அரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் » Sri Lanka Muslim

அரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம்

IMG_20190819_084217

Contributors
author image

Editorial Team

அரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் தனது ஆட்சிக்காலமேயாகுமென்று ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டின் 62 இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் அப்போதைய ஆட்சிக்கெதிராக வாக்களித்தது இந்த சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமேயாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நேற்று (18) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யார் அபேட்சகராக போட்டியிட்டாலும் அவர் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மக்களுக்கு உறுதிமொழி வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.
முழு சமூகத்தையுமே அழிவுக்குள்ளாக்கிவரும் போதைப்பொருள் கடத்தலை ஒழித்துக்  கட்டுவது காலத்தின் முக்கிய தேவையாகுமென்றும் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தலுக்கு எத்தகைய அரசியல் அனுசரணையும் வழங்கப்படக் கூடாதெனத் தெரிவித்தார்.
எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து விடயங்களையும் மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவர்களது கொள்கையாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார மற்றும் அரசியல் முறைமையொன்றைப் போன்றே எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காத வெளிநாட்டுக் கொள்கையொன்றும் நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவதும் அவர்களது அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.
இன்று சுதந்திரமாக பேசுவதற்கு மட்டுமன்றி விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களைக்கூட முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதென்றும் இதற்கு முன்னர் இருந்த தலைவர்களுக்கு அத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்குமானால் அவர்கள் பாரதூரமான நிலைமைகளுக்கே முகங்கொடுத்திருக்க வேண்டி இருந்திருக்குமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யார் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும், கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தியது மட்டுமன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தடையாக இருந்த இலஞ்சம், ஊழல், மோசடிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வதேச சக்திகளின் காரணமாக பாதிக்கப்பட்டு சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் ஏற்பட்ட பயங்கரவாத நிலைமைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
‘செமட்ட செவன’ (அனைவருக்கும் நிழல்) தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திம்புலாகல, சொறிவில, கொடறாகலகம பிரதேசத்திலும் திசாலகம மற்றும் திம்புலாகல, தழுகான பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 03 புதிய கிராமங்களை ஜனாதிபதி இன்று மக்களிடம் கையளித்தார்.
ஆதிவாசிகள் தினத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இந்த ஆதிவாசிகளின் புதிய தலைமுறை வீட்டு பயனாளிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சொறிவிலஇ கொடறாகலகம முன்மாதிரி கிராமம் 16 புதிய வீடுகளைக் கொண்டுள்ளது.
அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வந்த கொடறாகலகம கிராமவாசிகளுக்கு ‘செமட்ட செவன’ (அனைவருக்கும் நிழல்) தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் பங்களிப்பில் இரண்டு வருட குறுகிய காலப் பகுதியில் நவீன வீட்டு வசதிகளுடன்கூடிய முன்மாதிரி கிராமம் கிடைக்கப்பெற்றுள்ளது.
தழுகான, ஜீவஹத்தகம புதிய கிராமம் 27 வீடுகளை கொண்டுள்ளது. அதனை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திசாலகம 23 புதிய வீடுகளைக் கொண்டுள்ளது.
வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி  அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளுக்கான திறப்புகளை வழங்கினார்.
அமைச்சர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் வசந்த சேனானாயக்க ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பிரதேச மக்களும் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை சிறிபுர, ரத்மல்கண்டிய ஸ்ரீ ,சிபத்தனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சைத்தியவிற்கான அடிக்கல் நடும் புண்ணிய நிகழ்வும் ஜனாதிபதி  தலைமையில் இடம்பெற்றது.

விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, முதலில் சமய கிரியைகளில் ஈடுபட்டதுடன், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சைத்தியவிற்கான நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.“சசுனட அருன” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 25 இலட்சம் ரூபா செலவில் இந்த சைத்திய நிர்மாணிக்கப்படவுள்ளது.

சியம் மகா நிக்காயவின் மல்வத்து பீடத்தின் மகாவலி சீ வலய சங்க நாயக்க தேரர் சங்கைக்குரிய மாம்பிட சந்தவிமல தேரர், ரத்மல்கண்டிய ஸ்ரீ இசிபத்தனாராம விகாராதிபதி சங்கைக்குரிய கிரிமொனாகம ஆரியவங்ச நாயக்க தேரர் உள்ளிட்ட பிரதேச மகாசங்கத்தினரும் அமைச்சர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் வசந்த சேனானாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொலன்னே ஆகியோர் உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும், பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Web Design by The Design Lanka