலகலப்பு எம் களைப்பைப்,போக்குகிறது;
முழுக்களைப்பையும் போக்குகிறது சாவல் போட்டுத்தந்த ஏலக்காய் போட்ட பிளேன் டீ

மட்ராஸ் கபே பிளேன் டீயை விட லங்கா பேக்கறி பிளேன் டீயை விட இது இன்னொரு சுவை தருகிறது

,ஏலக்காய்பிளேன் டீக்கு அறிமுகமாகிறேன்

அதன் பின்னர் நான் தனியாக சினிமாவுக்குச் செல்கையில் மஜீதியா ஹொட்டலில் ஆட்டுக்கால் சூப்புச் சுவைத்து விட்டுச்செல்வதும்

சினிமா முடிந்து வருகையில் சாவலின் கடையில் ஏலக்காய் பிளேன் டீ அருந்தி விட்டு வருவதும் வழக்கமாகி விட்ட து

இன்று அவை இரண்டும் இல்லையே என ஏக்கம் பிறக்கிறது

சென்றவாரம் அரங்கம் பத்திரிகையில் வெளியான கட்டுரை இது

Web Design by The Design Lanka