இனங்களுக்கிடையிலான நல்லெண்ணமும், நல்லுறவும் நீடித்து நிலவ வேண்டுமெனப் பிரார்த்திப்போம். » Sri Lanka Muslim

இனங்களுக்கிடையிலான நல்லெண்ணமும், நல்லுறவும் நீடித்து நிலவ வேண்டுமெனப் பிரார்த்திப்போம்.

IMG_20190812_091038

Contributors
author image

Editorial Team

தியாக சிந்தையையும், சகிப்புத் தன்மையையும் அதிகம் வலியுறுத்தும் “ஈதுல் அழ்ஹா” எனப்படும் தியாகத் திருநாளில் நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையையும், நெருக்கடியான காலகட்டத்தையும் கருத்தில் கொண்டு இனங்களுக்கிடையிலான நல்லெண்ணமும், நல்லுறவும் நீடித்து நிலவ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் தமது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் உச்ச கட்டத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் இன்னுமொரு பெருநாளை நாங்கள் சந்திக்கின்றோம். வெறுப்புப் பேச்சினதும், இனவாத வன் செயல்களினதும் பின்னணியில் அச்சத்திற்கும் நம்பிக்கையீனத்திற்கும் மத்தியில் வாழ நேர்ந்திருப்பதையிட்டு நிம்மதியையும் அமைதியையும் வேண்டி நிற்கும் முஸ்லிம்கள் கவலையடைகிறார்கள்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களும் அன்னாரின் அருமைப் புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களும், ஹாஜரா அம்மையாரும் அன்றைய அரேபிய தீபகற்பகத்தில் முகங்கொடுத்த இன்னல்களுக்கு அவர்களது அளப்பரிய தியாகம் வரலாற்றில் சான்று பகன்று கொண்டிருக்கின்றது.

அதன் வெளிப்பாடாகத்தான் ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்காவிலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும் ஒன்று திரண்டு தங்களது ஈமானிய உணர்வை பிரகடனப்படுத்துகின்றனர். இந்த கண்கொள்ளாக் காட்சியை ஒவ்வோராண்டும் உலகம் கண்டு வியக்கின்றது.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும் வறுமையிலும் செல்வத்திலும், நோயிலும் சுகத்திலும் தியாகத்தின் வலிமையையும் சகிப்புத் தன்மையின் சிறப்பையும் ஹஜ்ஜுப் பெருநாள் எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது.

இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடும் இவ்வேளையில் அவர்களது வாழ்வில் மலர்ச்சியும், புத்தெழுச்சியும் ஏற்பட வேண்டுமென மீண்டும் உளப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்.

இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka