இலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல் » Sri Lanka Muslim

இலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் – ஓர் அலசல்

vote5.jpg8_

Contributors
author image

BBC

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ள நிலையில், இலங்கை முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை செலுத்த முடியும், முஸ்லிம் வேட்பாளர் களம் இறங்கினால் அதன் சாதக பாதகங்கள் என்ன எனும் கண்ணோட்டத்தை அளிக்கிறது இந்தக் கட்டுரை.

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக சிவில் அமைப்புக்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாகவும், இதில் சாதகமான தீர்மானம் எட்டப்படும்போது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக உள்ளதாகவும் பிபிசி தமிழிடம் ஹிஸ்புல்லா கூறினார்.

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுபடியானவற்றில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற வேண்டும். ஆனால், இரண்டுக்கு மேற்பட்ட முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது, எந்தவொரு வேட்பாளராலும் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற முடியாமல் போகும்,” என்று அவர் கூறினார்.

இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா
Image captionமுஸ்லிம்கள் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அறிவிப்பு

“அப்போது முதல் இரண்டு வேட்பாளர்களைத் தவிர்த்து, ஏனைய வேட்பாளர்களின் வாக்குச்சீட்டில் வழங்கப்பட்டுள்ள இரண்டாவது விருப்பு வாக்குகளின் அடிப்படையில்தான் குறித்த தேர்தலின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்” என்று தெரிவித்த ஹிஸ்புல்லா, “எனவேதான் முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்றும், “முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. அந்த முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிப்போர் இரண்டாவது விருப்பு வாக்காக, எந்த பிரதான வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் தீர்மானிக்க முடியும்” என்றும் பிபிசி தமிழிடம் ஹிஸ்புல்லா விவரித்தார்.

இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது, பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேச முடியும் என்றும், தமது கோரிக்கைகளுக்கு இணங்கும் பிரதான வேட்பாளருக்கு, முஸ்லிம்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைAFP
Image captionலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ

“ஜனாதிபதி வேட்பாளராக தற்போது கோட்டாபய ராஜபக்ஷ, அனுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார்.

“இலங்கையில் முஸ்லிம்களின் வாக்குகள் கிட்டத்தட்ட 16 லட்சமாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 12 லட்சம் முஸ்லிம்கள் வாக்களித்திருந்தனர். அவற்றில் 11 லட்சம் முஸ்லிம் வாக்குகள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்தன. அப்படியிருந்தும், கடந்த நாலரை வருடங்களில் முஸ்லிம் சமூகம் எந்தவொரு நன்மையையும் அவரால் அடையவில்லை. ஜின்தோட்டம் தொடங்கி மினுவாங்கொட வரை முஸ்லிம்களின் சொத்துக்கள் தீப்பற்றி எரிந்தன. வில்பத்து முதல் நுரைச்சோலை வரை முஸ்லிம்களின் காணிப் பிரச்சனைகள் தீவிரமடைந்தன. இவை தொடர்பில் எந்தத் தீர்வுகளும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை,” என்று ஹிஸ்புல்லா கூறினார்.

“மைத்திரிபால சிறிசேனவுக்கு லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வாக்களித்த போதும், அவர் எந்தவொரு இடத்திலும் தனக்கு முஸ்லிம்கள் வாக்களித்ததாக சொன்னதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தனது வெற்றிக்குக் காரணம் என்றே அவர் பல தடவை கூறியுள்ளார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அநுர குமார திஸாநாயக்க
Image captionதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க

“எனவே, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் நேரடியாக வாக்களிக்கும்போது, அவற்றுக்குப் பெறுமானம் இல்லாமல் போய்விடும். ஆகவேதான், முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் களமிறங்கி அவர் ஊடாக பிரதான வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கை பெற்றுக் கொடுக்கலாம். இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர் களமிறங்கும்போது, அவருக்காக முஸ்லிம்களின் 25 வீதமான வாக்குகள் மட்டும் கிடைத்தால் போதுமானது. அதனூடாக ஆகக்குறைந்தது இரண்டரை லட்சம் இரண்டாவது விருப்பு வாக்குகளை பிரதான வேட்பாளருக்கு பெற்றுக் கொடுக்க முடியும்,” என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம் வேட்பாளர்களும்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளைத் தெரிவு செய்வதற்காக இதுவரை ஏழு தேர்தல்கள் நடந்துள்ளன. 1982, 1988, 1994, 1999, 2005, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அந்தத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் 1999, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்களில் முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிட்டிருந்தனர்.

அந்த வகையில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சி சார்பில் அப்துல் ரசூல் என்பவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முகம்மட் காசிம் முகம்மட் இஸ்மாயில், ஐதுருஸ் முகம்மட் இல்லியாஸ் மற்றும் முகம்மட் முஸ்தபா ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐதுருஸ் முகம்மட் இல்லியாஸ் மற்றும் இப்றாகிம் மிப்லார் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

என்ன நன்மை கிடைத்துவிடும்?

முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமாகிய பஷீர் சேகுதாவூத்
Image captionமுன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமாகிய பஷீர் சேகுதாவூத்

இவ்வாறான பின்னணியில், முஸ்லிம் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலுள்ள சாதக, பாதகங்கள் என்ன என்பது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமாகிய பஷீர் சேகுதாவூத் இடம் பிபிசி தமிழ் பேசியது.

“ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் இன அடையாளத்தை முன்னிலைப்படுத்தி போட்டியிடுவதில் எந்தவிதமான நன்மையும் இல்லை” என்று கூறிய பஷீர் சேகுதாவூத், “அவ்வாறு போட்டியிடுவதன் மூலம், சிங்களவர்கள் – முஸ்லிம்களுக்கு மத்தியில் விரோதமும் குரோததுமே வளரும்” என்று சுட்டிக்காட்டினார்.

எனவே, முஸ்லிம்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பில் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அவற்றுக்குத் தீர்வினைப் பெற்றுத்தர உடன்படும் ஒருவருக்கு முஸ்லிம்கள் தமது ஆதரவை வழங்குவதே நல்லதாகும் எனவும் பஷீர் மேலும் தெரிவித்தார்.

சட்ட முதுமாணியும், அரசியல் விமர்சகருமான வை.எல்.எஸ். ஹமீட் இது தொடர்பில் பிபிசி தமிழிடம் கருத்து தெரிவிக்கையில், “முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்றால் அதற்கான நோக்கங்கள் மற்றும் இலக்குகள் அடையாளம் காணப்படல் வேண்டும்” என்றார்.

சட்ட முதுமாணியும், அரசியல் விமர்சகருமான வை.எல்.எஸ். ஹமீட்
Image captionசட்ட முதுமாணியும், அரசியல் விமர்சகருமான வை.எல்.எஸ். ஹமீட்

“உதாரணமாக இவ்வாறு போட்டியிடுவதன் மூலம் சர்வதேசத்துக்கு ஏதாவது செய்தி சொல்லப் போகிறோமா? அவ்வாறென்றால் அவை என்ன? அவ்வாறு போட்டியிடுவதன் மூலம் – அந்தச் செய்தி எவ்வாறு சொல்லப்படும்? அதனால், முஸ்லிம் சமூகம் அடையக் கூடிய நன்மைகள் என்ன? என்பவை போன்ற விடயங்களை கவனத்தில் எடுத்து, ஒற்றுமையாக செயற்பட முடியுமென்றால், முஸ்லிம்கள் தனித்துப் போட்டியிடுவதில் தவறில்லை” என்று ஹமீட் கூறினார்.

“மேலும், முஸ்லிம்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை ஒட்டுமொத்தமாக ஒரு பிரதான வேட்பாளருக்கு நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதன் மூலம் காத்திரமான அடைவுகளை எதிர்பார்க்கிறோமா? அவ்வாறாயின் அந்நிபந்தனைகளை அடையாளம் கண்டிருக்கின்றோமா? அவை எவை? என்றும் யோசிக்க வேண்டும்” என்றார் அவர்.

“அதேவேளை, இவ்வாறான ஒரு பெரிய இலக்கை நோக்கிய பயணத்தை முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒரு சில தனி நபர்கள், தனிக் கட்சிகள் செய்து விடமுடியுமா? என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது” எனவும் வை.எல்.எஸ். ஹமீட் கூறினார்.

“இவை எதுவுமில்லாமல், கடந்த காலங்களில் முழுக்க முழுக்க தன்னை மையப்படுத்தி அரசியல் செய்தவர்களும், பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகள், முஸ்லிம் சமூத்துக்கு எதிராக காட்டுத் தர்பார் நடத்தியபோது அவற்றினைக் கண்டும் காணாமல் அதிகாரத் தலைமைத்துவத்துக்குப் பின்னால் அலைந்து திரிந்தவர்களும், தனது அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமூகம் சார்பில் போட்டியிடப் போகிறேன், அதன் மூலம் பேரம் பேசப் போகிறேன் என்று சமூகத்தின் ஒரு பகுதி வாக்குகளைப் பிரிக்க முற்படுவது, முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் பெரிய துரோகமாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் தனித்துப்போட்டியிட்டால், பெரும்பான்மை சமூகத்திடமிருந்து முஸ்லிம்கள் இன்னும் தூரமாகி விடுவார்கள் என்றவொரு கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். அது தவறாகும். முஸ்லிம்கள் இணக்கமாக போவதென்பது வேறு; ஒரேயடியாக அடங்கி அடிமைகளாக மாறுவதென்பது வேறு” என்றும் சட்ட முதுமாணி ஹமீட் மேலும் தெரிவித்தார்

 

Web Design by The Design Lanka