உயிரை விடுவதற்கும் தயார் » Sri Lanka Muslim

உயிரை விடுவதற்கும் தயார்

IMG_20190813_062854

Contributors
author image

Editorial Team

அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பதுளையில் நேற்று நடைபெற்ற  மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றகையில் அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் தற்காலிகமாக ஒப்படைக்கும்போது, அதனை  நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், “பாதுகாப்பான மற்றும் முன்னேற்றமடைந்த நாட்டை உருவாக்குவேன் என்பதை இந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன். அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அந்த காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாடு முன்னேற்றமடைய வேண்டுமென்றால், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்முயற்சிகள் வலுப்படுத்தப்படவேண்டும். அவர்கள்தான் பொருளாதார முன்னேற்றத்தின் வலுவான இயந்திரங்கள். எமது நாட்டின் பொருளாதார எஞ்சின்களை வலுப்படுத்தி நாம் முன்னேறி செல்லவேண்டும். இளைஞர்களிடம் அதிகாரங்களை பெற்றுக்கொடுத்து நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவோம்.

நாம் தேசிய பாதுகாப்பினை நிச்சயமாக உறுதிப்படுத்துவோம். தேசிய பாதுகாப்பு எனும்போது, பாதுகாப்பு படையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 30 வருட யுத்தத்தை வெற்றிக்கொள்ள தம்மை அர்ப்பணித்த பாதுகாப்பு படை வீரர்களின் அபிவிருத்திக்கு நாங்கள் பாரிய பங்களிப்பினை வழங்குவோம்.

பொருந்தோட்ட தொழிலாளர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாங்கள் நிச்சயமாக மலையக மக்களை பாதுகாப்போம்.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளை நாங்கள் முற்றாக ஒழிப்போம். சிங்கள – பௌத்த தலைவர்கள் என்ற ரீதியில் நாங்கள் புத்த பகவானின் போதனைகளுக்கு மதிப்பளித்து இன, மத, மொழி, பேதங்கள் பாராது நாட்டு மக்கள் அனைவரையும் சமமான விதத்தில் நடத்தவேண்டும்.

நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ, சொத்துகளுக்கோ பாதிப்பினை ஏற்படுத்தும் எந்தவிதமாக பாதுகாப்பு ஒப்பந்தங்களிலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கையெழுத்திடவில்லை.

அரச சேவையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எமது பயணத்தில் அனைத்தையும் விட நாங்கள் மனிதத்துக்கு முதலிடம் வழங்குவோம்.

உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என் உயிரிலும் அதிகமான மதித்து காப்பாற்றுவேன். எனக்கு பயமில்லை. நான் அச்சப்படுபவன் கிடையாது. மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்க தாயர். எனக்கு 52 வயதாகிவிட்டது. நான் மரணத்தை கண்டு அச்சமடைபவன் கிடையாது. எனது, தந்தையை போல நடு வீதியில் மக்களுக்காக உயிரை விடுவதற்கும் தயாராக உள்ளேன்.” என்றார்.

Web Design by The Design Lanka