உள்நாட்டு கைத்தொழிற்துறையினரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை… » Sri Lanka Muslim

உள்நாட்டு கைத்தொழிற்துறையினரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை…

mai6

Contributors
author image

Presidential Media Division

உள்நாட்டு கைத்தொழிற்துறையினரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை…உள்நாட்டு கைத்தொழிற்துறையினரைப் பாதுகாத்து நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதல் அரசின் கொள்கையாகும் என்பதால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தேசிய பொருளாதார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட தேசிய பொருளாதார சபை 12வது முறையாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்நாட்டு கைத்தொழிற்துறையினர் முகங்கொடுத்திருக்கும் 06 பிரதான பிரச்சினைகள் தொடர்பாக இங்கு ஆலோசிக்கப்பட்டதுடன், பொருளாதார முகாமைத்துவத்தில் மேற்கொள்ள வேண்டிய நாட்டிற்கு தேவையான துரித மாற்றங்கள் மற்றும் குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் செரமிக் சுகாதார உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ் வரியை நீக்கியமையால் அப்பொருட்களின் விலையுடன் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு போட்டியிட முடியாமையால் அத்துறையில் ஏற்படக்கூடிய வீழ்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய முன்பிருந்த செஸ் வரிக்கு இணையான சுங்க இறக்குமதி வரியை விதிப்பதற்கான வாய்ப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் வங்கி கடன்களை பெற்றுக்கொள்ள முடியாமையினால் அவர்களது தொழிலை முன்னெடுத்து செல்வதில் ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கும் பொறுப்பு அனைத்து அரச வங்கிகளுக்கும் இருப்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதிக இலாபம் பெறுவதை மாத்திரம் கருத்திற் கொள்ளாது தேசிய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலமாக நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்க அரச வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதற்கமைய பிரதேச அபிவிருத்தி வங்கிகள் உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கும் கிராமிய பொருளாதாரத்திற்கும் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டதுடன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் முதலிட்டினை வலுப்படுத்துவதன் ஊடாக மேற்குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றிகொள்வதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும்மென்பதே தேசிய பொருளாதார சபையின் முடிவாக முன்வைக்கப்பட்டது.

போக்குவரத்து சேவையின் செயற்திறனை அதிகரிப்பதற்காக செயற்படுத்த எண்ணியிருக்கும் ”சஹசர” செயற்திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பாக கலந்துரையாடியதுடன், பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஒத்துழைப்புடன் அச்செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டது.

சுகாதார சேவைகளான மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவமனை கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வெட் வரியை நீக்குதல் தொடர்பாக கலந்துரையாடியதுடன், விரைவில் அது தொடர்பான மேலுமொரு கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வுகாணவும் முடிவெடுக்கப்பட்டது.

தேசிய பொருளாதார சபையால் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசிய பொருளாதார செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குவதற்கு அரச தரப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுபடுத்தும் கருத்தரங்கு இம்மாதம் 28ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொருளாதார சபையின் பொதுசெயலாளர் பேராசிரியர் லலித் சமரக்கோன் தெரிவித்தார்.

அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்தன, மலிக் சமரவிக்ரம, மஹிந்த சமரசிங்க, மஹிந்த அமரவீர, அர்ஜூன ரணதுங்க, ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, கபிர் ஹசிம், சரத் அமுனுகம, தயா கமகே, பிரதி அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, அசோக்க அபேசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட நிர்வாக குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Web Design by The Design Lanka