இலங்கை ஜனாதிபதி தேர்தல் - இந்த முறையும் பெண் வேட்பாளர்கள் இல்லையா? » Sri Lanka Muslim

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – இந்த முறையும் பெண் வேட்பாளர்கள் இல்லையா?

IMG_20190818_065914

Contributors
author image

BBC


இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரையான காலம் வரை நாட்டை இரண்டு பெண்கள் மாத்திரமே ஆட்சி செய்துள்ளனர்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரே இலங்கையை ஆட்சி செய்த பெண் தலைவர்களாக வரலாற்றில் இடம்பிடித்திருந்தனர்.

1960 – 1965, 1970 – 1977 மற்றும் 1994 – 2000 வரையான காலப் பகுதிகளில் உலகின் முதலாவது பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இலங்கையில் பிரதமராக பதவி வகித்திருந்தார்.

அதேபோன்று அவரது மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994இல் ஆகஸ்டு முதல் நவம்பர் வரை இலங்கை பிரதமராக இருந்தார்.

1994ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005ஆம் ஆண்டு நவம்பர் வரையான காலப் பகுதி வரை இரண்டு முறை இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.

இதன்படி, 1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இரண்டு பெண்களே நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பதாகைபடத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI
Image caption2005 ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பதாகை.

இவர்களைத் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் எந்தவொரு பெண்ணும் பிரதமர் அல்லது ஜானதிபதி பதவிகளை வகிக்கவில்லை.

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் எழுந்துள்ள பின்னணியில், இந்த முறையும் ஜனாதிபதி வேட்பாளராக பெண்ணொருவர் களமிறங்குவதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுகின்றது என அறிய முடிகின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்ற பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் கடந்த 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

கோட்டபய ராஜபக்ஷ
Image captionகோட்டபய ராஜபக்ஷ

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர்களாக கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.

அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணி தனது ஜனாதிபதி வேட்பாளரை கொழும்பு காலி முகத்திடலில் நாளை (18) நடைபெறும் மக்கள் கூட்டத்தின்போது அறிவிக்கவுள்ளதாக அந்த கட்சியின் உறுப்பினர் விஜித்த ஹேரத் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமது வேட்பாளர் ஆண் வேட்பாளர் என்பதனை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எட்டவில்லை.

இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் உள்ளிட்ட ஏனைய பல கட்சிகள் கடந்த காலங்களில் பெரும்பான்மை கட்சிகள் பெயரிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி வந்திருந்தன.

இலங்கை நாடாளுமன்றம்படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI

இந்த நிலையில், இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கும் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்குவது சாத்தியமற்ற ஒன்றாக காணப்படுகின்றது.

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களில் 13 பெண்கள் மாத்திரமே உள்ளனர்.

இலங்கை மக்கள் தொகையில் 52 சதவிகிதமாக பெண்கள் இருந்தாலும், இலங்கை நாடாளுமன்றத்தில் 5.8 வீத பெண்களே அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட பெண்கள்

தேர்தல் ஆண்டு வேட்பாளர்கள் எண்ணிக்கை பெண் வேட்பாளர்கள்
1982 5 பெண்கள் இல்லை
1988 3 ஒருவர் (ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க)
1994 6 இருவர் (சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீமனி திஸாநாயக்க)
1999 13 ஒருவர் (சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க)
2005 13 பெண்கள் இல்லை
2010 22 பெண்கள் இல்லை
2015 19 பெண்கள் இல்லை

1982ஆம் ஆண்டுக்கு முன்னதாக இலங்கையில் பிரதமர் ஆட்சியே காணப்பட்ட நிலையில், அதற்கு பின்னரே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டிருந்தது.

1982ஆம் ஆண்டு முதல் 7 தடவைகள் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை காண முடிகின்ற போதிலும், பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதை 1999ஆம் ஆண்டுக்கு பின்னர் காண முடியவில்லை.

நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகின்ற பின்னணியில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்த உள்ளூராட்சி சபை தேர்தல்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உள்ளூராட்சி சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களை 25 வீதமான அதிகரிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

உமா சந்திரா

சட்டங்கள் இயற்றப்படும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு சரியான அங்கீகாரத்தை வழங்க தயக்கம் தெரிவிக்கின்றமையே பெண்கள் முன் வராமைக்கான காரணம் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

”2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தல், இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். காரணம், அதற்கு முன்னர் பெண்களுக்கான அதிகார பங்கீடு குறித்து அதிகளவில் பேசப்பட்டாலும், 25 வீத இலக்கு கிட்டத்தட்ட 23 வீதத்தை அண்மித்த ஒரு உள்ளூராட்சி சபைத் தேர்தலாக அமைந்திருந்தது.”

“ஆனால் இலங்கையில் பெண்கள் அரசியலில் வருவது பெரிதும் சவாலாக உள்ளது. காரணம் சட்டங்கள் இயற்றப்படும் இடம் நாடாளுமன்றம். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்க தயங்குவது தான் மிக முக்கியமான ஒரு காரணம். உள்ளூராட்சி சபை தேர்தலில் 25 வீதம் என்ற இலக்கு எதிர்வரும் காலங்களில் 50 வீதம் என்ற இடத்திற்கு வர வேண்டும். ஜனாதிபதித் தேர்தலிலும் பெண்கள் போட்டியிட வேண்டும்,” என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் தெரிவித்தார்.

ஆசிரியை யசோதா

இலங்கையில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது குறைவாகவே காணப்படுகின்ற என ஆசிரியை யசோதா ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

”பெண்களுக்கு முன்னுரிமை கிடையாது. ஜனாதிபதி மாத்திரம் அல்ல, ஒரு நிறுவனத்தில் கூட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. பெண்களினால் ஒரு வேலையை சரிவர செய்ய முடியாது. முகாமைத்துவம் முடியாது என்ற எண்ணம் ஆண்கள் மத்தியில் காணப்படுகின்றது. அதனால் பெண்களின் மனங்களிலும் அதே எண்ணம் தோன்றியுள்ளது. இலங்கையை பொறுத்தவரை ஆண் ஆதிக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த குறைபாடுகள் தீர்க்கப்படும் பட்சத்தில் பெண்களும் முன்நோக்கி வர முடியும்” என யசோதா ராஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

Web Design by The Design Lanka