தியாகப்பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்" » Sri Lanka Muslim

தியாகப்பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்”

IMG_20190812_085729

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தியாகம் பொறுமையின் பெறுமானங்களாகக் கிடைத்த புனித ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவத்தை
உணர்ந்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத்பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது…

மிகச் சோதனைமிக்க காலத்தில் முஸ்லிம்களாகிய நாம் தியாகத் திருநாளைக் கொண்டாடுகிறோம். இறைதூதர் இப்றாஹிம் நபியின் முன்னுதாரணங்கள் யாவும் இறைவனைத் திருப்திப்படுத்துவதாகவே இருந்தது.அல்லாஹ்வின் கட்டளைக்காக தனது மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்றாஹிம் நபியின் இறை விசுவாசம் உலகமுள்ள வரை ஞாபக மூட்டப்படும்.

இவ்வாறானதியாகங்களை சிறுபான்மையினரான முஸ்லிம்களும் கடைப்பிடிப்பதே எமது எதிரிகளைத் தோற்கடிக்க உதவும்.ஏகத்துவ மார்க்கங்களைப் பின்பற்றும் யூத, கிறிஸ்தவ மதங்களும் இப்றாஹீம் நபியை தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டுள்ளன.

இவ்வாறான ஏகத்துவ ஒற்றுமையுள்ள யூத,கிறிஸ்தவ,இஸ்லாமிய சமூகங்களைப் பிளவுபடுத்த சில கைக்கூலிகள் களமிறக்கப்பட்டுள்ளதே எமக்கு ஏற்பட்டுள்ள சவால்களாகும்.ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய சில கயவர்களையும் ஏகத்துவ மார்க்கங்களின் எதிரிகளே கைக்கூலிகளாகக் களமிறக்கியுள்ளனர்.

கிறிஸ்தவர்களின் இயேசுநாதரையும் (ஈஷா நபி) இறைதூதரென முஸ்லிம்கள் நம்புகின்றனர். எனவே எமது உறவுகளைப் பிரிக்க எந்த சக்திகளாலும் இயலப் போவதில்லை.எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட ஈஸ்டர் தினத் தாக்குதலை வைத்து எமது சமூகத்தை தனிமைப்படுத்த சில இனவாத சக்திகள் முயன்று தோற்றுவிட்டன.

இச்சோதனை காலங்களில் முஸ்லிம்கள் மிகப் பொறுமையாக நடந்து கொண்டமை சகோதர சமூகங்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவ சமூகத்தினரும் கைக்கூலிகளின் சதித்திட்டங்களுக்கு இரையாகமல் ஏகத்துவ மார்க்கங்களின் எதிரிகளை அடையாளம் காணப் பொறுமையாக நடந்து கொண்டமை தீர்க்கதிரிசி ஆப்ரஹாம் (இப்றாஹீம்) நபியின் பொறுமையையே ஞாபகமூட்டுகிறது.

இஸ்லாத்தின் கடமைகளை ஏனைய சமூகத்தினரின்,நம்பிக்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையாமல் பொறுமை,நிதானமாக மேற்கொள்வது இன்றைய கால கட்டத்தின் கட்டாயத் தேவையாகும். எனவே உழ்ஹியாக் கடமைகளை நிறைவேற்றும் முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தாதும் இஸ்லாம் போதிக்கும் ஜீவகாருண்யத்தையும் பின்பற்றுவதே சிறந்தது.

எதிரே வரும் நாட்கள் தேர்தல்களை எதிர் கொள்ளவுள்ளதால் எமது செயற்பாடுகள் அனைத்தையும் இனவாதிகள் அரசியல் மூலதனமாக்குவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் மறந்து விட முடியாது. சிறுபான்மைச் சமூகத்தினரை பெரும்பான்மையினருக்கு எதிரானோராகக் காட்டும் கடும்போக்கர்களின்,
தந்திர நகர்வுக்குள் முஸ்லிம்கள் விழுந்து விடாமல் பக்குவமான முறையில் எமது மார்க்கக் கடமைகளைச் செய்ய வேண்டும்.

கடும்போக்கர்களுக்கு அடிபணியாத, தலைமையை அடையாளம் காணும் வரை, பொறுமையாக இருப்பதே சமுகத்துக்குப் பாதுகாப்பாக அமையுமென்றும் அமைச்சர் ரிஷாத் ஈகைத்திருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka